Vidya Gopalakrishnan -zeenews tamil : IOC நிறுவனம் 20-25% தள்ளுபடி விலையில் 30 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை ரஷ்யாவிடமிருந்து வாங்குவதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
: ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வரும் நிலையில், சர்வதேச அளவில் இன்று மிகப்பெரிய அளவில் கவலையளிக்கும் ஒரு விஷயமாக உள்ளது எரிபொருள் விலை உயர்வு என்றால் மிகையில்லை. போர் மூண்ட நாளில் இருந்து கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருகின்றது.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடங்கிய பிறகு, தற்போது வரை கச்சா எண்ணெய் விலை 40% வரை அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் கூட எரிபொருள் விலை உயர்வின் காரணமாக, 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் உச்சம் தொட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவிற்கு நிம்மதி அளிக்கும் விதமாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 30 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை ரஷ்யாவிடமிருந்து 20-25% தள்ளுபடி விலையில் வாங்குவதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அதிலும் மிக முக்கியமாக, கச்சா எண்ணெய் டெலிவரியின் போது அமெரிக்க டாலரில் இல்லாமல் இந்திய ரூபாயில் கட்டணம் செலுத்தப்பட இருப்பதகா தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, இந்தியாவின் முன்னணி எரிபொருள் நிறுவனமான இந்திய ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் இலங்கையின் உள்ளூர் துணை நிறுவனமான இலங்கையின் லங்கா ஐஓசி நிறுவனமும் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்திய நிலையில், இலங்கையின் அரசு நிறுவனமான சிலோன் பெட்ரோலியம் நிறுவனமும் விலையை அதிகரித்தது.
இலங்கையில் கடந்த 1 மாதமாக எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் சூழ்நிலையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் உள்ளூர் நிறுவனங்களும் விலையை அதிகரித்துள்ள நிலையில், சிலோன் நிறுவனமும் விலையை அதிகரித்துள்ளது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 77 ரூபாய் அதிகரித்து 254 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல் டீசல் விலை லிட்டருக்கு 55 ரூபாய் உயர்ந்து 176 ரூபாய்க்கு விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக