ஞாயிறு, 27 மார்ச், 2022

மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்குக்கு ஓராண்டு சிறை: முன்னாள் மத்தியப்பிரதேச முதல்வர்

Digvijay Singh to meet Congress MLAs and Ministers in Jaipur on Oct 1

BBC : முன்னாள் மத்தியப் பிரதேச முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான திக்விஜய் சிங்குக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து இந்தூர் மாவட்ட நீதிமன்றம் சனிக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
உஜ்ஜயினி தாக்குதல் வழக்கு என்று அறியப்படும் இந்த வழக்கில் திக்விஜய் சிங், முன்னாள் எம்.பி. பிரேம்சந்த் குட்டு உட்பட 6 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் பின்னணி என்ன?
2011ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி நடந்த ஓர் அரசியல் சம்பவம்தான் இப்போது முன்னாள் முதல்வர் ஒருவருக்கு சிறைத் தண்டனையை பெற்றுத் தந்துள்ளது.
அன்றைய தினத்தில் திக்விஜய் சிங் உஜ்ஜையினியில் உள்ள ஓட்டல் ஒன்றின் திறப்பு விழாவுக்குச் சென்றிருந்தார். அவருக்கு பாரதீய ஜனதா யுவ மோர்ச்சா தொண்டர்கள் அவரது வாகனத் தொடருக்கு முன்பாக கருப்புக் கொடி காட்டினார்கள்

அதையடுத்து திக்விஜய் சிங்கின் ஆதரவாளர்களுக்கும் பாரதீய ஜனதா யுவ மோர்ச்சா தொண்டர்களுக்கும் இடையில் சண்டை ஏற்பட்டது.
இதையடுத்து காங்கிரஸ் தலைவர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.
முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட பிறகு, திக்விஜய் சிங், பிரேம்சந்த் குட்டு, ஹேமந்த் சௌகான், திலீப் சௌதாரி ஆகிய நான்கு காங்கிரஸ் தலைவர்களை இந்த வழக்கில் சேர்க்கவேண்டும் என்று மாநில அரசு சார்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா தொண்டர் ஒருவரை அறைந்ததாக திக் விஜய் சிங் மீது குற்றம் சாட்டப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக