சனி, 19 மார்ச், 2022

நண்பனுக்கு பணம் கொடுத்து தந்தையை கொலை செய்த மகன்.. மட்டக்களப்பு

நண்பனுக்கு பணம் கொடுத்து தந்தையை கொலை செய்த மகன்!

tamil.adaderana.lk :  மட்டக்களப்பு கரடியனாற்று பிரதேசத்தில் தனது தந்தையை கொலை செய்ய 50 ஆயிரம் ரூபா பணம் கொடுத்து கூலிக்கு ஆள் வைத்து கொலை செய்த 22 வயதுடைய மகன் உட்பட இருவரை நேற்று (17) கைது செய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (13) கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள ஈரலக்குளம் குடாவெட்டி வயல் பகுதியில் வேளான்மை காவலுக்காக அமைக்கப்பட்ட கொட்டகை ஒன்றில் இருந்து வெட்டுகாயங்களுடன் விவசாயியான 54 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான பரசுராமன் ஆறுமுகம் என்பவர் சடலமாக மீட்கப்பட்டார்.

3 பெண் பிள்ளைகள் 22 வயதுடைய ஒரு ஆண் பிள்ளையுமாக 4 பிள்ளைகளின் தந்தையான இவர் விவசாயம் மேற்கொண்டு வருகின்றார்.
இந்த நிலையில் 22 வயதுடைய மகன் மதுபாவனைக்கு அடிமையாகியுள்ளதனால் மதுபானம் வாங்க தந்தையிடம் பணம் கேட்பது மற்றும் மாட்டுப்பட்டியிலுள்ள மாடுகளை திருடி விற்பது போன்ற நடவடிக்கையால் தந்தைக்கும் மகனுக்கும் இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனையடுத்து சிந்துஜன் தனது தந்தையை கொலை செய்ய திட்டமிட்டு கிரான் பகுதியைச் சேர்ந்த தனது நண்பனான இட்ணராஜா நிரோசன் என்பனை கடந்த முதலாம் திகதி (1-3-2022) சந்தித்து தனது தந்தையை கொலை செய்ய 50 ஆயிரம் ரூபா பணம் தருவதாக பேரம் பேசியுள்ளான்.

இதனைத் தொடர்ந்து அவனிடம் தொலைபேசியில் பலமுறை தொடர்பு கொண்டு தந்தையை கொலை செய்வது தொடர்பில் பேசி வந்துள்ளான்.

இந்நிலையில் கடந்த 12 ஆம் திகதி பரசுராமன் வழமைபோன்று வேளாண்மை காவலுக்காக வயலில் உள்ள கொட்டகைக்கு தனிமையில் சென்று காவலில் ஈடுபட்டுள்ளார்.

பரசுராமன் தனிமையில் சென்றிருப்பதை அறிந்த கூலிக்கு கொலை செய்ய அமர்த்தப்பட்ட இட்ணராஜா நிரோசன் அந்த கொட்டகைக்கு சென்றுள்ளார். மகனின் நண்பனான நிரோசனை கண்ட பரசுராமன் அவனுடன் பேசிக் கொண்டு அவனுக்கும் இரவு உணவை கொடுத்து இருவரும் சேர்ந்து உணவு உண்டுள்ளனர்.

இதனையடுத்து இருவரும் உறங்கியுள்ள நிலையில் அதிகாலை 3.30 மணியளவில் கொலை செய்ய சென்றவன் கண்விழித்து பார்த்த போது பரசுராமன் ஆழ்ந்த நித்திரையில் இருப்பதை கண்டு அங்கிருந்த கல் ஒன்றை எடுத்து அவரின் தலையில் போட்ட போது அவர் உயிரிழக்காததையடுத்து அவன் கொண்டு சென்ற கத்தியால் கழுத்தை வெட்டியுள்ளான். அப்போதும் அவருக்கு உயிர் போகவில்லை.

அதனைத் தொடர்ந்து தனது இடுப்பிலுள்ள நாடா ஒன்றை எடுத்து அவரின் கழுத்தை சுற்றி இழுத்து நெரித்து அவரை கொலை செய்துள்ளான்.

பின்னர் அங்கிருந்து தப்பி அதிகாலை 4 மணியவில் தனது நண்பனுக்கு கையடக்க தொலைபேசி ஊடாக அழைப்பை ஏற்படுத்தி நீ சொன்ன மாதிரி உனது அப்பாவை கொலை செய்துள்ளதாக தெரிவித்து விட்டு வீட்டுக்குச் சென்றுள்ளான்.

எனவே பேரம் பேசியவாறு பணத்தை கொடுப்பதற்காக தனது நண்பனை தேடி கடந்த 14ம் திகதி கிரான் பகுதிக்கு சென்று நகை ஒன்றை ஈடு வைத்து 50 ஆயிரம் ரூபா பணத்தை நண்பனிடம் வழங்கியுள்ளான்.

பேரம் பேசிய பணத்தை பெற்ற நிரோசன் அங்கு ஏற்கனவே நகைகடை ஒன்றில் 23 ஆயிரம் ரூபாவுக்கு ஈடுவைத்த நகையை ஈட்டில் இருந்து மீட்டுக் கொண்டு அங்கிருந்து இருவரும் பிரிந்து சென்றுள்ளதாக கைது செய்யப்பட்ட இருவரிடம் பொலிசார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் நாடா, கல் என்பவற்றை மீட்டுள்ளதாகவும் இந்த கொலை தொடர்பாக முதலில் கொலை செய்யப்பட்டவரின் மகiனை கைது செய்து மேற்கொண்ட விசாரணையில் கொலையாளியை கைது செய்துள்ளதாகவும் இருவரையும் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு மற்றும் கரடியனாறு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

-மட்டக்களப்பு நிருபர் சரவணன்-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக