நக்கீரன் -சுந்தர பாண்டியன் : கடலூர் மாவட்டம் விருத்தாசலம் எருமனூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள தனியார் பள்ளியில், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு உயிரியல் கற்பிக்கும் ஆசிரியராக சாமிநாதன் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் தான் பணிபுரியும் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு, இரட்டை அர்த்தங்கள் கூடிய குறுஞ்செய்திகளை தொலைபேசி வாயிலாக அனுப்புவதுடன், பள்ளியில் பயிலும் மாணவிகள் மீது பாலியல் சீண்டலும் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
தொடர்ச்சியாக இதுபோல் செய்து வந்ததில், பதினொன்றாம் வகுப்பு படிக்கின்ற மாணவி ஒருவர், கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். ஒரு கட்டத்தில் தனியார் பள்ளி ஆசிரியர் சாமிநாதன், மாணவியிடம் அத்துமீறவே, கடும் மன உளைச்சலில் மாணவி, பள்ளிக் கட்டடத்தின் முதல் மாடியிலிருந்து கீழே குதித்து, தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார். இதனைப் பார்த்த சக மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மாணவியை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை அளித்தனர்.
இதுகுறித்து விருத்தாசலம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவி தனக்கு நேர்ந்த அனைத்து கொடுமைகளையும் காவல்துறையினரிடம் வாக்குமூலமாக அளித்துள்ளார். மாணவி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், உடனடியாக விரைந்து செயல்பட்ட விருத்தாசலம் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர் சாமிநாதனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, கைது செய்து சிறையில் அடைத்தனர். பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த ஆசிரியரின் செயலால் விருத்தாசலம் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக