புதன், 23 மார்ச், 2022

மேற்கு வங்கத்தில் 7 பேர்கள் உயிரோடு எரித்து கொலை

 விகடன் : மேற்கு வங்கம்: உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட கிராம மக்கள்! - மாநில அரசிடம் விளக்கம் கேட்கும் உள்துறை
மேற்கு வங்கத்தில், சமீபத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் பாது ஷேக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடந்த அடுத்த நாளே பிர்பூம் கிராமத்தில் கலவரம் ஏற்பட்டு வீடுகள் எரிக்கப்பட்டன. ராம்பூரத் என்ற பகுதியில் நுழைந்த மர்மநபர்கள் அங்குள்ள 12 வீடுகளை வெளிப்புறமாக பூட்டி, வீடுகளுக்குள் எரிபொருளை ஊற்றி தீ வைத்தனர் எனச் சொல்லப்படுகிறது. இதனால் உள்ளே சிக்கிக்கொண்டவர்களால் வெளியில் வர முடியவில்லை. இந்த கொடூர சம்பவத்தில் 10 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். குறிப்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தீயில் சிக்கி பலியாகிவிட்டனர்.


ஒருபுறம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கொல்லப்பட்ட பாது ஷேக்கின் ஆதரவாளர்கள் தான் இதைச் செய்தனர் என்ற தகவலும் பரவி வந்தன. இந்த நிலையில் இந்த வன்முறை சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை கூறிவருகிறது. இந்த நிலையில், பா.ஜ.க-வைச் சேர்ந்த குழு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று நேரில் சந்தித்து, இந்த விவகாரத்தில் தலையிடுமாறு கோரிக்கை வைத்தனர்.
அதையடுத்து, இந்த கலவரம் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமென்று மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கு வங்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கர், ``இந்த சம்பவம் ஒரு பயங்கரமான வன்முறை மற்றும் தீவைக்கும் களியாட்டம். இது மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதைக் குறிக்கிறது" என கூறியிருந்தார்.

இதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ``தேவையற்ற அறிக்கைகளை வெளியிடுவதை ஆளுநர் தவிர்க்க வேண்டும்" என்று கடிதம் மூலம் கூறியிருந்தார். ஏற்கெனவே மேற்கு வங்கத்தில் மம்தாவுக்கு, ஆளுநர் ஜகதீப் தங்கருக்கும் கருத்து வேறுபாடு நிலவிவரும் நிலையில், தற்போது இந்த சம்பவத்தால் மேலும் பிரச்னைகள் வெடித்த வண்ணம் உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக