பெரியார் ஊன்றிய திராவிட விதை!இந்த ஆண்டுதான் கொழும்பில் இலங்கை சுயமரியாதை இயக்கம் உருவானது தந்தை பெரியார் மாஸ்க்கோ பயணத்தை முடித்து கொண்டு தமிழ்நாடு திரும்பும் வழியில் 17 ஆக்டொபர் 1932 இல் இலங்கை வந்து பிரசாரங்களை மேற்கொண்டிருந்தார்
தந்தை பெரியாரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட மக்கள் பெருமளவில் இலங்கை சுயமரியாதை இயக்க செயல்பாடுகளிலும் தங்களை ஈடுபடுத்தி கொள்ளலாயினர்
குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து வரும் குடியரசு விடுதலை நாத்தீகம் போன்ற பல திராவிட இதழ்களும் மக்களிடையே பெரும் வரவேற்பை கொண்டிருந்தன.
கடுமையான பணிச்சுமைகளில் இருந்த தோழர்கள் பெரும்பாலும் இரவு நேரங்களில் சிறு சிறு இடங்களில் கூடி பெரியாரின் கருத்துக்களை கலந்துரையாடல்கள் மூலம் பரிமாறிக்கொள்வது அன்றாட நிகழ்வானது
பல பகுத்தறிவு பிரசார நடவடிக்கைகளும் போராட்டங்களும் நடைபெற்றுக்கொண்டிருந்தன.
பல சம்பவங்கள் இருந்தாலும் சுருக்கம் கருதி ஒரு சம்பவத்தை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்
1940 இல் சென்னை ராஜதானியின் முதலமைச்சராக இருந்த ராஜகோபாலச்சாரி அவர்களை இலங்கைக்கு வருகை தந்தார்
கொழும்பு நகரசபை மண்டபத்தில் இவருக்கு ஒரு வரவேற்பு கூட்டத்தை கொழும்பு வாழ் இந்தியர்களின் அமைப்பு சார்பில் ஒரு ஏற்பாடு செய்திருந்தார்கள்.
இந்த கூட்டத்தை பகிஸ்கரிக்கும் முகமாகக் சுமார் 500 திராவிட இயக்க தோழர்கள் தோழர் இளஞ்செழியனின் தலைமையில் கூடி கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்ட பதாகைகளை ஏந்தியவண்ணம் மண்டபத்தின் முன்பாக கோஷங்களை முழக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதுமட்டுமல்லாமல் ராஜகோபாலாச்சாரியின் கையிலேயே ஒரு கருப்புக்கொடியையும் கொடுத்தனர்
அதை வாங்கிக்கொண்ட அவர் தமிழ்நாட்டில் இதுபோன்ற பல கருப்புக்கொடிகளை நான் பார்த்திருக்கிறேன் இது எனக்கொன்றும் புதிதல்ல என்று கூறிக்கொண்டு சென்றுவிட்டார்.
மேலும் மலையகம் மட்டக்களப்பு திருகோணமலை யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளுக்கும் தங்கள் இயக்க நடவடிக்கைகளை விரிவாக்கம் செய்தனர்.
அது மட்டுமல்லாமல் அந்த பகுதிகளில் இருந்த பகுத்தறிவு மன்றம் இலங்கை மறுமலர்ச்சி இயக்கம் இலங்கை பகுத்தறிவு வாலிபர் சங்கம் போன்ற அமைப்புக்களோடும் தொடர்புகளை ஏற்படுத்தி திராவிட கருத்தியலை பரப்புரை செய்தனர்.
14 ஜூலை 1945 இல் இலங்கை சுயமரியாதை இயக்கம் என்ற பெயரில் இயங்கிய திராவிட தோழர்கள் பின்பு இலங்கை நீதிக்கட்சி என்று பெயர் மாற்றம் செய்தனர்
பின்பு சில மாத இடைவெளியிலேயே இலங்கை நீதிக்கட்சி என்ற பெயரை திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் செய்தனர்
இந்த காலக்கட்டங்களில் இலங்கை பூர்வீக தமிழரின் அரசியல் என்பது பெரும்பாலும் வீடுகளில் ஆங்கிலம் பேசிக்கொண்டிருந்த அசல் ஆங்கில தமிழர்களால்தான் வழிநடத்தப்பட்டது
இலங்கை தமிழர்களின் அரசியல் கட்சியாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியே இருந்தது
திரு ஜி ஜி பொன்னம்பலம் . ஜான் ஜெபரட்ணம் ஹேன்ஸ்மேன் நாகநாதன் . சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் போன்ற அசல் எலீட்டுக்கள்தான் தமிழ் அரசியலின் தலைவிதியை தீர்மானித்து கொண்டிருந்தனர்
மறுபுறத்தில் தமிழ் மக்கள் மத்தியில் தமிழில் பேசி தமிழர்களின் பேசுபொருளாக இயங்கி கொண்டிருந்தனர் திராவிட இயக்க தோழர்கள்
தமிழ்நாட்டில் இருந்து வரும் இதழ்களும் திராவிட பேச்சாளர்களும் தமிழர்களின் அரசியல் மேடைகளையும் சிறு சிறு சமூக கூட்டங்களின் கலந்துரையாடல்களையும் நிறைத்து கொண்டிருந்தார்கள்
இவர்களின் கருத்துக்களால் பேச்சுக்களிலும் கவரப்பட்ட இளந்தலை முறையினர் பெருகலாயினர்
இந்த இளைஞர் கூட்டத்தில் திரு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் திரு செல்லையா ராசதுரை . திரு சு. வித்தியானந்தன் திரு எஸ் டி சிவநாயகம் திரு பத்மநாதன் . போன்ற இளைஞர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டிருந்தனர்
மேற்கூறிய இளைஞர் பட்டாளம் மட்டுமல்ல எஸ் ஜெ வி செல்வநாயகம் திரு நாகநாதன் திரு மு. திருச்செல்வம் வன்னியசிங்கம் போன்ற தமிழ் அரசியல் தலைவர்களையும் திராவிட கருத்தியல் கூட்டங்கள் ஈர்த்தன
அது மட்டுமல்லால் மறுபுறத்தில் சிங்கள மக்களை திரட்டுவதில் பெருவெற்றி பெற்று கொண்டிருந்தன பௌத்த பீடங்களும் அதை ஒட்டிய அரசியல் தலைமைகளும்
தமிழ் தலைமைகளோ மறுபுறத்தில் தமிழே சரியாக தெரியாத ஒரு மேட்டு ஆங்கில குடியாகவே இருந்தது
தங்களின் குறைபாடுகளை அழுத்தமாக உணர்ந்த இந்த ஆங்கில தமிழர்கள் தமிழ் மக்களை அணி திரட்டுவதில் திராவிட தோழர்கள் பெற்று கொண்டிருந்த வெற்றியால் கவரப்பட்டனர்.
கொழும்பிலும் மலையகத்தில் மட்டுமல்லாது நாட்டின் வேறு பகுதிகளிலும் திராவிட இயக்கத்தினரின் செயல்பாடுகளில் இலங்கை தமிழ் தலைவர்களும் பங்கு பற்றிய நிகழ்வுகள் இடம்பெற்றன.
திராவிட மேடை தமிழின் கருத்து செறிவும் தமிழின் செழுமையை பற்றிய அவர்களின் பேச்சுக்களும் அன்றைய தமிழர் அரசியலில் ஒரு புது இரத்தத்தை பாய்ச்சின என்றால் அது மிகை அல்ல
தமிழகத்தில் இருந்து அடிக்கடி வருகை தரும் திராவிட பேச்சாளர்களின் திராவிட மேடைத்தமிழை வெகு வேகமாகவே இலங்கை இளம் தலைமுறையினர் கற்றுக்கொண்டு நல்ல தரமான பேச்சாளர்களாக உருவாகினர்
குறிப்பாக திரு அமிர்தலிங்கம் திரு ராசதுரை திரு மாசுர் மௌலானா போன்ற இன்னும் பலர் இலங்கை தமிழ் அரசியல் கட்சிகளை தங்களின் அழகுதமிழால் செழுமையாக்கியது என்பது வரலாறு
31 ஜூலை 1948 இல் கொழும்பு மெயின் வீதியில் உள்ள 200 இலக்க மண்டபத்தில் இந்தி எதிர்ப்பு கூட்டங்களை ஒழுங்கு படுத்துவது பற்றிய ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது
இக்கூட்டத்தில் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இந்தி எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்கவேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு குழு உருவாக்கப்பட்டது
இக்குழுவின் தீர்மானத்திற்கு அமைய 22 ஆகஸ்ட் 1948 கொழும்பில் இந்தி எதிர்ப்பு மாநாடு நடத்துவது முடிவெடுக்கப்பட்டு செயல்கள் முடுக்கி விடப்பட்டன
இந்த குழுவிற்கு திரு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களை செயலாளராக நியமித்தனர்
ஆம் இலங்கை திராவிடர் கழகத்தின் இந்தி எதிர்ப்பு போராட்ட குழுவின் செயலாளர் பதவிதான் அமரர் திரு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் முதல் அரசியல் பொறுப்பாக அமைந்தது என்பது ஒரு பெருமைக்கு உரிய வரலாற்று சிறப்பாகும்
22 ஆகஸ்ட் 1948 ஆம் ஆண்டு கொழும்பு கொள்ளுப்பிட்டியில் திராவிட கழகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட இந்தி எதிர்ப்பு மாநாட்டிற்கு (பேராசிரியர் ) திரு சு. வித்தியானந்தன் தலைமை வகித்தார் அதில் எஸ் ஜெ வி செல்வநாயகம் அமிர்தலிங்கம் திரு ராசதுரை திரு மசூர் மவுலானா பேராசிரியர் கணபதிபிள்ளை . ஓ.கே முகையதீன் ( இஸ்லாம் சஞ்சிகை ஆசிரியர் ) திரு. தமிழ்மறை . கல்லிடை குறிச்சி பீர்முகம்மது, சு கா சுந்தரராஜன் , எஸ் கே மாயக்கிருஷ்னன் ஏ எம் அந்தோணி முத்து . எஸ் எம் சதாசிவம் . போன்றவர்கள் உட்பட ஏராளமான திராவிட இயக்க தோழர்களும் கலந்து கொண்டு உரையாற்றினார்
18 டிசம்பர் 1949 இல் இலங்கை தமிழரசு கட்சி தொடங்கப்பட்டது
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற செல்வநாயகம் வன்னியசிங்கம் நாகநாதன் போன்றவர்களால் தமிழரசு கட்சி தொடங்கப்பட்டது
இக்கட்சியின் பிரசார பீரங்கிகளாக அடையாளம் காணப்பட்டு கட்சியை ஆரம்பத்தில் இருந்தே வளர்ப்பதில் அரும்பணியாற்றிவர்கள் குறிப்பாக திராவிடர் கழகத்தின் வார்ப்புக்களாக இருக்கிறார்கள் என்பது இங்கே கவனிக்க வேண்டிய விடயமாகும்
இலங்கை தமிழர் அரசியலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றதில் திராவிட மேடைதமிழ் அரும் பணியாற்றியது என்பது வரலாறு
இக்கட்டுரையானது இலங்கை திராவிடர் இயக்கத்தின் வரலாறாகவோ இலங்கை திராவிட முன்னேற்ற கழகத்தின் வரலாறாகவோ எழுதப்படவில்லை
குறிப்பாக இலங்கை தமிழரசு கட்சியினதும் இலங்கை தமிழ் தேசியத்தினதும் ஆரம்ப கால நிகழ்வுகளை சற்று மீட்டி பார்க்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே எழுதப்படுகிறது
மேலும் வரலாற்றில் மறைக்கப்பட்ட பல சம்பவங்கள் இலங்கை தமிழ் மக்களின் அரசியலில் உண்டு
இவை பற்றி மேலும் வரும் நாட்களில் விரிவாக ஆராயலாம் - தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக