திங்கள், 14 பிப்ரவரி, 2022

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் மீது தீட்சதர்கள் கொலைவெறி தாக்குதல்!

 நக்கீரன் செய்திப்பிரிவு : சிதம்பரம் நடராஜர் கோவில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் கரோனா தொற்று காரணமாகக் கோவிலின் கருவறை முன் உள்ள சித்சபையில் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்யக் கோவில் நிர்வாகம் தடைசெய்து இருந்தது.
ஆனால் சித்சபையில் பூஜை செய்யும் தீட்சிதர்கள் தவிர 20-க்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் எப்போதும் சித்சபையில் இருப்பார்கள்.
இதனைப் பார்த்துப் பொதுமக்கள் நீங்க மட்டும் ஏன் முககவசம் அணியாமல் கரோனா தடுப்பூசியைப் போட்டுகொள்ளாமல் கூட்டமாக இருக்கிறீர்கள். இதனால் எங்களுக்குத் தொற்று பரவாதா? எனக் கூறி கடந்த 6 மாதத்திற்கு முன்  வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாகியது.


இந்தநிலையில் தற்போது கரோனா தொற்று குறைந்து அனைத்து இடங்களிலும் 100 சதவீதம் அனுமதித்துள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் ஒன்றுகூடிச் சித்சபையில் பொதுமக்கள், பக்தர்களை அனுமதிக்கலாமா? என்று ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளனர்.

அதில் கோவிலில் பூஜை செய்யும் கணேஷ் தீட்சிதர் என்பவர் பொதுமக்களை அனுமதிக்க வேண்டும் என்றும் தற்போது கரோனா குறைந்துள்ளது, நடராஜரை பொதுமக்கள் சித்சபையில் ஏறித் தரிசனம் செய்வது தான் காலகாலமாக உள்ள வழக்கம் என்று கூறியுள்ளார். இதற்குக் கூட்டத்தில் உள்ள தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைதொடர்ந்து கோவில் தீர்மான நோட்டில் இனிமே சித்சபையில் பக்தர்களை அனுமதிக்க கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து கடந்த இருநாட்களுக்கு முன் கணேஷ் தீட்சிதர் சிவனடியார் ஒருவரை சித்சபையில் சாமி தரிசனம் செய்ய அழைத்துச் சென்றுள்ளார். அதற்கு அங்கிருந்த தீட்சிதர்கள் தடுத்துள்ளனர். இதற்குத் தீட்சிதர்கள் ஒன்று கூடி கணேஷ் தீட்சிதரைப் பணிநீக்கம் செய்துள்ளதாகக் கூறியுள்ளனர். அதனைதொடர்ந்து சனிக்கிழமை மாலை கோவிலில் கணேஷ் தீட்சிதர் சாமி தரிசனம் செய்யச் சித்சபைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த தீட்சிதர்கள் ராஜாசெல்வம், சிவசெல்வம், சபேசன் ஆகியோர் கணேஷ் தீட்சிதரைத் தாக்கிக் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.  தாக்குதலுக்கு உள்ளாகி வலி தாங்க முடியாமல் கணேஷ் சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். இதுகுறித்து அவர் சிதம்பரம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு எண் 238/22 குற்றப்பிரிவு 341,323,307,506(2) என நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை சிதம்பரத்தை சேர்ந்த ஜெயசீலா என்ற பெண் சாமி தரிசனம் செய்யச் சித்சபைக்கு சென்றுள்ளார். அப்போது தீட்சிதர்கள் இவரைத் தாக்கியதாகப் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள். இதுகுறித்து கணேஷ் தீட்சிதர் கூறும்போது, " கோயிலில் தீண்டாமை கொடுமை நடக்கிறது. கோவிலை விட்டு என்னை நீக்கியதாகக் கூறுகிறார்கள். அதற்கான உத்தரவைக் கொடுங்கள் என்றால் கொடுக்க மறுக்கிறார்கள். அனைவரும் எந்தப் பாகுபாடு இல்லாமல் தீட்சிதர்கள் சாமி தரிசனம் செய்வது போல் பொதுமக்களும், பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்றும் தான் அனைவரின் விருப்பம். இதற்கு அரசு நல்லதொரு முடிவை அரசு எடுக்க வேண்டும்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக