செவ்வாய், 4 ஜனவரி, 2022

உலகின் முதல் இசை தமிழிசையே! ஏஆர்ரஹ்மான் ஃபவுண்டேஷனும் ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கும் இணைந்த வெளியீடு கவிஞர் முத்துலிங்கம்

May be an image of 3 people and text
May be an image of 1 person

Kutti Revathi  :   நண்பர்களே, ஏஆர்ரஹ்மான் ஃபவுண்டேஷனும் ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கும் இணைந்து மு. ஆபிரகாம் பண்டிதரின் நூலை “தமிழிசையை எளிதாகக் கற்றுக் கொள்ளுங்கள்’, என்ற புதிய பதிப்பாகக் கொண்டுவருமிடத்து,  இன்றைய தினமணி இதழில் கவிஞர் முத்துலிங்கம் அவர்கள், “உலகின் முதல் இசை தமிழிசையே!”, என்ற அருமையான
 கட்டுரையை தமிழிசையின் பின்னணி விளங்குமாறு எழுதியுள்ளார்.
நாம் பதிப்பிக்கும் நூலுக்கு இந்தக் கட்டுரை சிறந்த முகவுரையாக இருக்கிறது. நண்பர்கள், தமிழிசை ஆர்வலர்கள் அனைவரும் இந்தக் கட்டுரையை வாசித்துப் பயன்பெறும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். கவிஞர் முத்துலிங்கம் அவர்களுக்கும் தமிழிசையின் நவீன திசை காட்டும் இக்கட்டுரையை இக்காலத்தில் வெளியிட்டிருக்கும் தினமணி இதழுக்கும் மனமார்ந்த நன்றி.

உலகின் முதல் இசை தமிழிசையே!
கவிஞர் முத்துலிங்கம்
மார்கழி மாதம் தொடங்கிவிட்டால் சென்னையில் இசை விழாக்கள் பல கலையரங்குகளில் சிறப்பாக நடைபெறுகின்றன. அதில் அண்ணாமலை மன்றத்தில் தான் தமிழ்ப்பாடல்கள் முழுக்க முழுக்கப் பாடப் பெறுகின்றன. அதற்குக் காரணம் தெலுங்கிசை ஆதிக்கத்திலிருந்து தமிழிசையைக் காப்பதற்காக அண்ணாமலை செட்டியார் தான் தமிழிசைச் சங்கத்தைத் தோற்றுவித்தவர். அவர் தான் அண்ணாமலை மன்றத்தையும் உருவாக்கியவர்.


ஓரறிவு உயிர் முதல் ஆறறிவு உயிர் வரை அனைத்து உயிர்களையும் ஈர்க்கவல்ல ஆற்றல் பெற்றது இசை. இரண்டாயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பே, இன்னும் சொல்லப்போனால் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் தமிழிசை தழைத்திருந்தது.
இசைபற்றிய இலக்கண நூல்களும் இருந்தன. ‘களரியாவிரை’, ‘முதுநாரை’, ‘முதுகுருகு’, ‘இசை நுணுக்கம்’, ‘பஞ்சமரபு’, ஆகியவை அவற்றில் குறிப்பிடத்தகுந்தவை. இவை யாவும் முதல் இரண்டு கடல் கோள்களிலும், எஞ்சியிருந்தவை பின்னரும் அழிந்துவிட்டன.
‘மதிவாணர் நாடகத்தமிழ்’, என்ற நாடக இலக்கண நூலும், ‘செயிற்றியம்’, என்னும் நாட்டிய இலக்கண நன்னூலும் இருந்தன. அவையும் அழிந்துவிட்டன என்பது அடியார்க்கு நல்லார் போன்ற உரையாசிரியர்கள் கூற்றிலிருந்து அறிகிறோம்.
நாட்டிய வகை பற்றியும், நாட்டிய இலக்கணம் பற்றியும், நாட்டிய அரங்கு எவ்வளவு உயரம், எவ்வளவு நீளம், எவ்வளவு அகலம் இருக்கவேண்டும் என்பது பற்றியும், என்னென்ன திரைச்சீலைகள் அரங்குகளில் தொங்கவிடப்படவேண்டும் என்பது குறித்தும் இளங்கோவடிகள் இயற்றிய முத்தமிழ்க் காப்பியமான ‘சிலப்பதிகாரம்’, தெள்ளத் தெளிவாகக் கூறுகிறது.
ஆக, இசையும் நடனமும் தமிழகத்தில் தொன்று தொட்டு நிலவி, வருகின்ற இரட்டைக் கலைகள்.
பதின்மூன்றாம் நூற்றாண்டிற்குப் பின் அந்நியர் படையெடுப்பால் தமிழிசை தாழத்தொடங்கியது. என்றாலும் பதினைந்தாம் நூற்றாண்டு வரை இசைத் தமிழ்க்கலை ஏற்றமுடன் திகழ்ந்தது.
அதற்குப் பிறகு தமிழகத்தில் நாயக்க மன்னர்களின் ஆட்சி தலையெடுத்து நின்ற பிறகு தெலுங்கு இசைக்கே முதன்மை கொடுக்கப்பட்டது. நாயக்க மன்னர்களின் தாய்மொழி தெலுங்கு என்பதால் அரசருடைய தயவைப் பெறத் தமிழிசைவாணர்களும் தெலுங்குக் கீர்த்தனைகளைக் கற்றுக்கொண்டு அரசர் முன் பாடிப் பரிசு பெறத் தொடங்கினர். பின்னர் அவர்களுக்கு அதுவே தொழிலாகிவிட்டதால் தமிழிசையை விட்டுவிட்டுத் தியாகையரின் கீர்த்தனைகளையே பாடத் தொடங்கினர்.
தியாகையிஅர், முத்துசாமி தீட்சிதர், சியாமளா சாஸ்திரிகள் போன்றவர்கள் தெலுங்கிலும் வடமொழியிலும் கீர்த்தனைகளை இயற்றுவதற்கு முன்னரே தமிழிசை மும்மூர்த்திகளான முத்துத்தாண்டவர், சீர்காழி அருணாசலக்கவிராயர், மாரிமுத்தா பிள்ளை ஆகியவர்கள் தமிழில் இசைப்பாடல்கள் பாடித் தமிழிசைக்குப் பெருமை சேர்த்தனர்.
முதன்முதலில் பாடலில் எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என்ற முறையை அதாவது, பல்லவி, அநுபல்லவி, சரணம் என்ற பகுப்பு முறையை முத்துத்தாண்டவர் தான் கொண்டு வந்தார். அதையொட்டி மாரிமுத்தா பிள்ளையும் அருணாச்சலக் கவிராயரும் பாடல்கள் எழுதினர்.
முத்துத்தாண்டவரின் இந்தப் பகுப்பு முறையை நீண்ட நெடுங்காலத்திற்குப் பிறகு கேட்டுத்தெரிந்து கொண்டு தான் தியாகையர் போன்றவர்கள் பல்லவி, அநுபல்லவி, சரணம் என்ற பகுப்பு முறையில் எழுதத் தொடங்கினர்.
முத்துத்தாண்டவர் காலம் கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டு. இவர் கி.பி. 1525-ல் பிறந்து 1600 வரை எழுபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்தவர். தியாகையர் பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்தவர். கி.பி. 1767-இல் பிறந்து 1847 வரை வாழ்ந்தவர்.
இவர் காலத்துக்குச் சற்று முன்பிருந்தே, இன்னும்  சரியாகச் சொல்வதானால் கி.பி. 1650-இல் இருந்தே தமிழிசை கர்நாடக இசையென்று பெயர் மாற்றம் பெற்றது. கர்நாடகம் என்றாலே பழைமையைக் குறிக்கும் சொல். தமிழிசையும் பழைமையானது என்பதால் இதுவும் பொருத்தமானது என்பதே இசைவாணர்களின் கருத்துமாகும்.
ஆம், உலகின் தொன்மையான இசை தமிழிசை தான். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இசையை ஏழாகக் கண்டவர்கள் தமிழர்கள். ‘இன்று வரை எட்டாவது இசையை எந்த அறிஞரும் கண்டுபிடிக்கவில்லை’, என்பார் முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம். ஆனால், பண் என்பதை ராகம் என்றும், ஆளத்தியை ஆலாபனை என்றும் இசையை சங்கீதம் என்றும் மாற்றிவிட்டனர் வடமொழியாளர்கள்.
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை இசைத்தமிழ் என்பது தமிழ்நாட்டுச் சங்கீதம் தான் என்று தெள்ளத்தெளிவாகக் கூறியுள்ளார். அவரது சில கருத்துகள்: 1,800 ஆண்டுகளுக்கு முன் சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்டிருப்பது போல் இசை நுணுக்கங்கள் பற்றி விரிவாகச் சொல்லுகின்ற இலக்கியம் வடமொழியில் எதுவும் கிடையாது. ‘நாரத சங்கீத மகரந்தம்’, என்ற வடமொழி இசை நூல் ஒன்று உள்ளது. இது இளங்கோவடிகள் எழுதிய காலத்திற்கு ஏழு நூறு ஆண்டுகள் பிற்பட்டது. வங்காள நாட்டைச் சேர்ந்த ஜெயதேவர் எழுதிய வடமொழி சங்கீதப்பாட்டுகள் அஷ்டபதிகளாக உள்ளன. இந்நூல், சங்கீத வித்துவான்களால் மிகவும் பாராட்டப்படுகின்ற நூல். இது அடியார்க்கு நல்லார் காலத்திற்குப் பிற்பட்டது.
தமிழ்நாட்டு சங்கீத வித்துவான்களால் மிகவும் மதிக்கப்படுகின்ற ‘சங்கீத ரத்னாகரம்’, என்ற நூலை எழுதியவர் சாரங்க தேவர். இவர் மூன்று தலைமுறைக்கு முன்னால் வடநாட்டில் இருந்து தமிழ்நாட்டில் குடியேறிய குடும்பத்தில் பிறந்தவர். ஆனாலும் இவரது சங்கீத ஞானம் முற்றிலும் வடநாட்டிலிருந்து வந்ததென்று சொல்லி விட முடியாது.
அதுபோல் சங்கீத மும்மூர்த்திகள் என்று போற்றப்படுகின்ற தியாகையர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி மூவரும் இசைக்கலையில் புகுத்திய புதுப்புது ஞானமெல்லாம் தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் வெளியில் இருந்து வந்ததில்லை. தமிழ் மண்ணிலே தோன்றியவை தான். பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம் நாட்டியக் கலையைப் பற்றி அதிகம் கூறுகிறதே தவிர இசையைப் பற்றிச் சொல்வது கொஞ்சம் தான். மேலும், பரத முனிவர் இளங்கோவடிகள் அறுநூறு ஆண்டுகள் பிற்பட்டவர்.
இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்திலும் அடியார்க்கு நல்லார் உரையிலும் சொல்லப்பட்ட  அந்த இசைக்கலை தான் காலத்திற்கேற்ற மாறுதல் அடைந்து கர்நாடக சங்கீதமாக இப்போது காதில் விழுகிறது. பெயர் பிறமொழியாக இருப்பதைக் கண்டு ஏமாறவேண்டியதில்லை” இப்படி ஆணி அடித்தாற்போல் நாமக்கல் கவிஞர் தனது கருத்தை நாட்டியிருக்கிறார்.
குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்று தமிழர்கள் வழங்கிய பெயருக்கு முறையே சட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்தியமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்று மாற்றிப் பெயர் வைத்துக்கொண்டனர், இது தான் ச, ரி, க, ம, ப, த, நி ஆகும்.
பண்டைய சாதாரிப் பண் தான் இன்றைய பந்துவராளி. செவ்வழிப்பண் என்று தமிழன் கண்டுபிடித்த பண்ணுக்கு இன்றைய பெயர் யதுகுல காம்போதி. பண்டைய குறிஞ்சிப் பண்ணுக்கு இன்றைய பெயர் பிலஹரி ராகம். அன்றைய பழம்பஞ்சரம் தான் இன்றைய சங்கராபரணம். புறநீர்மை என்ற பழந்தமிழ்ப் பண்ணுக்கு இன்று பூபாளம் என்று பெயர். சீகாமரம் என்ற பண்ணுக்கு இன்றைய பெயர் நாதநாமக்கிரியை, செந்துருத்தி என்ற தமிழ்ப்பண் தான் இன்று மத்தியமாவதி என்று அழைக்கப்படுகிறது.
இதுபோலப் பல பண்களின் பெயர்களை அவர்கள் மாற்றிக் கொண்டார்களே தவிர, புதிதாக எதையும் கண்டுபிடித்துப் புரட்சி செய்யவில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, எல்லாவற்றுக்கும் இசைப் பாட்டு உண்டு. மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை எல்லாம் இங்கு இசை மயம் தான்.
இன்பத்திலும் துன்பத்திலும் இசையோடு கலந்து வாழ்ந்தவன் தமிழன். இறந்த பின்பு கூட, சங்கொலி, பறையொலி, சேகண்டிச் சத்தம், ஒப்பாரி இவையெல்லாம் ஒலித்துக்கொண்டிருக்கும் நிலையில் தான் அவன் பிணங்கூடப் பெருங்காடு நோக்கிப் போகிறது.
பண்டைக்காலத்தில் இசைத்தமிழுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்களே பாணர்களும் விறலியரும் ஆவர். இவர்களில் சீறியாழ் இசைத்தவர்களைச் சிறுபாணர்கள் என்றும் பேரியாழ் இசைத்தவர்களைப் பெரும்பாணர்கள் என்றும் அழைத்தனர். ‘பத்துப்பாட்டு’ நூல் வரிசையைச் சேர்ந்த ‘சிறுபாணாற்றுப் படை’, ‘பெரும்பாணாற்றுப் படை’, ஆகிய நூல்கள் இவர்களைக் குறிப்பிடும் நூல்களாகும்.
சங்கம் முடிகின்ற காலத்தில் தோன்றிய சிலப்பதிகாரத்தை இசை,  நடனக்கலைக்கென்றே தோன்றிய காப்பியம் என்று கூடச் சொல்லலாம். இதில் பத்துக்காதைகளில் பல்வேறு வகை இசைப்பாட்டுகள் விரவி வருகின்றன.
அவை, வள்ளைப் பாட்டு, கந்துகவரி, ஊசல் வரி, கானல்வரி, சாயல்வரி, சார்த்துவரி, திணைநிலைவரி, நிலைவரி, முரிவரி, முகமில்வரி ஆகியவை. பேராசிரியர் மது.ச. விமலானந்தம் எழுதிய ‘தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம்’, என்ற நூலில் இவை குறித்து இன்னும் விரிவாகக் கூறப்பட்டிருக்கிறது.
இப்படி எத்தனை பாட்டுகள் இருந்தாலும் அனைவரையும் இன்று கவர்வது திரைப்பாட்டுத் தான். ஆனால், இன்று திரை இசையே இளைஞர்களின் சீரழிவிற்கும் தமிழ்ப் பண்பாட்டின் சீர் குலைவிற்கும் காரணமாக அமைந்துள்ளது என்பதை மறுக்க முடியாது. இது பழைய உயர்ந்த நிலைக்கு மீண்டும் மாறவேண்டும்.
கட்டுரையாளர்: முன்னாள் அரசவைக் கவிஞர்
#ஏஆர்ரஹ்மான்ஃபவுண்டேஷன்
#ஸீரோடிகிரிபப்ளிஷிங்
#கருணாமிர்தசாகரத்திரட்டு
#தமிழிசையை_எளிதாகக்_கற்றுக்கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக