செவ்வாய், 8 பிப்ரவரி, 2022

நிதியமைச்சர் பிடிஆரை அமைச்சர் பதவியில் இருந்து தூக்குங்க.. ஒன்றிய அரசின் அடாவடி மிரட்டல்

Giridharan N | Samayam Tamil  :  மத்திய அரசின் நிதி உதவிகள் கிடைக்க வேண்டுமென்றால், முதலில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை அமைச்சர் பதவியில் இருந்து தூக்குங்கள் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு டில்லியில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக தகவல் கசிந்துள்ளது.
ஆட்சி, அதிகாரம், அரசியல் என அனைத்திலும் எப்போதும் பரபரப்பாக பேசப்படுபவர்கள் பட்டியலில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு எப்போதும் சிறப்பிடம் உண்டு.
அமைச்சராக பொறுப்பேற்றதும் தான் பங்கேற்ற முதல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திலேயே மத்திய அரசை 'ஒன்றிய அரசு' எனக் குறிப்பிட்டு, தேசிய அளவில் கவனத்தை பெற்றவர்... பிரிதொரு சந்தர்ப்பத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்காமல், அரசின் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றதுடன், அதனை பொதுவெளியில் பகிரங்கமாக தெரிவித்து உடன்பிறப்புகளையே ஒரு கணம் அதிர்ச்சியில் ஆழ்த்தியவர்.

இவற்றுக்கு நடுவே, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மத்திய அரசை துறைரீதியாக விமர்சித்து மத்திய அரசை கடுப்பேற்றி வருபவர். தமிழக நிதியமைச்சரின் இதுபோன்ற தன்னிச்சையான செயல்பாடுகளால் ஒட்டுமொத்த மத்திய நிதியமைச்சகமும் செம டென்ஷனில் இருக்கிறதாம். விளைவு.... மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டுக்கான நிதி உதவிகள் கிடைப்பதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதாம்.

மாநிலத்தில் அண்மையில் பெற்ற வரலாறு காணாத பருவமழையின் விளைவாக 20 மாவட்டங்கள் சின்னாபின்னமாகின. மழையால் சேதமடைந்த மாவட்டங்களை நிரந்தரமாக சீரமைக்க மொத்தம் 6,200 கோடி ரூபாய் தேவைப்படுவதாக மத்திய அரசிடம் தமிழக அரசு சில, பல மாதங்களுக்கு முன் கோரியிருந்தது.

மாநில அரசின் இந்த கோரிக்கையையடுத்து, மழையால் சேதமடைந்த மாவட்டங்களை மத்திய குழுவினர் நேரில் ஆய்வு செய்து சென்று இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் தமிழகம் கேட்ட நிதியை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை. இதேபோன்று. மாநில பேரிடர் மேலாண்மை பணிகளை மேற்கொள்ள, கடந்த மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட 500 கோடி ரூபாயும் இன்னும் கிடைக்கப் பெறவில்லையாம்.


மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடுத்த பொது பட்ஜெட்டையே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துவிட்ட நிலையில், தமிழகத்துக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு ஏன் இப்படி பாராமுகமாக நடந்து கொள்கிறது என்று விசாரித்தால், மத்திய நிதி அமைச்சக வட்டாரத்தில் சில அதிர்ச்சிகரமான தகவல்கள் கூறப்படுகின்றன.

'ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் முன்வைக்கும் கருத்துக்கள், மற்ற மாநில நிதியமைச்சர்களை தூண்டிவிடுவதாக உள்ளதாம். இதனால் மத்திய நிதியமைச்சகத்தின் முக்கிய உயரதிகாரிகள் சிலர் கடும் அதிருப்தியில் உள்ளனராம்.

யூ-டர்ன் அடித்த ஆளுநர் ஆர்.என்.ரவி - டெல்லி பயணம் திடீர் ரத்து!

நிதியமைச்சர் பொறுப்பில் இருந்து பிடிஆரை கூடிய விரைவில் மாற்ற வேண்டும்; இல்லையெனில் தமிழகத்துக்கு நிதி வழங்கும் விஷயத்தில் மத்திய அரசின் தற்போதைய நிலைப்பாட்டில் மாற்றம் இருக்காது என்று மத்திய நிதியமைச்சகத்தில் கறாராக கூறப்பட்டுவிட்டதாம்.

திமுக ஐடி விங் செயலாளர் பதவியை பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சமீபத்தில் ராஜினாமா செய்துள்ள நிலையில், அவரை அமைச்சர் பதவியில் இருந்து தூக்க வேண்டும் என்று டிலலியில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதால் முதல்வர் ஸ்டாலின் செய்வதறியாது திகைத்து வருவதாகவும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிந்ததும் இந்த விஷயத்தில் ஒரு முடிவு எடுக்க உள்ளதாகவும் தெரிவிக்கின்றன தலைமைச் செயலக வட்டாரங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக