ஞாயிறு, 16 ஜனவரி, 2022

ஏழைகள் மீது அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை - அமர்த்தியா சென்

ஏழைகள் மீது அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை - அமர்த்தியா சென்
ின்னம்பலம்: நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதையான அமர்த்தியா சென், மிதாலி முகர்ஜிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், கடந்த பத்தாண்டுகளில் நிகழ்வுகள் எப்படி வரிசையாக அரங்கேறியுள்ளன என்று இந்தியா சிந்திக்க வேண்டும் என்கிறார். இது ஜனநாயகப் பண்புகளை உருவாக்குவதற்கு எதிர்த் திசையில் அமைந்திருக்கிறது. இது ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு பதில் பலவீனமாக்குகிறது. சீராக்குவதற்கான அரசியல் செயல்முறை இல்லாமல், பொருளாதார சமத்துவம் கரைக்கப்பட்டு, தவறாக கையாளப்படுவதை அனுமதிப்பதால் இது மோசமானது.

சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் தனிநபர்களுக்கு மிகவும் மோசமானது.

ஏனெனில் எந்த குற்றமும் இல்லாத போது அல்லது நீதிமன்றத்தில் குற்றம் சாட்ட போதுமான ஆதாரங்கள் இல்லாத போது, தனிநபர்கள் கைது செய்யப்பட வழி செய்கிறது. இவர்கள் ஏதேனும் தவறாக செய்து விடுவார்கள் என்ற வாதத்தின் அடிப்படையில் சிறையில் வைத்திருக்க செய்கிறது.

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு பிறகும் சமத்துவமின்மையின் பரவல் தொடர்வது துரதிர்ஷ்டவசமானது என்றும் அவர் சொல்கிறார். இதன் விளைவாக, ஜனநாயகம் இல்லாதது, அரசு சமத்துவமின்மையை எதிர்கொள்வதிலும், அரசு மக்கள் பிரச்சனை பற்றி சிந்திக்கும் போது அவர்களுக்கு என்ன கிடைக்கிறது என்பதற்கும் இடையே வலுவான தொடர்பு இருக்கிறது.

அண்மையில் வெளியான நினைவலை புத்தகமான ’ஹோம் இன் தி வேர்ல்டு’ பின்னணியில் அமர்த்தியா சென் இவை பற்றி எல்லாம் பேசினார்.

பள்ளிக் கல்வி

கடந்த இரண்டு ஆண்டுகள் மற்றும் தொடர் கல்வி நிலையங்கள் மூடல் பற்றிப் பேசியவர், இளம் பள்ளி மாணவர்களின் எதிர்காலம் பற்றிக் கவலை கொள்வதாகக் கூறினார். பெருந்தொற்றும் கடந்த இரண்டு ஆண்டுகளும் மட்டும் இதற்குக் காரணம் அல்ல. பெருந்தொற்று இல்லாதபோது எந்த விதமான பலனை அமைப்பு அளிக்க வேண்டுமோ அதை அளிக்காத வகையில் இந்தியாவில் பள்ளிகள் அமைப்பு மிகவும் செயலிழந்து போயிருப்பதாக கூறினார்.

“கற்றுத்தருபவை எல்லாம் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டவை. மேலும் உண்மையான அறிவை நோக்கிய விழைவில் அசாதாரணமான பிறழ்வுகள் நிகழ்வதாக அறிகிறோம். கல்வியில் நமக்கு சுதந்திரம் தேவை, ஆனால் இவை எல்லாம் கணிதம் போன்ற கலைகள் மீதான பெருமிதத்திற்கு பதிலாக தேசியவாதத்தால் வழிநடத்தப்பட்டால் பெரும் தவறாகும். இந்தப் பிரச்சினை பெரிய அளவில் முன்வைக்கப்பட்டு, கடந்த பத்தாண்டுகளில் அதிகரித்துள்ளது.

சுயேச்சையான சிந்தனைகள் கொண்ட கல்வி நமக்குத் தேவை. பள்ளிகள் மூடல், கோவிட்-19 காரணமாக ஆசிரியர்கள் இல்லாதது ஆகியவை பிரச்சினைதான் என்றாலும் இவை மட்டுமே நம் பிரச்சினைகள் அல்ல” என்கிறார் சென்.

உபா என்னும் அடக்குமுறைச் சட்டம்

நரேந்திர மோடி அரசு யு.ஏ.பி.ஏ. சட்டத்தைப் பயன்படுத்தும் விதத்தையும் அமர்த்தியா சென் கடுமையாக விமர்சிக்கிறார்.

இந்த சூழலை, எந்த தவறும் செய்யாமல், ஆனால் ஏதேனும் தவறு செய்துவிடலாம் எனும் அடிப்படையில் தனது மாமாக்கள் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த ஆங்கிலேயர்கள் காலத்துடன் இதை ஒப்பிடுகிறார். “இந்தியாவில் இது தொடரும் என எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவ்வாறுதான் நிகழ்ந்துள்ளது. யு.ஏ.பி.ஏ. தனிநபர் சுதந்திரத்திற்கு மட்டும் மோசமானது அல்ல, கல்வி என்பது எதை உள்ளடக்கியிருக்க வேண்டும் என்பதற்கும் ஜனநாயகம் என்றால் என்ன பொருள் என்பதற்கும் மோசமானது” என்கிறார் சென்.

“பொதுமுடக்கம் ஏற்பட்ட போது, திடீரென மக்களிடம் நீங்கள் வீட்டிற்குச் செல்ல முடியாது எனக் கூறப்பட்டது. தினக்கூலி தொழிலாளர்களைப் பொருத்தவரை, இது பட்டினி கிடப்பதற்கான ஆணை போன்றது. அதே போல பிஹாரிலிருந்து புலம் பெயர்ந்து வந்தவர்கள், எங்கும் செல்ல முடியாவிட்டால் வீட்டிற்கு செல்ல விரும்புவார்கள், ஆனால் அதுவும் முடியாமல் போனது”.

“இதன் பின்னே இருக்கும் கேள்வி, இதற்குக் கிடைத்திருக்க வேண்டிய கவனத்திற்கு நிகரான கவனம் ஏன் கிடைக்கவில்லை என்பதாகும். அரசியல் செயல்முறையில் ஏழைகள் நலன்கள் முக்கியம் இல்லை எனில் இவ்வாறு நிகழும். இது ஜனநாயகம் இல்லாததை உணர்த்துகிறது” என்கிறார் அவர்.

ஏழைகள் குறித்தும் அவர்கள் நலன் குறித்தும் மத்திய அரசு முழு அலட்சியப் போக்கு கொண்டிருப்பதுதான் இந்த பிரச்சினையின் பெரும் பங்கு என்று கூறுபவர், ஜனநாயக மாண்புகள் வீழ்ச்சி அடைந்து வருவதை நாம் பார்ப்பதற்கான ஆபத்தான அறிகுறி இது என்றார்.

“மிக ஏழைகள் நலன் மீது அரசு நிர்வாகத்தில் இருப்பவர்கள் கவனத்தை ஈர்ப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. கவனத்தை ஈர்க்கும் அதிகாரம் அவர்களிடம் இல்லை. ஜனநாயக செயல்முறை பலவீனமாக இருக்கும்போது இது இன்னும் மோசமாக இருக்கிறது. இப்போது ஜனநாயகச் செயல்முறை மிகவும் பலவீனமாக உள்ளது. எல்லோரின் நலனுக்காகவும் நாடு இது தொடர்பாக ஏதேனும் முயற்சித்துத் தீர்வு காண வேண்டும்”.

ஜனநாயக அமைப்புகளின் வீழ்ச்சி

ஜனநாயக மாண்புகள், ஜனநாயக அமைப்புகளின் வீழ்ச்சி குறித்துப் பேசும் சென், பல கட்சி ஜனநாயகம் மிகவும் முக்கியமானது, ஆனால் ஏன் எனும் கேள்வி முக்கியமானது என்கிறார். ஒரு கட்சி இருந்தால், நாடாளுமன்றத்தில் விரும்பியது போல செயல்படும். மேலும், நீதித்துறை, பிற அமைப்புகளைப் போல நாடாளுமன்றத்தை மிகவும் சக்தி மிக்கதாக்கும் என்கிறார்.

“நீதிமன்றங்களில் நமக்கு பல்வேறு அனுபவங்கள் இருக்கின்றன. அதிகாரத் துறை, நீதித் துறை ஆகியவற்றுக்கு ஜனநாயகம் எந்த அளவு முக்கியம் என நாம் சிந்திக்க வேண்டும். இந்த அமைப்புகளின் பாத்திரத்தை நாம் யோசிக்க வேண்டும். அதிகாரத்துறை சமமில்லாத, நியாயம் இல்லாத வழியில் அதிகாரத்தைச் செயல்படுத்தத் துவங்கினால், அது பெரிய வேறுபாடாகிவிடும்.

துரதிர்ஷ்டவசமாக காங்கிரஸ் ஆட்சியில் கூட பல அமைப்புகள் கட்டுப்பாடுகளைக் கொண்டிருந்தன. சல்மான் ருஷ்டி புத்தகத்தை முதலில் தடை செய்த நாடு இந்தியா. இதற்கு முன்னர்கூட அநீதிகள் நிகழ்ந்துள்ளன. ஆனால் இந்த அமைப்புகளின் செயல்பாடுகள் மத்திய அரசின் செயல்பாடுகளால் எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு பல மடங்கு அதிகரித்துள்ளன. இது நிகழும்போது கல்வி பாதிக்கப்படுகிறது, சுதந்திரம் பாதிக்கப்படுகிறது, சமூக அரசியல், பொருளாதார உரிமைகள் பற்றி பேசுவது பாதிக்கப்படுகின்றன” என்று அவர் விளக்குகிறார்.

“அடித்தட்டில் இருக்கும் தலித்கள், பழங்குடியினர் மிக மோசமான காலத்தை எதிர்கொண்டுவருகின்றனர். இவை எல்லாம் ஒவ்வொருவர் மீது சமத்துவமின்மையையும் அநீதியையும் திணிப்பதை அதிகரிக்கச்செய்கிறது. இதை நாம் மாற்ற வேண்டும். சுதந்திரத்தின் முக்கியக் கூறுகள் சிலவற்றையாவது நம்மால் சிறிதளவேனும் பாதுகாக்க முடிய வேண்டும்”.

அரசியல் தலைமை

அரசியல் தலைமை, விவசாயிகள் போராட்டம் போன்ற மக்கள் இயக்கம் பற்றிய கேள்விக்கு, இரண்டும் நமக்குத் தேவை என்கிறார் சென். ஒரு பிரச்சினை இருக்கும்போது, முதலில் அதற்கான காரணத்தை அறிய வேண்டும், இதற்கு ஆய்வும் விசாரணையும் தேவை. எல்லாவற்றுக்கும் மேல், நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனில் என்ன நடவடிக்கை, அது எப்படி நிகழும் எனும் கேள்வி எழுகிறது. நமக்குத் தலைமை தேவையா? அது எங்கிருந்து வரும்? நீதித்துறை இதைச் செய்தால் நாம் அதிர்ஷ்டசாலிகள். ஆனால் சில நேரங்களில் இதை செய்கிறது. மற்ற நேரங்களில் தோல்வியாக அமைகிறது” என பதில் அளிக்கிறார்.

“நாம் செய்ய வேண்டியதைச் செய்யவில்லை என உணர்த்தப்படும்போது பொதுமக்கள் போராட்டம் மூலம் நடவடிக்கை எடுக்கும் வாய்ப்பு உள்ளது. ஒரு சிலர் குறுகிய அணுகுமுறை அல்லது பெரும்பான்மைவாதம் கொண்டிருக்கும்போது, சிறுபான்மையினரை மோசமாக நடத்தும்போது, மக்களை மாற்ற முடியாது என்றும் நம்புகிறேன். இவ்வாறு நிகழ்வது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. எனினும் குறுகிய நோக்கிலான பெரும்பான்மைவாதம் நீடிக்க கூடாது என நாம் கோருவதற்கு நியாயம் உள்ளது. பல நேரங்களில் இது பெரும்பான்மைவாதம்கூட இல்லை, ஏனெனில், காலம் காலமாக நாம் அறிந்துவரும் இந்தியர்கள் சிறுபான்மையினர் உரிமைகளை நசுக்குபவர்கள் அல்ல. இந்துக்கள்

முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்துவர்கள் நூற்றாண்டுகளாகச் சிக்கல் இல்லாமல் இணைந்து வாழ்ந்துள்ளனர்.

காந்தி அல்லது தாகூர் கூறியது போல, சமத்துவம், நீதியின் அடிப்படையில் ஊக்கம் பெற்ற பெரும்பான்மையை உருவாக்கலாம்”.

“சில நேரங்களில் குறிப்பிட்ட வகையான தலைமை முக்கியம். தலைமைக்கான தேவை காணாமல் போகாது. ஆனால் நீங்கள் சொந்தமாக எழுந்து நிற்கும் அவசியம் ஏற்படலாம். தாகூரின் பாடலைப் போல, ‘மக்கள் நம் குரலுக்கு செவி சாய்க்கவில்லை எனில், நாம் தனியாகச் சென்றாக வேண்டும்”

இந்தியாவின் எதிர்காலம்?

இந்தியாவின் எதிர்காலம் குறித்து நம்பிக்கையோடு இருப்பதாக சென் சொல்கிறார். “இந்தியாவில் இருப்பது குறித்து, பல்வேறு வகையானவர்களுடன் பேசிக்கொள்ளும் ஆற்றல் குறித்து பெருமிதம் கொள்கிறேன். அசோகர் இதைக் கல்வெட்டில் பொரித்திருக்கிறார். ரோமில் மாற்று நம்பிக்கை எரிக்கப்பட்டபோது, இங்கு அக்பர் அனைத்து மதங்களையும் அரசு சமமாகப் பார்க்க வேண்டும். தலையீடு இருக்கக் கூடாது எனக் கூற முடிந்தது. ஆனால் அண்மைக் காலமாக நிறைய தலையீடு இருக்கிறது. சமூகத்தின் குறிப்பிட்ட பிரிவினர் பாதகமாக நடத்தப்படுகின்றனர்.

இது நிகழும்போது, ஏதேனும் செய்ய வேண்டிய பொறுப்பு நீதிமன்றங்களுக்கு இருக்கிறது. இது குறித்து கருத்து சொல்லும் ஆற்றல் எதிர்கட்சிகளுக்கு இருக்க வேண்டும்.”

“கடந்த காலத்தில் நடந்த பல விஷயங்கள் குறித்து இந்தியா பெருமிதம் கொள்ளலாம். ஆனால் அதில் பெருமை கொள்வதற்கு பதில் நாம் எதிர்மாறாக நடந்துகொள்கிறோம். நாம் வரலாற்றுக்கு விசுவாசமாக இல்லை. இந்தியாவுக்கு விசுவாசமாக இல்லை. இந்தியனாக இருப்பதில் பெருமை கொள்வதால்தான் இந்திய பாஸ்போர்ட்டை இன்னமும் வைத்துக்கொண்டிருக்கிறேன். மக்களிடையே பாகுபாடு காணும்போது நாம் எழுந்து நிற்க வேண்டும். 88 வயதில் நான் பலவீனமாக இருந்தாலும், நான் எதிர்த்து நிற்க வேண்டும். நான் எழுந்து நிற்பேன் என நம்புகிறேன். இந்தியாவில் உள்ள எல்லோரும் இவ்வாறு நம்ப வேண்டும். இது நம்முடைய பொறுப்பின் அங்கம், மகத்தான செழுமையான பாரம்பரியத்தின் வாரிசு என்ற முறையில் நம் கடமை”.

நன்றி: தி வயர் இணைய இதழ்

தமிழில்: சைபர் சிம்மன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக