செவ்வாய், 22 பிப்ரவரி, 2022

ஆர் கே செல்வமணி நிஜமாகவே இயக்குனரா? பாக்யராஜ் கடும் தாக்கு

 tamil.indianexpress.com  : நீ எடுத்த படம் எல்லாம் நல்ல ஒடிச்சுன்னு சொன்னாங்க. ஆனால் அந்த படம் எல்லாம் நீதான் எடுத்தியா என்ற சந்தேகம் வந்து விட்டது” என இயக்குனர் செல்வமணியை, கே.பாக்யராஜ் விமர்சித்துள்ளார்
K.Bhagyaraj slams RK Selvamani on Director Association election issue: சர்க்கார் படக்கதை விவகாரத்தில் ஆர்.கே.செல்வமணி ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதாகவும், உண்மையிலேயே அவர் இயக்குனர் தானா என எனக்கு சந்தேகம் வந்துவிட்டதாகவும் இயக்குனர் கே.பாக்யராஜ் விமர்சித்துள்ளார்.


தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. தற்போது இயக்குனர்கள் சங்க தலைவராக ஆர்.கே செல்வமணி இருந்து வருகிறார். தற்போது நடக்க உள்ள தேர்தலில் ஆர்.கே.செல்வமணி தலைமையிலான அணியை எதிர்த்து கே.பாக்யராஜ் தலைமையிலான இமயம் அணி போட்டியிடுகிறது. இதில் தலைவர் பதவிக்கு பாக்யராஜ், செயலாளர் பதவிக்கு பார்த்திபன், பொருளாளர் பதவிக்கு வெங்கட் பிரபு என மொத்தம் 30 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில் இயக்குனர் சங்க தேர்தலுக்கான இமயம் அணியின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்வு சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

அப்போது, இயக்குனர் கே.பாக்யராஜ் பேசியதாவது, ”இயக்குனர் சங்க தேர்தலில் போட்டியிட அதிக கட்டணம் செலுத்தும் நிலை உள்ளது. எனவே அனைவரும் போட்டியிடும் சூழலை ஏற்படுத்த நியாமான தொகையை நிர்ணயம் செய்ய வேண்டும். சங்கம் சார்பில் செய்யப்படும் உதவி தொகை விவரங்களை அந்தந்த மாதம் இறுதியில் ரசீதுடன் வழங்கப்படும்.  சங்கத்திற்காக பிரத்யேக யூடியூப் சேனல் துவங்கப்படும். திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் கிடைப்பதற்கு முன்பாக அனைவருக்கும் ஊதியம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

புது முக இயக்குனர் கதைகளை தயாரிக்கும் உதவியை சங்கம் சார்பில் முன்னெடுத்து செல்வோம். தற்போது உள்ள இயக்குனர் சங்க நிர்வாகிகளை சந்திப்பதே மிக சவாலான ஒன்றாக இருக்கிறது.

தொலைபேசியில் கூட அணுக முடியவில்லை. ஆனால் நான் நீண்ட ஆண்டுகளாக ஒரே தொலைபேசி எண்ணை தான் வைத்துள்ளேன் நான் வெற்றிபெற்றால் இயக்குனர்கள் எந்த பிரச்சனை என்றாலும் என்னை அழைக்கலாம்.

என்னுடைய நோக்கம் எல்லாம் கடைசி வரை கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.  இந்த தேர்தலில் நான் நின்றால் இவ்வளவு நாள் எடுத்த பெயர் எல்லாம் போய்விடும் என்று என்னை பயமுறுத்தினார்கள். ஆனால் எதாவது இருந்தாதான் பயப்பட வேண்டும் எனக்கு வெட்கம் மானம் சூடு சுரணை எதுவும் இல்லை.

இதுவரை தலைவராக இருந்த ஆர்.கே.செல்வமணி எல்லாம் நன்கு சம்பாதித்து, ஆண்டு அனுபவித்து விட்டார்கள். நான் தேர்தலில் நிற்பது செல்வமணிக்கு அவரை அறியாமல் அவருக்கு ஒரு பயம் வந்துவிட்டது என்று பேசினார்.

தொடர்ந்து பேசிய பாக்யராஜ், செல்வமணியை சுட்டிக்காட்டி,”நீ எடுத்த படம் எல்லாம் நல்ல ஒடிச்சுன்னு சொன்னாங்க. ஆனால் அந்த படம் எல்லாம் நீதான் எடுத்தியா என்ற சந்தேகம் வந்து விட்டது” என செல்வமணியை விமர்சித்தார்.

தொடர்ந்து கொரோனா காலத்தில் பல்வேறு நிதி உதவிகளை பெப்சி ஊழியர்களுக்கு தானே செய்ததாக சொல்லி வருகிறார். ஆனால் உண்மையிலேயே இயக்குநர்  மணிரத்னம் மற்றும் பூமிகா பவுண்டேஷன் எனும் தனியார் அறக்கட்டளை  தான்  நிதி உதவியை வழங்கினார்கள். அதற்காக இயக்குநர் மணிரத்னத்திற்கு ஒரு பாராட்டு விழாவை எடுத்தாரா எனவும் கேள்வி எழுப்பினார்.

பின்னர், எனக்கும் செல்வமணிக்கும் முதல் விரிசல் எப்போது வந்தது என்றால், சர்க்கார் படக் கதை விவகாரத்தில், செல்வமணி, இரண்டு கதைகளும் வேற வேற, இரண்டுக்கும் வித்தியாசம் இருக்குணு சொன்னார். ஆனால் நான் அந்த பேப்பரை தட்டி விட்டேன். தப்பு செய்யலாம். ஆனால் திட்டமிட்டு செய்வது கிரிமினல் வேலை. என்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று கே.பாக்யராஜ் செல்வமணியை கடுமையாக விமர்சித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக