வியாழன், 17 மார்ச், 2022

சென்னையில் ரவுடி நீராவி முருகன் கொலை ..என்கவுண்டர் ..பெண் பித்தனாக 20 ஆண்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்தான்

மாலைமலர் : 46 வயதான நீராவி முருகன் மீது தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் ஆகிய 3 மாநிலங்களில் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. 2 முறை குண்டர் தடுப்பு சட்டத்திலும் போலீசார் அவனை சிறையில் அடைத்துள்ளனர்.
சென்னை மாநகரை 7 ஆண்டுகளுக்கு முன்பு கலங்கடித்த கொள்ளையன் இவன். தூத்துக்குடியை சேர்ந்த நீராவி முருகன் 20 ஆண்டுகளுக்கு முன்பு ‘ஒயின் சங்கர்’ என்கிற தூத்துக்குடி ரவுடியிடம் கையாளாக இருந்தவன்.
பின்னர் ஒயின் சங்கரையே குருவாக ஏற்றுக்கொண்டு ரவுடித் தொழிலில் கால் பதித்த நீராவி முருகன், கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈவு இரக்கம் பார்க்காமல் ஈடுபட்டு வந்தான்.
சென்னை துரைப்பாக்கம் பகுதியில் நடுரோட்டில் ஆசிரியை ஒருவரை கடந்த 2014-ம் ஆண்டு இவன் பெரிய பட்டாக்கத்தியை காட்டி மிரட்டி செயின் பறித்தான். இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கொம்பன், கொப்பறை என இரண்டு கள்ளச்சாராய கோஷ்டிகள் செயல்பட்டு வந்தன. இதில் கொப்பறை குரூப்பில் நீராவி முருகன் இருந்தான். இங்கிருந்துதான் அவனது ரவுடியிசம் தொடங்கியது என்கிறார்கள் போலீசார்.

இந்த 2 கோஷ்டிகளும் அடிக்கடி மோதிக்கொண்டதில் பல தலைகள் உருண்டுள்ளன. இப்படி தூத்துக்குடியில் இருந்து தொடங்கிய நீராவி முருகனின் ரவுடி பயணம் தமிழகம் முழுவதும் பறந்து விரிந்தது.

சிறுவயதில் இருந்தே உடலை கட்டுப்கோப்பாக வைத்திருப்பது நீராவி முருகன் வழக்கம். அவனது உயரமும், கட்டுப்கோப்பான உடலும் எதிரிகளை நடுநடுங்க வைக்கும் வகையில் அமைந்திருந்தது.

கடந்த 10 ஆண்டுகளாக ஊர் ஊராக சென்று கொள்ளையடிப்பது, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவது என நீராவி முருகனின் குற்றச்செயல்கள் பெருகிக் கொண்டே சென்றன. ஒவ்வொரு ஊரிலும் தனது கூட்டாளிகளை நீராவி முருகன் வைத்திருந்தான். அவர்களது உதவியோடு வீடு புகுந்து கொள்ளையடிப்பது, பெண்களை மிரட்டி செயின் பறிப்பது உள்ளிட்ட குற்றச்சம்பவங்களிலும் நீராவி முருகன் ஈடுபட்டு வந்தான்.

ஒரு இடத்தில் கொள்ளையடித்து விட்டு உடனடியாக வேறு இடத்துக்கு சென்று விடுவான். இதனால் அவனை பிடிப்பது ஒவ்வொரு முறையும் போலீசுக்கு சவாலாகவே இருந்து வந்தது.

கொள்ளையடிக்கும் பணத்தில் பெரும் பகுதியை பெண்களுக்கே நீராவி முருகன் செலவு செய்து இருக்கிறான். கிட்டத்தட்ட தமிழகம் முழுவதும் பெரும்பாலான ஊர்களில் பெண்களுடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு அங்கு கொள்ளையடிக்க செல்லும்போதெல்லாம் அவர்களுடன் உல்லாசமாக இருப்பதையும் அவன் வாடிக்கையாக கொண்டிருந்தான்.

இப்படி பெண் ஆசை மட்டுமே நீராவி முருகனின் உலகமாக இருந்துள்ளது. ரவுடிகளை பொறுத்தவரை பெரும்பாலும் ஆடை வி‌ஷயங்களில் அதிக அக்கறை காட்ட மாட்டார்கள்.

ஆனால் நீராவி முருகனோ விலை உயர்ந்த டிரேடுமார்க் ஆடைகளை வாங்கி அணிந்து வந்துள்ளான். அவன் அணியும் ஆடைகள் ஒவ்வொன்றும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். டிப்-டாப்பாக உடை அணியும் நேரத்தில் காலில் ஷு இல்லாமல் நீராவி முருகன் வெளியில் சென்றது கிடையாது. இதற்காக விலை உயர்ந்த ஷுக்களையும் அவன் வாங்கி வைத்திருந்தான். ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள ஷுக்களையும் வாங்கி அணிந்து வந்துள்ளான்.

இப்படி இளம் தொழில் அதிபர் போல வெளியில் சுற்றும்போது மிகவும் ஆடம்பரமான ஆடைகளை அணிந்தே நீராவி முருகன் வலம் வந்துள்ளான்.

தனது ஆசை நாயகிகளுக்கு பணத்தை நீராவி முருகன் வாரி இறைத்துள்ளான். ஒவ்வொரு ஊரில் தங்கும்போதும் அவர்களுக்கு தேவையான உணவு வகைகளை அப்பகுதிகளில் உள்ள பிரபல ஓட்டல்களில் இருந்தே வரவழைத்து கொடுத்துள்ளான். அதே நேரத்தில் தனது ஆசை நாயகிகளுக்கு தேவையான ஆடை அணிகலன்கள் ஆகியவற்றையும் அவர்கள் விருப்பத்துக்கு ஏற்பவே வாரி வழங்கி இருக்கிறான்.

கொள்ளையடிப்பதற்காக செல்லும் நேரங்களில் முன்கூட்டியே போனில் ஆசை நாயகிகளுக்கு தகவல் தெரிவித்து அவர்களுடன் இரவில் தங்குவதையும் வழக்கமாக வைத்திருந்தான்.

இப்படி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த நீராவி முருகன் கூட்டாளிகளுக்கும் பணத்தை கொடுத்து அவர்களையும் மகிழ்வித்துள்ளான். நெல்லை மாவட்டம் களக்காட்டில் நேற்று சுட்டுக் கொல்லப்பட்ட போதும் டிப்-டாப் உடையிலேயே நீராவி முருகன் காணப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.

46 வயதான நீராவி முருகன் மீது தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் ஆகிய 3 மாநிலங்களில் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. 2 முறை குண்டர் தடுப்பு சட்டத்திலும் போலீசார் அவனை சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த நிலையில்தான் திண்டுக்கல் மாவட்டத்தில் டாக்டர் ஒருவர் வீட்டில் நடந்த பெரிய கொள்ளை வழக்கில் சிக்கிய நீராவி முருகன் போலீசாரை தாக்கியதால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளான்.

என்கவுன்டர் தொடர்பாக நாங்குனேரி மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்தி வருகிறார். நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் இன்று நீராவி முருகனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.

பின்னர் நீராவி முருகன் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதற்காக தூத்துக்குடி புதியம்புத்தூர் பகுதியில் உள்ள அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ரவுடி நீராவி முருகனுக்கு களக்காடு பகுதியில் அடைக்கலம் கொடுத்தது யார்-யார்? என்பது பற்றிய விசாரணையையும் போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட நீராவி முருகன் பற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ஒரு வரியில் அவனை பற்றி சொல்லவேண்டுமென்றால் மிகவும் கொடூரமானவன் என்று தெரிவித்தார். அந்த அளவுக்கு தமிழக காவல் துறைக்கு கடும் தலைவலியாகவும், சவாலாகவும் திகழ்ந்த நீராவி முருகன் கடைசியில் போலீசாரின் துப்பாக்கி குண்டுக்கு இரையாகி இருக்கிறான்.

இதன்மூலம் நீராவி முருகனின் 20 ஆண்டு சொகுசு வாழ்க்கைக்கு போலீசார் முடிவு கட்டி இருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக