வியாழன், 20 ஜனவரி, 2022

சிறார் நூலகம் ! தமிழர் மறுவாழ்வு முகாம் வாழ் சிறுவர்களுக்கு தொடர்ந்து படிக்கவும் எழுதவும் ....


May be an image of book

May be an image of 10 people and people standing

ந. சரவணன் : முகநூல் நட்பும் - சிறார் நூலகமும்...
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு முகநூல் நண்பர் ஒருவர் அவரது முகநூல் பக்கத்தில் ஒரு செய்தி பகிர்ந்திருந்தார்.
நண்பர் திரு.விழியன் அவர்களிடம் தங்கள் ஊர் குழந்தைகளுக்கான சிறார் நூலகம் அமைக்க புத்தகங்கள் கேட்டதாகவும் உடனடியாக ஏற்பாடு செய்த விழியன் Umanath Selvan  அவர்களுக்கு நன்றி கூறும் விதமாகவும் அப்பதிவு இருந்தது.
அந்த செய்தியினை Copy செய்து முகநூல் நண்பர் பட்டியலில் இருந்த விழியன் அவர்களுக்கு தனி செய்தியாக அனுப்பி, இதேபோல் நான் வசிக்கும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் பாலர் பள்ளி முதல் கல்லூரி வரை 80 மாணவர்கள் வரை இருக்கிறார்கள் அவர்களுக்கும் இதேபோல் உதவ இயலுமா என கேட்டிருந்தேன்.

அடுத்த கணமே, முகவரி மற்றும் தொடர்பு எண் அனுப்பி வையுங்கள் என பதில் வந்தது. அனுப்பி வைந்தாயிற்று.


பொங்கல் தினத்திற்கு முதல்நாள் ஒரு பார்சல் வந்திருந்தது. பிரித்து பார்த்ததில் விழியன் அவர்கள் எழுதிய பெருங்கனா புத்தகம் இருந்தது.இந்த புத்தகத்தை மட்டும்தான் நண்பர் முகநூலில் குறிப்பிட்டிருந்தாரா என மறுமுறை அவர் பகிர்ந்த செய்தியை பார்த்து உறுதி செய்து, புத்தகம் கிடைக்கப்பெற்றது.விபரம் விரைவில் பகிர்கிறேன் என்று தனிச்செய்தி அனுப்பி வைத்தேன்.
அனைவரையும் படிக்க வைத்து ஊக்கப்படுத்துங்கள் என்று பதில் அனுப்பியிருந்தார். இடையில், மறுவாழ்வு முகாம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இந்திய குடியுரிமை குறித்து விழிப்புணர்வு முன்னெடுப்புகளை தொடர்ந்து செய்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக #*குடியுரிமை* *பொங்கல்*# கொண்டாட்டத்தை தமிழக முழுவதுமுள்ள முகாம்களில் கொண்டாடுவதற்கான ஏற்பாட்டில் நேரம் ஓடிவிட்டது. தகவலை ஊடகங்களுக்கு அனுப்புவது ஒருங்கிணைப்பு செய்த நண்பர்களுடன் குடியரசு தின விழா குறித்து பேசுவது என வேலையாகவே இருக்கவேண்டியதாகிவிட்டது.
இடையில், புத்தகம் குறித்து இன்னும் தகவல் தரவில்லையே என அவ்வப்போது ஓடிக்கொண்டே யிருந்தது.
நேற்றைக்கு முன்தினம் Professional Courier அலுவலகத்தில் இருந்து அழைப்பேசியில் அழைத்திருந்தனர். பார்சல் வந்திருக்கிறது, மின்னூர் க்கு Service இல்லை, நீங்கள் தான் வந்து பெற வேண்டும் என்று கூறினர்.
அன்றைய தினம் செல்வதற்கு இயலவில்லை. நேற்றைய தினம் சென்று பார்த்தால் பாரதி புத்தகாலயத்திலிருந்து ஒரு பெரிய பார்சல்.
அப்போதுதான் புரிந்தது. முதலில் வந்தது பார்சல் - 1, தற்போது வந்திருப்பது பார்சல் - 2.
பார்சலில் மொத்தமாக 113 புத்தகங்கள், அவ்வளவும் வண்ணமயமாகவும் குழந்தைகளை படிக்க தூண்டும் விதமான தலைப்புகள், வடிவமைப்புகள் என பிரமிப்பாக இருந்தது.
உடனே, மாணவர்களை அழைத்து தகவல் கூறி, படிப்பதற்கான ஏற்பாட்டை செய்து, அதற்கென பதிவேடு ஒன்றும் ஏற்பாடு செய்தாயிற்று.
தொடர்ந்து, படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும், எழுதுதலை சிறிது சிறிதாக ஊக்கப்படுத்த வேண்டும் எனும் பொறுப்பு இன்னும் கூடியிருக்கிறது.
ஏற்பாடு செய்த விழியன் அவர்களுக்கும், அத்தனை புத்தகங்களையும் சிறப்பாக அடுக்கி, பாதுகாப்பாக அனுப்பி வைத்த பாரதி புத்தகாலயம் பொறுப்பாளர்களுக்கும் எங்கள் மின்னூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் மாணவர்கள் சார்பாக மனமார்ந்த நன்றி.
நிச்சயமாக தங்களது நம்பிக்கையை காப்பாற்றுவோம்.
தைமாதம் எப்போதும் சிறப்பான தொடக்கமாகவே இருக்கிறது.
நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக