ஞாயிறு, 13 மார்ச், 2022

எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பு: முதல்வர் ஸ்டாலின் டெல்லி திட்டம்!

 மின்னம்பலம் : நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பற்றி தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் உடனடியாக எந்த கருத்தும் வெளியிடாதது குறித்து அரசியல் அரங்கில் விவாதங்கள் எழுந்துள்ளன.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெற்ற படுதோல்வி, பஞ்சாபில் ஆட்சியைப் பறிகொடுத்தது என இந்த தேர்தல் முடிவுகள் காங்கிரஸுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தி இருக்கும் நிலையில்... தேசிய அளவில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணியை முன்னிலைப்படுத்தி வந்த ஸ்டாலின் இனி என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வியும் அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.


காங்கிரஸ் தோல்வி ஸ்டாலின் மௌனம் பின்னணி என்ற தலைப்பில் மார்ச் 12ஆம் தேதி மின்னம்பலத்தில் டிஜிட்டல் திண்ணை பகுதியில் வெளியிட்டிருந்தோம். அதில், "திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் முடிவுகள் குறித்து மேலும் பல விவரங்களை கேட்டு ஆய்வு செய்து கொண்டு இருக்கிறார் என்கிறார்கள் திமுக வட்டாரத்தில்" என்று குறிப்பிட்டிருந்தோம்.

இந்த நிலையில் திமுக தனது அடுத்த கட்ட நகர்வை எப்படி தேசிய அரசியலில் நிகழ்த்தப் போகிறது என்ற கேள்விக்கு டெல்லியில் இருந்து விடை கிடைத்துள்ளது.

"டெல்லியில் திமுகவின் கட்சி அலுவலகம் கட்டும் பணி கிட்டத்தட்ட நடந்து முடிந்துவிட்டது. வரும் ஏப்ரல் 2ஆம் தேதி திமுக கட்சி அலுவலக திறப்பு விழா டெல்லியில் நடைபெறுகிறது. விழாவில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

இந்தச் சூழ்நிலையில்தான் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளிவந்தன. குறிப்பாக உத்தரப்பிரதேச தேர்தல் முடிவுகள் பற்றி ஆராயும்போது பல தொகுதிகளில் வெற்றி வித்தியாச எண்ணிக்கை குறைவாக இருப்பதும் பாஜக 2017 தேர்தலைவிட இப்போது கடுமையான சவால்களைச் சந்தித்து இருப்பதும் தெரிகிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் உடனான தனது உறுதியான நிலைப்பாட்டை தொடர முடிவு செய்துள்ள ஸ்டாலின்... அதேநேரம் இந்தியா முழுவதும் உள்ள மாநிலக் கட்சிகளையும் ஒருங்கிணைக்க நினைக்கிறார்.

ஏப்ரல் 2ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் திமுக கட்சி அலுவலக விழாவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அழைக்க முடிவு செய்துள்ளார் ஸ்டாலின். அவரோடு ஏற்கனவே சென்னையில் தனது புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட உமர் அப்துல்லா, தேஜஸ்வி யாதவ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களையும் அழைக்க திட்டமிட்டுள்ளார். சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார், திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்காள மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி ஆகியோரையும் இந்த விழாவுக்கு அழைக்க முடிவு செய்துள்ளார் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின்.

"தேர்தல் முடிவுகள் பற்றி ஸ்டாலின் கருத்து சொல்லவில்லையே என்ற கேள்விக்கு... இந்த விழா மூலம் பதிலை செயல் மூலமாகவே சொல்ல போகிறார் ஸ்டாலின்" என்கிறார்கள் திமுக வட்டாரத்தில்.

வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக