ஞாயிறு, 13 பிப்ரவரி, 2022

மாநில உரிமைகளைக் காக்க திமுக எப்போதும் துணை நிற்கும்: மம்தா பானர்ஜிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

மாநில உரிமைகளைக் காக்க திமுக எப்போதும் துணை நிற்கும்: மம்தா பானர்ஜிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

கலைஞர் செய்திகள்  : எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்து வரும் மாநிலங்களில், ஆளுநர்களை வைத்து ஒன்றிய பா.ஜ.க அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. குறிப்பாகத் தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் மாநில அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் தன்னிச்சையாகச் செயல்பட்டு வருகின்றனர்.
இதனால் மாநில அரசுகளின் திட்டங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்திவிட்டு மீண்டும் தமிழ்நாடு அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார் ஆளுநர் ரவி.

அதேபோல் மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தங்கரும் மேற்குவங்க அரசை செயல்பட விடாமல் தடுத்து வருகிறார். இதனால் ஆளுநருக்கும், முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் தினமும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் மேற்குவங்க சட்டப்பேரவையை ஆளுநர் ஜக்தீப் தங்கர் முடக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்ட மேற்குவங்க அரசு திட்டமிட்டிருந்தது. இந்நிலையில், "அரசியலமைப்புச் சட்டத்தின் 174 வது பிரிவின் பிரிவு (a) ன் உட்பிரிவு (2) மூலம் எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி மேற்குவங்க சட்டமன்றத்தைப் பிப்ரவரி 12, 2022 முதல் முடக்குகிறேன்" என ஆளுர் உத்தரவிட்டுள்ளது அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. வெளிப்படையாகவே ஆளுநர் எல்லை மீறி செயல்படுவதை இது காட்டியுள்ளது.
மாநில உரிமைகளைக் காக்க தி.மு.க எப்போதம் துணைநிற்கும் என முதல்வர் மம்தா பானர்ஜியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைப்பேசி உரையாடலில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ட்விட்டரில்," பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது குறித்து என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பகிர்ந்து கொண்டார். எதிர்க்கட்சி முதல்வர்கள் கூட்டத்தைக் கூட்டவும் அவர் பரிந்துரைத்தார். மாநில உரிமைகளைக் காக்க தி.மு.க எப்போதும் துணை நிற்கும். விரைவில் எதிர்க்கட்சி முதல்வர்களின் கூட்டம் நடைபெறும்" என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக