திங்கள், 24 ஜனவரி, 2022

யோகி ஆதித்யநாத்தை சட்டப்பேரவைக்கு வரவிடக்கூடாது - களமிறங்கும் பீர் ஆர்மி ஆசாத்!

Vignesh Selvaraj கலைஞர் செய்திகள்  : 1998 முதல் 2014ஆம் ஆண்டு வரை 5 முறை கோரக்பூர் மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று எம்.பி ஆனவர் யோகி ஆதித்யநாத். அவரது தொகுதியில்தான் களமிறங்குகிறார் சந்திரசேகர் ஆசாத்.
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு எதிராக அவரது தொகுதியில் எதிர்த்துக் களமிறங்குகிறார் பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத்.
உத்தர பிரதேச தேர்தலில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் புறநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து 'பீம் ஆர்மி' தலைவர் சந்திரசேகர் ஆசாத் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.வழக்கறிஞரான சந்திரசேகர் ஆசாத், பட்டியலின மக்களின் உரிமைகளுக்காகவும், பட்டியலின மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

பட்டியலின மக்களின் முன்னேற்றத்துக்காகச் செயல்படும் நோக்கத்துக்காக 'பீம் ஆர்மி' அமைப்பையும் நிறுவினார். சஹாரான்பூர் பகுதியில் வசிக்கும் பட்டியிலன மக்களுக்கும் மாற்று சமூக மக்களுக்கும் இடையேயான கலவரத்தை கண்டித்து வலுவான போராட்டங்களை முன்னெடுத்து மக்களின் ஆதரவு பெற்றார் ஆசாத்.

டைம்ஸ் நாளிதழின் வளர்ந்துவரும் தலைவர்களைக் கொண்ட 100 பேர் பட்டியலில் சந்திரசேகர் ஆசாத் பெயரும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

பா.ஜ.க அரசின் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்கள் இவருக்கு பெரும் செல்வாக்கை ஏற்படுத்திக் கொடுத்தது.

டெல்லி ஜும்மா மசூதியில் நடந்த பேரணிக்கு முக்கிய காரணகர்த்தவாக அறியப்பட்டவர் சந்திரசேகர் ஆசாத். அந்தப் பேரணியில் கையில் அரசியலமைப்பின் நகலையும், அம்பேத்கரின் புகைப்படத்தையும் ஏந்திக்கொண்டு அவர் ஆசாதி முழக்கமிட்டது பெரும் வரவேற்பைப் பெற்றது.

“ஆதித்யநாத்தை சட்டப்பேரவைக்கு வரவிடக்கூடாது என்பது மட்டுமே நோக்கம்” - அன்று சொன்னபடி களமிறங்கும் ஆசாத்!

2019ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிடும் வகையில் ஆசாத் சமாஜ் கட்சி என்ற அரசியல் கட்சியை நிறுவினார் சந்திரசேகர் ஆசாத். புலந்த்சாகர் தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் முதல்முறையாக களம்கண்டு 10,000 வாக்குகளுக்கு மேல் வாங்கியது அக்கட்சி.

உத்தர பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்காக தீவிரமாக பணியாற்றி வந்த சந்திரசேகர ஆசாத், ஆட்சி கட்டிலில் இருந்து பா.ஜ.கவை அகற்றுவதற்கு யாருடனும் கூட்டணி அமைக்கத் தயாராக இருப்பதாக வெளிப்படையாக அறிவித்தார். ஆனால், சமாஜ்வாதி உள்ளிட்ட பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமையவில்லை.

இந்நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு எதிராக அவர் போட்டியிடும் கோரக்பூர் புறநகர் தொகுதியில் களம் காணப் போவதாக சந்திரசேகர் ஆசாத் அறிவித்துள்ளது தேர்தல் களத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

கோரக்பூர் தொகுதி பா.ஜ.கவின் கோட்டையாகக் கருதப்படுகிறது. 1998 முதல் 2014ஆம் ஆண்டு வரை 5 முறை கோரக்பூர் மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று எம்.பி ஆனவர் யோகி ஆதித்யநாத். அவரது தொகுதியில்தான் களமிறங்குகிறார் சந்திரசேகர் ஆசாத்.

சந்திரசேகர் ஆசாத் கடந்தாண்டு ஒரு பேட்டியில், "உத்தர பிரதேச சட்டப்பேரவையில் இடம்பெறுவது எனக்கு முக்கியமில்லை. யோகி ஆதித்யநாத்தை சட்டப்பேரவைக்கு வர விடக்கூடாது என்பது மட்டுமே எனது நோக்கம். எனவே அவர் எங்கு போட்டியிட்டாலும் நான் போட்டியிடுவேன்" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக