புதன், 9 பிப்ரவரி, 2022

மனைவியின் துண்டிக்கப்பட்ட தலையுடன் தெருவில் நடந்த நபர் - ஈரானில் வைரலான வீடியோ

 மாலைமலர் : டெஹ்ரான்  : இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அதிகாரிகளுக்கு ஈரான் மகளிர் விவகாரங்களுக்கான துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி தனது இளம் மனைவியின் துண்டிக்கப்பட்ட தலையுடன் தெருவில் நடந்த நபர் குறித்த வீடியோ ஈரான் நாட்டின் சமூக வலைதளங்களில் பரவியது. இது அந்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அந்த வீடியோவை ஆய்வு செய்த போலீசார், மோனா ஹெய்டாரி என்ற 17 வயது பெண்ணின் தலை அது என்பதை கண்டறிந்தனர். ஈரானின் தென்மேற்கு நகரமான அஹ்வாஸில்  அந்த பெண் வாழ்ந்து வந்த இடத்தில் சோதனை நடத்தினர்.


அப்போது அங்கு மறைந்திருந்த அந்த பெண்ணின் கணவர் மற்றும் மைத்துனர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த கொடூர சம்பவம் தொடர்பாக ஈரானிய செய்தித்தாள்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கு மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஈரானின் மகளிர் விவகாரங்களுக்கான துணைத் தலைவர் என்சீஹ் கசாலி,  பாராளு மன்றத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார்.

ஹெய்டாரியின் கொலையைத் தொடர்ந்து, குடும்ப வன்முறைக்கு எதிராக பெண்களைப் பாதுகாக்க சட்டங்களைச் சீர்திருத்த வேண்டும் என்றும், பெண்களின் திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயதை உயர்த்த  வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.

ஈரானில் கடந்த 2020 ஆண்டு தனது மகளின் தலையை துண்டித்து கௌரவ கொலை செய்த தந்தைக்கு ஒன்பது ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக