ஞாயிறு, 20 பிப்ரவரி, 2022

உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு சதவீத விவரம்!

உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு: முழு விவரம்!
மின்னம்பலம் : தமிழகத்தில் நேற்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 60.70 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாகத் தருமபுரி மாவட்டத்தில் 80.49 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என 12,838 பதவிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 57,778 பேர் போட்டியிட்டனர்.  கடந்த ஜனவரி 28ஆம் தேதி தொடங்கி 21 நாட்களாக நடைபெற்ற தேர்தல் பிரச்சாரம் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

1.37 கோடி ஆண் வாக்காளர்களும், 1.42 கோடி பெண் வாக்காளர்களும், 4,323 திருநங்கைகளும் என மொத்தம் 2.79 கோடி பேர் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியானவர்களாக இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மாநகராட்சிகளில் 52.22 %, நகராட்சிகளில் 68.22%, பேரூராட்சிகளில் 74.68% எனச் சராசரியாக மொத்தம் 60.70 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.

அதிகபட்சமாகத் தர்மபுரி மாவட்டத்தில் 80.49 சதவிகித வாக்குகள் பதிவாகின.

பேரூராட்சியில் அதிகபட்சமாகக் கரூர் மாவட்டத்தில் 86.43 சதவிகிதமும், மாநகராட்சியில் கரூரில் 75.84 சதவிகிதமும், நகராட்சியில் தர்மபுரியில் 81.37 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன. மிகக்குறைவாகச் சென்னையில் 43.59 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.

வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீலிடப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன், வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் பிப்ரவரி 22ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதற்காக 268 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வரும் மார்ச் 4-ம் தேதி, 1296 பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது.

நேற்று நடைபெற்ற தேர்தலைப் பொருத்தவரை ஒரு சில இடங்களைத் தவிர மற்ற இடங்களில் அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடந்தது.

திருப்பூர் மாநகராட்சி 42வது வார்டில், பார்ப்பாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளி 406 ஆவது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தாமதமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

கரூர் மாநகராட்சி 38 வது வார்டில் தாந்தோணி மலையில் அதிமுக சார்பில் வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 38 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மதுரை மேலூர் 8வது வார்டில் ஹிஜாப் அணிந்து வந்த பெண்ணிடம் அதனை அகற்றும்படி பாஜக முகவர் கிரிராஜன் கூறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வாக்காளர்கள் எந்த உடை அணிந்தும் வந்து வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

உள்ளாட்சி தேர்தலில் அதிக கவனம் பெற்ற கோவையில் ஒரு சில இடங்களில் சலசலப்பு ஏற்பட்டது. குறிப்பாக 38வது வார்டில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு ஒரே நேரத்தில் 200 க்கும் அதிகமானோர் வந்ததால் வாக்களிக்கத் தாமதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த வாக்காளர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாநகராட்சி 18வது கோட்டத்தில் தேமுதிக சார்பில் ராதிகா என்ற திருநங்கை போட்டியிட்டார். இவருக்கு ஆதரவு தெரிவித்து மையனூர் அரசு பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்ய அந்த பகுதியை சேர்ந்த திருநங்கைகள் ஒன்று திரண்டு வந்து வாக்களித்தனர்.

இவ்வாறு ஒருசில இடங்களில் வாக்குவாதம், சலசலப்பு ஏற்பட்டாலும் பல்வேறு இடங்களில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்று நிறைவடைந்தது.

மாவட்ட வாரியான வாக்குப்பதிவு விவரம்

அரியலூர்- 75.69

செங்கல்பட்டு - 55.30

சென்னை - 43.59

கோயம்புத்தூர் - 59.61

கடலூர் - 71.53

தருமபுரி - 80.49

திண்டுக்கல் - 70.65

ஈரோடு - 70.73

கள்ளக்குறிச்சி- 74.36

காஞ்சிபுரம்- 66.82

கன்னியாகுமரி- 65.72

கரூர் -76.34

கிருஷ்ணகிரி - 68.52

மதுரை - 57.09

மயிலாடுதுறை- 65.77

நாகப்பட்டினம் - 69.19

நாமக்கல் - 76.86

பெரம்பலூர் - 69.11

புதுக்கோட்டை - 69.61

ராமநாதபுரம் - 68.03

ராணிப்பேட்டை - 72.24

சேலம் - 70.54

சிவகங்கை- 67.19

தென்காசி - 70.40

தஞ்சாவூர்- 66.12

தேனி - 68.94

நீலகிரி - 62.68

தூத்துக்குடி - 63.81

திருச்சி- 61.36

திருநெல்வேலி - 59.65

திருப்பத்தூர் - 68.58

திருப்பூர் - 60.66

திருவள்ளூர் - 65.61

திருவண்ணாமலை - 73.46

திருவாரூர் - 68.25

வேலூர் - 66.68

விழுப்புரம் - 72.39

விருதுநகர் - 69.24

-பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக