செவ்வாய், 1 பிப்ரவரி, 2022

21 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது.. நீண்டகால பிரச்சனையை நிரந்தரமாக தீர்க்க நடவடிக்கை தேவை.." முதல்வர் ஸ்டாலின் கடிதம்

 Vigneshkumar  -   Oneindia Tamil  :  சென்னை: இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள 21 மீனவர்கள் மற்றும் 2 விசைப்படகுகளை உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்குத் தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக கடல் எல்லையில் தமிழக மீனவர்களுக்கும் இலங்கை மீனவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படுவது என்பது நீண்ட காலமாக நிலவும் தொடர் பிரச்சினையாகவே இருந்து வருகிறது.
அப்படி தான் இப்போது எல்லையில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், இதில் 21 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.


நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் அமிர்தலிங்கம் என்பவரது விசைப்படகில் கடந்த 29ஆம் தேதி நாகை துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்றனர். அதேபோல் காரைக்கால் மாவட்டத்தில் இருந்து 9 மீனவர்கள் மணிகண்டன் என்பவருக்குச் சொந்தமான படகில் கடந்த 29ஆம் தேதி மீன் பிடிக்கச் சென்றனர். இவர்கள் வேதாரண்யம் கோடியக்கரையின் அருகே இந்திய எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு இலங்கை மீனவர்கள் வந்ததாக சொல்லப்படுகிறது.

தமிழக மீனவர்களை இலங்கை மீனவர்கள் சுற்றிவளைத்து தகராறு செய்துள்ளனர். இதனால் இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையே நடுக்கடலில் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. அந்தச் சமயத்தில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 21 மீனவர்களையும் 2 விசை படகுளையும் எல்லை தாண்டி வந்தாகக் கூறி கைது செய்து மயிலட்டி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள 21 மீனவர்கள் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், "நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து 31-1-2022 அன்று 12 மீனவர்கள் மீன்பிடி விசைப்படகில் நாகப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்த பொழுது இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு, இலங்கையில் உள்ள காங்கேசன் துறை கடற்படைத் தளத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அதேபோன்று, காரைக்கால், புதுச்சேரியைச் சேர்ந்த மற்றொரு மீன்பிடிப் படகில் மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மீனவர்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 3 மீனவர்களுடன் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற 3 சம்பவங்களில், 68 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, தமிழகம் மற்றும் ஒன்றிய அரசு மேற்கொண்ட கடும் முயற்சிக்குப் பிறகு சமீபத்தில் விடுவிக்கப்பட்டு, தாயகம் திரும்பக் காத்திருக்கிறார்கள். இந்நிலையில், தமிழக மீனவர்கள் மீண்டும் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், மீனவ மக்களிடையே பீதியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கைச் சிறைகளில் உள்ள நமது மீனவர்கள் நீண்டகாலமாகச் சிறையில் அடைக்கப்படுவது, மீனவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாக்குவதோடு, அக்குடும்பங்களும் வறுமையில் தள்ளப்படுகின்றன. இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு இந்தியா மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையே உள்ள இந்த நீண்டகாலப் பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்க்க, உறுதியான வழிமுறைகளைப் பின்பற்றிட வேண்டும். மேலும் சிறைபிடிக்கப்பட்டுள்ள 21 மீனவர்கள் மற்றும் 2 விசைப்படகுகளை உடனடியாக விடுவிக்கும் வகையில், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று வெளியுறவுத்துறை அமைச்சரைக் கேட்டுக் கொண்டுள்ளா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக