திங்கள், 28 மார்ச், 2022

பேருந்து மோதி இறந்த மாணவனின் உடலை பெற்றுக்கொண்டனர்! சென்னையில் பள்ளி..

 மின்னம்பலம் : சென்னையில் பள்ளி பேருந்து மோதி மாணவன் உயிரிழந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவனின் பெற்றோருக்கு உறுதியளித்துள்ளார்.
சென்னை விருகம்பாக்கம் இளங்கோவன் நகரை சேர்ந்தவர் வெற்றிவேல். இவர் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜெனிபர். இவரும் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களின் மகன் தீக்சித்(7) என்பவர் வளசரவாக்கம் அருகே உள்ள ஆழ்வார் திருநகர் பகுதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் படித்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை பள்ளி வளாகத்தில் பள்ளி வேன் மோதி தீக்சித் உயிரிழந்தார். இதையடுத்து மாவட்ட கல்வி அதிகாரி மார்க்ஸ், அம்பத்தூர் வருவாய்த் துறை அதிகாரி இளங்கோ, காவல் துணை ஆணையர் மீனா உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.



இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி வேன் ஓட்டுநர், பள்ளி தாளாளர் ஜெய சுபாஷ், முதல்வர் தனலட்சுமி மற்றும் வேனில் இருந்து குழந்தைகளை இறக்கிவிடும் ஊழியர் ஞானசக்தி ஆகிய நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஏற்கனவே ஓட்டுநர் பூங்காவனம் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது பள்ளி ஊழியர் ஞானசக்தி என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் முதன்மை கல்வி அலுவலர் வாயிலாக தொலைபேசி மூலம் உயிரிழந்த மாணவனின் தாயார் ஜெனிபரிடம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசினார். குழந்தையை இழந்து தவிக்கும் அவருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர், இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

மாணவனின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டு வருகிற நிலையில், மாணவனின் உடலை வாங்க பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மாணவனின் தாயார் ஜெனிபர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் தனது ஒரே மகனை பறிகொடுத்துள்ளேன். பள்ளி நிர்வாகிகளை கைது செய்தால்தான் உடலை வாங்குவோம். மருத்துவமனைக்கு சென்று குழந்தையைப் பார்க்கையில் வாய், மூக்கு, உடல் முழுக்க ரத்தமாக இருந்தது. என்ன நடந்தது என்று பள்ளி தரப்பில் இதுவரை ஒருவர் கூட சொல்லவில்லை. வேனில் உணவு கூடையை விட்டு சென்றதாகவும், அதை எடுக்க செல்லும்போது தவறி விழுந்ததாகவும் தெரிவிக்கின்றனர். ஆனால் என் குழந்தையின் வயிற்றில் பள்ளி வாகனம் ஏறி இறங்கி உள்ளது. அதனால், பள்ளி நிர்வாகிகளை கைது செய்தால்தான் உடலை வாங்குவோம்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “நான் கிறிஸ்டியன். எனது கணவர் இந்து. என் பையன் இரண்டு மதத்தையும் விரும்புவான். ஆனால் ஜீசஸை அவனுக்கு ரொம்ப பிடிக்கும். அதனால், உடலை அவனுக்கு பிடித்தப்படி புதைக்கலாம் என்பதற்காக அருகிலுள்ள ஆர்.சி சபைக்கு போன் போட்டு கேட்டேன். அதற்கு நீங்கள் சந்தா கட்ட வேண்டும். அதனால் குழந்தையை புதைக்க இங்கே இடம் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டார்கள். இதையடுத்து, சிஎஸ்ஐ சபையிடம் அணுகியபோது, நீங்கள் சிஎஸ்ஐ என்பதை உறுதி செய்ய மதுரையில் இருந்து சான்றிதழ் வாங்கி வந்தால், புதைக்க இடம் தருகிறோம் என்கின்றனர். இப்படி சொல்ல உங்களுக்கு எல்லாம் அசிங்கமா இல்லையா. நானும் கிறிஸ்டியன்தான், ஒரு குழந்தையை புதைக்க இடம் கொடுக்க முடியாத நீங்கள் எல்லாம் எதற்கு கிறிஸ்டியன் என்று சொல்லவேண்டும்” என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இதற்கிடையே இந்த விபத்து தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர், மெட்ரிக் பள்ளிகளின் இயக்குனர் கருப்பசாமி, தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவொளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பள்ளி வாகனங்களின் இயக்கத்தை ஏற்கனவே உள்ள நடைமுறைகளின் படி கண்காணித்தல் தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

-வினிதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக