வெள்ளி, 7 ஜனவரி, 2022

சேர் பொன் .இராமநாதனை ஆறுமுக நாவலர் அரசியலுக்கு கொண்டுவந்த கதை - என்.சரவணன்

namathumalayagam.com- ந.சரவணன் : 1879ஆம் ஆண்டு என்பது முக்கிய வரலாற்று நிகழ்வுகள் நிறைந்த வருடம். குறிப்பாக தமிழர் வரலாற்றில். அதற்கு முந்திய மூன்று வருடங்களாக யாழ்ப்பாணத்தில் பரவியிருந்த கொலரா நோயினால் ஏறத்தாள 7000பேர் இறந்தனர். கொலரா எதிர்ப்பு – நிவாரண நடவடிக்கையின் விளைவாக பல தமிழ் பிரமுகர்கள் சாதி மத பேதமின்றி ஒன்றுபட்டார்கள். 1879 அளவில் கொலரா நோய் நின்று நிலைமை வழமைக்குத் திரும்பியது. இந்த ஆண்டு தான் ஆறுமுக நாவலர் இறந்தார். சேர் முத்துக்குமாரசுவாமியும் இறந்தார். சேர் பொன்னம்பலம் இராமநாதனின் அரசியல் பிரவேசம் நிகழ்ந்தது. சேர் முத்துக்குமாரசாமி; இராமநாதனின் தாய்மாமனான முத்துக்குமாரசாமியின் அரவணைப்பில் வளர்ந்தவர் தான் இராமநாதன்.

1879 மே 4 அன்று சேர் முத்துக்குமாரசாமி மறைந்தார். 1862 முதல் இறக்கும் வரை சட்ட நிரூபன சபையில் அவர் உறுப்பினராக இருந்தார். அவரது மறைவால் சட்டநிரூபனசபையில் அவரது இடம் வெற்றிடமானது. அவரது வெற்றிடத்திற்கான போட்டியில் கத்தோலிக்கரான “கிறிஸ்தோபர் பிறிற்ரோவிற்கு” திருமேனியார் வெங்கடாசலம்பிள்ளை ஆதரவை வழங்கினார். தேசாதிபதியின் நியமனத்தின் மூலம் நியமிக்கப்படும் உறுப்பினராக பொதுச்சேவையில் நீண்ட அனுபவமும் பிரபல சமூக சேவையாளராகவும் ஒரு மாவட்ட நீதிபதியாகவும், இராணி வழக்கறிஞராகவும் அறியப்பட்ட கத்தோலிக்கரான பிறிற்றோவை நியமிப்பதன் மூலம் இலங்கைத் தமிழரிடையே மத ரீதியான காழ்ப்புணர்வை தவிர்ப்பதுடன் மக்களிடையேயான ஒற்றுமையும் அவர்களிற்கான சேவையும் பூரணமாக்கப்படும் என வெங்கடாசலம்பிள்ளை நம்பினார்.
சேர் முத்துக்குமாரசுவாமி
எனினும் அப்போட்டியில் “சைவவேளாளர்” என்னும் கோசத்தினை முன்னிறுத்திய ஆறுமுகநாவலரின் அதீத பிரச்சாரத்தினால் பொன்னம்பலம் இராமநாதன் எனும் உயர்குடி வேளாளரே தேசாதிபதியால் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டார். நாவலர் இந்தப்பணியை முடித்து சில மாதங்களில் அதாவது டிசம்பர் 05.12.1879 அன்று இறந்து போனார். 

பிறிற்றோவுக்கும், இராமனாதனுக்கும் இடையில் நிகழ்ந்த இந்த அரசியல் போட்டி வரலாற்றில் மிகவும் முக்கியமானது. இன்றுவரை இராமநாதனின் அரசியல் பிரவேசம் குறித்து கூறப்ப்படும்போதேல்லாம். நாவலர் அரசியலுக்கு கொண்டுவந்தார். என்று சுருக்கமாக அந்தக் கதை முடிவதுண்டு. ஆனால் இதன் பின்னால் நிகழ்ந்த யாழ் – சைவ – வெள்ளாளத்தனத்தின் ஒரு அங்கமாக அந்த வரலாற்று நிகழ்வை நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.

கிறிஸ்தோபர் பிறிற்ரோ (Christopher Brito)
கிறிஸ்தோபர் பிறிற்ரோவின் தந்தை புத்தளத்தைச் சேர்ந்த பிலிப் பிறிற்ரோபுள்ளே. அவர் பலரும் அறிந்த முதலியாராகவும் அரசாங்கப் பதிவாளராகவும் இருந்திருக்கிறார். இன்று றோயல் கொலேஜ் என்று அழைக்கப்படும் அன்றைய கொழும்பு அக்காடமியிலேயே பிறிற்ரோ கல்வி கற்றார். பின்னர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு ஆக்ரா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார். இலங்கை திரும்பியதும் தான் கற்ற கொழும்பு அக்காடமியில் கணித பேராசிரியராக கடமையாற்றினார். 1867 இல் உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றத் தொடங்கி பின்னர் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கொழும்பு மாவட்டங்களில் நீதிபதியாகப் பணியாற்றினார்.(1) பலரும் அறிந்த பிரமுகராகவும் இராணி வழக்கறிஞராகவும் செல்வாக்கு பெற்றவராக இருந்தார் பிறிற்ரோ. 1872 ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை கொழும்பு மாநகர சபை உறுப்பினராக இருந்திருக்கிறார். வழக்கறிஞர் சங்கத்தின் (BAR) தலைவராகவும் இருந்திருக்கிறார்(2) தமிழ், சிங்களம், ஆங்கிலம், லத்தீன், கிரீக், சமஸ்கிருதம், பாளி ஆகிய மொழிப் பரிச்சயம் உடையவர்.

இலங்கை கத்தோலிக்கச் சங்கத்தின் (CATHOLIC UNION OF CEYLON) தலைவராகவும் இருந்திருக்கிறார்.(3) ஒரு தோட்ட உரிமையாளராகவும் இருந்திருக்கிறார் என்று பெர்குசன் டிரெக்டரி (1905-1906). கூறுகிறது.(4)

தமிழ்ப் பண்பாட்டறிவியலில் பிறிற்ரோவின் வகிபாகம்
மகாவம்சத்தை சிங்களவர்கள் இலங்கையின் வரலாறாகக் கொண்டாடி வருகின்ற போதும் அது சிங்கள பௌத்தர்களின் வரலாறு என்று நாம் கூறிவிடமுடியும். அதுபோல யாழ்ப்பாணத் தமிழர்களின் சரித்திரத்தைஅறிவதற்கு துணையாக இருக்கும் நூல்களாக இன்றும் பயன்படுத்தப்படுபவை “கைலாய மாலை”, “வையா பாடல்”, “பர ராஜ சேகரன் உலா”, “ராஜ முறை” “யாழ்ப்பாண வைபவமாலை”. இவற்றில் “யாழ்ப்பாண வைபவமாலை” ஒல்லாந்து அதிகாரி மேக்கறூனின் வேண்டுகோளுக்கு இணங்க மயில்வாகனப் புலவரால் 1736இல் முதன்முதலில் எழுதப்பட்டது.(5) ஆனாலும் அது முதன் முதலில் 1884 ஆண்டு தான் அச்சு வடிவில் வெளிவந்தது.(6)  இந்த நூலை அடியொற்றி 1928ஆம் ஆண்டு சுவாமி ஞானப்பிரகாசர் “யாழ்ப்பாண வைபவ விமர்சனம் – தமிழரசர் உகம்” என்கிற பெயரில் நூலாக வெளியிட்டார். “யாழ்ப்பாண வைபவ மாலை”யில் தாம் கண்ட முரண்பாடுகளை அவர் தனது பதிப்பில் எடுத்துச் சொல்கிறார்.(7) அவர் எழுதிய முக்கிய விமர்சனக் கட்டுரை ஆங்கிலத்தில்  “யாழ்ப்பாண வைபவ மாலையின் மூலங்கள்” (REVD. S. Gnana Prakasar - Sources of the Yalppana vaipava malai.) என்கிற தலைப்பில் வெளிவந்திருக்கிறது.(8)
மூல நூல் எழுதப்பட்டு ஒன்றரை நூற்றாண்டுக்குப் பின்னர்  அதனை முதன்முதலில் தமிழ் மொழியில் இருந்து ஆங்கில மொழிக்கு மொழிபெயர்த்தவர் தான் பிறிற்ரோ. 1879 இல் இது வெளிவந்தது. இன்னும் சொல்லப்போனால்; யாழ்ப்பாண வைபவமாலை தமிழ் மொழியில் அச்சில் வெளிவருவதற்கு முன்னரே ஆங்கிலத்தில் வெளிவந்துவிட்டதை அறிய முடிகிறது.(9) இன்றும் ஆங்கிலத்தில் யாழ்ப்பாணம் பற்றிய வரலாற்றை ஆராய்வதற்கு மிக முக்கியமான ஆவணமாக பிறிற்ரோ மொழிபெயர்த்த யாழ்ப்பாண வைபவ மாலையே திகழ்கிறது. வெறும் மொழிபெயர்ப்பு என்று மட்டும் அதைக் கூறிவிட முடியாது. பல அடிக்குறிப்புகள், பின் குறிப்புகள், சொல் விளக்கம் என அவரின் ஆராய்ச்சித் தன்மையை அதில் காணலாம்.  பிறிற்ரோவின் பின்னணியை ஆராய்கிறபோது அவர் வரலாற்றறிவில் ஆழமும், தேடலும் உள்ள ஒருவராக இருந்திருக்கிறார் என்று தெரிகிறது. குறிப்பாக ராஜரீக ஆசிய கழகத்தின் கூட்டக் குறிப்புகளை நோக்கும்போது வரலாறு, இலக்கியம், அரசியல் குறித்து நிறைய பங்களிப்புகளை செய்திருக்கிறார்.

இந்த மொழிபெயர்ப்புக்காக அவர் வேறு பல வரலாற்று நூல்களையும் ஒப்புநோக்கியிருக்கிறார். அவ்வாறு ஆராயும்  போது அதில் “குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில்  இந்த நூலில் நபர்கள், சம்பவங்கள், காலம் என்பன காணப்படுகின்றன” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.(10)

அதே வேளை தாராள சிந்தனைக் கொண்ட அவரின் இந்த மொழிபெயர்ப்பில் பிரதேச உணர்வும், சாதிய மேலாதிக்க உணர்வும் கலந்திருப்பதாகத் தோன்றுகிறது என்று “பூதத்தம்பி” விடயத்தை அவர் விபரித்திருக்கிற விதத்தில் இருந்து உணர முடிவதாக ஜோன் மார்டின் (John. H. Martyn) குறிப்பிடுகிறார்.(11) ஜோன் மார்டின் யாழ்ப்பாண வைபவ மாலை தொகுக்கப்பட்டதிலும், கிறிஸ்தோப்பர் பிறிற்ரோவின் மொழிபெயர்ப்பிலும் இருக்கிற பல்வேறு சிக்கல்களை தனது நூலில் விவிவாக ஆராய்ந்திருக்கிறார்.

யாழ்ப்பாண வைபவ மாலையின் இரண்டாம் பதிப்பு யாழ்ப்பாணத்தில்  இயங்கிய அமெரிக்க மிஷனைச் சேர்ந்த எஸ்.ஜோன் என்கிற பாதிரியாரால் 1882 இல் வெளியிடப்பட்டிருப்பதாக ஜோன் மார்டின் குறிப்பிடுகிறார். ஆனால் அவர் வெளியிட்ட அந்த நூல் யாழ்ப்பாணச் சரித்திரம் (Yalpana Chariththiram or the history of Jaffna – S.John) என்பதே. இந்த நூல் யாழ்ப்பாண வைபவ மாலையை அடியொற்றியே எழுதப்பட்ட நூல். ஆனால் அதில் சில மாற்றங்களைச் செய்திருக்கிறார். குறிப்பாக கைலாய வன்னியனும், அவரின் மைத்துனர் பூததம்பியும் கொழும்புக்குச் சென்று அங்கு நிகழ்ந்தவற்றை விபரிக்கின்ற தகவல்களில் வேறுபாடுகள் உள்ளன.
“இன்னொரு இடத்தில் இது பிறிற்ரோவின் “யாழ்ப்பாண வரலாறு” பிறிற்ரோ யாழ்ப்பாண வரலாறை எழுதியதில்லை. அவர் யாழ்ப்பாண வைபவ மாலையை மொழிபெயர்த்ததைத் தான் செய்தார். கூடவே சில பின்னிணைப்புகளை சேர்த்துக்கொண்டார். அப்படி ஒரு வரலாறை அவர் எழுதியிருந்தால் நிச்சயம் அதற்கு “யாழ்ப்பாண வரலாறு”
என்கிற பெயரை நிச்சயம் வைக்கமாட்டார். என்கிறார் ஜோன் மார்டின்.

பிறிற்ரோ மொழிபெயர்த்த இன்னொமொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நூல் “முக்குவர் சட்டம்” இது யாழ்ப்பாண வைபவ மாலை வெளியிடுவதற்கு முன்னரே  (1876) அது வெளியிடப்பட்டுவிட்டது. பிறிற்ரோ மட்டக்களப்பு மாவட்ட நீதிபதியாக கடமையாற்றிய காலத்தில் இந்தப் பணியின் முக்கியத்துவத்தைக் கருத்திற்கொண்டு மொழிபெயர்த்திருந்தார். “நூறாண்டுக்கு முன் இலங்கையின் அரசியல் நிலை” என்கிற தலைப்பில் அவர் நிகழ்த்திய விரிவுரை கட்டுரையாக வெளிவந்திருப்பதாக குறிப்பொன்று காணக்கிடைக்கிறது. ஆனால் அது எங்கே என்பது பற்றியோ அந்த கட்டுரையையோ கண்டு பிடிக்கமுடியவில்லை.(12) அவர் புலமைத்துவப் பணிகளில் ஆழ்ந்த ஈடுபாடுடையவராக இருந்திருக்கிறார் என்பதை அவர் ராஜரீக  ஆசிய கழகம் - இலங்கைக் கிளையில் (Royal Asiatic society - CEYLON BRANCH)  அங்கம் வகித்திருப்பத்தையும் (உதாரணத்திற்கு – 1865 ஆண்டு அங்கத்துவப் பட்டியல்), அங்கு பல்வேறு ஆய்வுப் பணிகளில் H.C.P.Bell போன்ற பல ஆங்கிலேய ஆய்வாளர்களுடன் சேர்ந்து பணியாற்றியிருப்பத்தையும் வைத்து அறிய முடிகிறது. 

புகழ்பெற்ற தொல்பொருள் ஆய்வாளரான H.C.P.Bell உடன் சேர்ந்து “தமிழர் பிரச்சினை” (The Tamilian Problem) என்கிற தலைப்பில் ஒரு ஆய்வுக்கடுரையையும் அவர் சமர்ப்பித்திருக்கிறார். பிறிற்ரோவுக்குப் பின்னர் தான் இராமநாதன், அருணாச்சலம் போன்றோரும் ராஜரீக  ஆசிய கழகத்தில் அங்கம் வகிக்கத் தொடங்கினர் என்பதும் அறிய முடிகிறது. பின்னர் ஒரே காலத்தில்  பிறிற்ரோ, இராமநாதன், அருணாச்சலம் ஆகியோர் அதில் இயங்கியிருக்கின்றனர். ஒரே கூட்டத்தில் கலந்துகொண்டு முக்கிய முடிவுகளை எடுப்பவர்களாகவும் இருந்திருக்கின்றனர். 16.05.1895 இல் கொழும்பு மியூசியத்தில் நிகழ்ந்த அந்த கழகத்தின் கூட்டத்தில் பொன்னம்பலம் குமாரசுவாமி தலைமை வகித்திருக்கிறார் அதே கூட்டத்தில் புறநானூறு பற்றிய விவாதமொன்றில் பொன்னம்பலம் இராமநாதன் கருத்து வெளியிட்டிருப்பதையும், சிலப்பதிகாரம், கஜபா அரசனின் இந்திய விஜயம் பற்றிய விவாதத்திற்கான ஆவணங்களைப் பெறுவது பற்றி பிறிற்ரோ உரையாடியிருப்பது பற்றியும் குறிப்புகள் உள்ளன. (13)

இதைவிட பிறிற்ரோ ஒன்பதாம் பத்திநாத பாப்பரசர் சரித்திரம் (Life of Pope Pius IX. –Jaffna) என்கிற நூலை யாழ்ப்பாணத்தில் -   1892இல் வெளியிட்டிருகிறார் என்கிற தகவல் பிரிட்டிஷ் நூலகம் தொகுத்த தமிழ் நூல்களின் பட்டியல் என்கிற நூலில் இருந்து அறிய முடிகிறது.(14)

யாழ்ப்பாணத்தின் வரலாற்றை மீட்டெடுத்ததிலும், அதனை பரப்பியதிலும் அன்றைய முக்கிய தமிழ் கிறிஸ்தவ அறிஞர்களின் பங்கை மறுதலித்துவிட, முடியாது. காசிச் செட்டி, ஹென்றி மார்ட்டின், ஜோன், டானியல் சாமுவேல் போன்றோரின் வரிசையில் கிறிஸ்தோபர் பிறிற்ரோவுக்கும் பெரும்பங்குண்டு. இவர்களின் அந்த பங்களிப்புக்கு தமிழ் சமுதாயத்தில் கிடைக்காத அங்கீகாரம் தமிழ் சமுதாயத்துக்கு வெளியில் நிறையவே இருக்கிறது.

தமிழ்ச் சமூக பண்பாட்டறிவியலில் பிறிற்ரோவின் வகிபாகத்தை இத்தகைய பின்புலத்தையும் கணித்துத் தான் நோக்கவேண்டும்.

காசிச்செட்டி, பிறிற்ரோ, முத்துகிருஷ்ணா ஆகியோர் “கொழும்பு செட்டி”(15)  பின்னணியுடையவர்கள் என்றும் அவர்கள் தென்னிந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்த புரட்டஸ்தாந்து பின்புலத்தைக் கொண்டவர்கள் என்றும் பெட்ரிக் பீப்ல்ஸ் குறிப்பிடுகிறார்.(16) ஆனால் அவரது நூலில் இந்த பகுதிக்கு மேலுள்ள பந்தியில் யாழ்ப்பாண வைபவ மாலையை மொழிபெயர்த்த கிறிஸ்தோபர் பிறிற்ரோவை குறிப்பிட்டு விட்டு அடுத்த பந்தியில் இதனை விளக்குவதால் இந்த இரு பிறிற்ரோக்களும் ஒருவரே என்பது போன்ற ஒரு தகவல் மயக்கம் வர வாய்ப்புண்டு. இதே காலத்தில் காசிச் செட்டியின் உறவினரான பிலிப் ஆர்.பிறிட்டோ பாபாபுள்ளே என்கிற ஒருவர் இருந்தார். பிரசித்தி பெற்ற வைத்தியர். நூல்களையும் எழுதியிருக்கிறார். அவரின் பெயரில் கொழும்பு கிராண்ட்பாஸ் இல் “பாபாபுள்ளே ஒழுங்கை” என்கிற வீதியுமுண்டு. அவரும் “செட்டி” பின்னணியைக் கொண்டவர் தான். ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் தாய்வழி முன்னோர் கூட கொழும்பு செட்டி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று ஜே.ஆரின் சுயசரிதையை எழுதிய கே.எம்.டி.சில்வா மற்றும் ஹோவார்ட் ரிக்கின்ஸ் (Howard Wriggins) போன்ற வரலாற்றாசிரியர்களும் பதிவுசெய்திருக்கிறார்கள்.(17)

1981 இல் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் போது யாழ் நூலகம்  எரிக்கப்பட்ட வேளை எஞ்சிருந்த ‘யாழ்ப்பாண வைபவ மாலை’யின் ஒரேயொரு மூலப்பிரதியும் அதில் அழிந்து போனது. மீட்கமுடியாத செல்வம் அது.

“யாழ்ப்பாண வைபவ மாலை”யை ஆங்கிலத்தில் கொண்டுவந்ததன் பின்னணியில் மகாவம்சத்தின் செல்வாக்கைப் பற்றியும் இங்கு குறிப்பிடவேண்டும்.

மகாவம்சத்துக்கு நேர்ந்த சவால்
ஆய்வுரீதியான புலமைத்துவ பணிகள் இலங்கையில் காலனித்துவவாதிகளால் காலனித்துவ காலத்தில் தான் நிகழ்ந்தது என்பதை நாம் அறிவோம். நமது வரலாற்றை மீட்டுத் தந்ததில் அவர்களின் வகிபாகம் அளப்பெரியது.

இலங்கையின் வரலாறாக அதுவரை அறியப்பட்டிருந்த மகாவம்சம் 6ஆம் நூற்றாண்டில் தான் எழுதப்பட்டது. மகாநாம தேரரால் அது பாளி மொழியில் “சிங்கள பௌத்த”ர்களின் வரலாறாகவே புனையப்பட்டிருப்பதை வரலாற்றாசிரியர்கள் பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள். இலங்கையின் வரலாற்றை ஆராய முற்பட்டவர்களுக்கு பாளி மொழி தவிர்ந்த மொழிகளில் அது பல நூற்றாண்டுகளாக கிடைக்கவில்லை. 19ஆம் நூற்றாண்டில் இதனை மொழிபெயர்க்க எடுக்கப்பட்ட முயற்சிகள் பூரணமாக வெற்றியளிக்கவில்லை. இறுதியில் முதற்தடவையாக அதனை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தவர் ஜோர்ஜ் டேனர் (George Turnour). அவர் இலங்கையில் சிவில் நிர்வாகச் சேவையில் இருந்த காலத்தில் இதனை மொழிபெயர்த்து 1837இல் வெளியிட்டார். ஆனால் அதுவும் பிழைகளைக் கொண்ட பூரணமில்லாத ஒன்றென விமர்சிக்கப்பட்டது.

இந்த நிலையில் தான் “யாழ்ப்பாண வைபவ மாலை”யின் ஆங்கில மொழிபெயர்ப்பை பிறிற்ரோ 1879இல் வெளிக்கொணர்ந்தார். ஒரு வகையில் இது இலங்கையின் வரலாறை சிங்களவர்களின் வரலாறாக நிறுவ முயன்ற மகாவம்சத்தின் புனைவை உடைக்கும் ஒன்றாகவும் இருந்தது. வடக்கில் தமிழ் இராஜ்ஜியங்கள் பற்றியும் தமிழ் மன்னர்கள் பற்றிய விபரங்களையும் வெளிக்கொணரும் ஒன்றாக அது அமைந்தது. மகாவம்சத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பின் அவசியம் அப்போது தான் சிங்களவர்களுக்கு மாத்திரமல்ல ஆங்கிலேயர்களுக்கும் உணரப்பட்டது.

முன்னைய சிக்கலான மொழிபெயர்ப்பைக் கொண்ட ஜோர்ஜ் டேனரின் பதிப்பு வெளிவந்து சுமார் 75 ஆண்டுகளுக்குப் பின்னர் வில்ஹெல்ம் கெய்கர் (Wilhelm Geiger) ஜெர்மன் மொழியில் வெளியிட்டார். பின்னர் அதனை மீண்டும் ஆங்கிலத்துக்கு பாளி மொழி பாண்டியத்தியம் பெற்ற மாபெல் ஹெய்னஸ் போத (Mabel Haynes Bode) என்பவரின் மேற்பார்வையில் மொழிபெயர்த்து 1912 இல் வெளியிடப்பட்டது.

நாவலரின் தெரிவு இராமநாதன்
நாவலர் கத்தோலிக்கர்களை மட்டுமல்ல பல சைவர்களையும் பகைத்துக்கொண்டு இருந்த காலம் அது. கத்தோலிக்கரான பிறிற்ரோவுக்கு கத்தோலிக்க சமூகத்தினர் மத்தியில் பெரும் செல்வாக்கு இருந்தது. அன்றைய “The Guardian” பத்திரிகை, “இலங்கை நேசன்” உள்ளிட்ட பத்திரிகைகள் எல்லாம் பிறிற்ரோவுக்கு ஆதரவாக இயங்கின. “உதயபானு”  பத்திரிகை கூட பின்னர் தான் ஆரம்பிக்கப்பட்டன.

பிறிற்ரோவும் செல்வந்தராக இருந்தார். கல்பிட்டி, சிலாபம், மாதம்பே, நீர்கொழும்பு போன்ற இடங்களில் பிறிற்ரோ பல நிலங்கள் சொந்தமாக இருந்தன. 1878-1879 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் கொலரா நோய் பரவி பலர் இறந்த போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ஆறுமுக நாவலருடன் சேர்ந்து உதவி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார். நாவலர் கஞ்சித்தொட்டி அமைத்து பல பிரமுகர்களிடமும் இருந்து நிதி சேகரித்து பல நாட்கள் கஞ்சி விழங்கி உதவினார். அந்தத்திட்டத்துக்கு நாவலர் 20 ரூபாய் நிதியை முதலாவதாக வழங்கி அந்த நிதியத்தை ஆரம்பித்து வைத்தார். நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 22 இலிருந்து 25  ரூபாய் வரை செலவாகியிருக்கிறது. இந்த கஞ்சித் தொட்டி திட்டத்துக்கு அப்போது பிறிற்ரோ 45 ரூபாயை வழங்கினார். கூடவே நாள்தோறும் பின்னேரம் நான்கு மணியளவில் கஞ்சித்தொட்டி நடத்திய இடங்களுக்குச் சென்று விபரங்கள் சேகரித்தார்.

அதன் பின்னர் பிறிற்ரோ சுதேசிகளுடன் சேர்த்து, யாழ்ப்பாண அதிபர் துவைனம் (W.C.Twynam) மாவட்ட நீதிபதி சேரம் (D.Saram), மாகாண உதவியாளர் பிறைம் (C.Prime) ஆகியோரையும் இணைத்து கஞ்சித்தொட்டி தரும சங்கம் ஒன்றினை 02.08.1877 அன்று ஏற்படுத்தினார். அதன் தலைவராக பிறிற்ரோவும் சேஷ் அளகக்கோன், ஆறுமுகநாவலர், அருணாசலம் முதலியார், சின்னத்தம்பி, தம்பு ஆகியோர் உறுப்பினர்களாகவும் தெரிவானார்கள். அதன் ஆலோசகர்களாக  துவைனம், சேரம் (D.Saram), பிறைம் ஆகியோர் தெரிவானார்கள்.(18)

ஏழைகளுக்கான நிவாரண நிதியம் ஒன்றை உருவாக்கி பிறிற்ரோ மேற்கொண்ட பங்களிப்பை அன்றைய அன்றைய யாழ் அரசாங்க அதிபர் துவைனம் மெச்சியிருக்கிறார்.(19)

பிறிற்ரோ 1879 இல் கொழும்பு மாநகரசபையின் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். ஆறுமுக நாவலருடன் இணைந்து பிறிற்ரோ பணியாற்றியிருந்தாலும் பிறிற்ரோவுடனான அதிருப்தி அவருக்குத் தீரவில்லை. அவரது அதிருப்திக்கு பிரதானமான காரணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் வழக்கு தொடர்பானது. 1876ஆம் ஆண்டு கோவிலைச் சேர்ந்த பிராமணர்களுக்கும் கோவில் நிர்வாகத்துக்குமிடையிலான சர்ச்சையொன்று வழக்கு வரை சென்றது. அந்த வழக்கில் நிர்வாகத் தரப்பு வழக்கறிஞராக வாதிட்டவர் பிறிற்ரோ. ஆறுமுகநாவலர் பிராமணர்களுக்கு பக்கபலமாக இருந்தார். ஆறுமுக நாவலர் நீதிமன்றத்துக்குள் நுழையும்போது பிறிற்ரோ உட்பட வழக்கறிஞர்கள் பலரும் எழுந்து மரியாதை செலுத்தினார்கள். எதிர்தரப்பு வழக்கறிஞராக வாதிட்ட பிறிற்ரோவின்ன் மீது நாவலருக்கு வெறுப்பு இருந்தது.(19)

பிறிற்ரோ சமூக அளவில் பெரும் செல்வாக்கு பெற்ற, படித்த, சமூக விடயங்களிலும் தீவிரம் மிக்க, புலமைத்துவ ஆற்றலையும், அரசியல் அனுபவங்களையும் கொண்ட, வயதில் மூத்தவராகவும் இருந்தார். ஆனால் அப்போதைய நிலையில் இந்தளவு தகுதியில்லாத இராமநாதனை அவர் அரசியலுக்குள் கொண்டுவந்தது அவர் ஒரு சைவ சமயத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் தான். கிறிஸ்தவரான பிறிற்ரோவுக்கு அப்போதிருந்த செல்வாக்கை நாவலரால் சகிக்க முடியாது இருந்தது.

யாழ்ப்பாண வழக்கிறிஞர்கள் சங்கத்தில் (Jaffna Bar) 15.05.1879 வழக்கறிஞர்கள் ஒன்று சேர்ந்து  பிறிற்ரோவுக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்து திரட்டுவதற்கான ஒரு கூட்டத்தை நடத்தினார்கள். இராமநாதனுக்கு ஆதரவு தரப்பைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர்கள் சமூகமளிக்காத அந்த கூட்டத்தில் பிறிற்ரோவுக்கு ஆதரவைத் தெரிவித்திருக்கின்றனர் என்று நாவலர் அணியினர் குற்றம் சாட்டினர்.

இதன் விளைவாக அடுத்த வாரமே ஆறுமுக நாவலர் 22.05.1879 அன்று வண்ணார்பண்ணையிலிருந்த சைவ பிரகாச வித்தியாயத்தின் மண்டபத்தில் ஒரு பொதுக் கூட்ட்டத்தைக் கூட்டினார். 

அந்த கூட்டத்திற்கு கிட்டத்தட்ட 3500 பேர் திரண்டிருந்தனர். அங்கு தான் தொடங்கியது இராமநாதனுக்கு ஆதரவான பிரச்சாரம்.

அந்த கூட்டத்தைப் பற்றிய ஒரு கட்டுரை அன்றைய கொழும்பு ஒப்சேர்வர்  (Colombo Observer 29.05.1879) பத்திரிகையில் வெளிவந்திருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் கொழும்பில் ஒப்சேர்வர் பத்திரிகை இராமநாதனையும், தி எக்சேமினர் (The Examiner) பத்திரிகை பிறிற்ரோவையும் ஆதரித்து இயங்கின.(20) “தி எக்சேமினர்” பத்திரிகையுடன் ஆருமுகநாவலருக்கு இருந்த பகையை அவரது எழுத்துக்களில் பிரதிபத்திருப்பதைக் காணலாம். குறிப்பாக ஆர் எழுதிய “யாழ்ப்பாணச் சமயநிலை” நூலில் சைவசமயிகளுக்கு எதிராக “தி எக்சேமினர்” தொடர்ந்துவந்த பிரச்சாரங்களைச் சாடியிருப்பார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டதாரியான சுதுமலையைச் சேர்ந்த கறோல் விஸ்வநாதப்பிள்ளை கூட்டத்திற்கு தலைமை வகித்து பேசிய போது சேர் முத்துகுமாரசுவாமியின் இழப்புக்கு வருத்தம் தெரிவித்து அவரது இடத்துக்கு அவரது உறவினரும் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞருமான இராமநாதனை முன்மொழிந்து அவரின் குடும்பப் பின்னணியின் மகத்துவத்தையும் குறிப்பிட்டு உரையாற்றினார்.(21)

இதனைத் தஞ்சாவூரில் நீதிவானாக இருந்த டீ.பொன்னம்பலம்பிள்ளை வழிமொழிந்தார். அங்கு வந்திருந்தவர்கள் அனைவரும் அதனை ஏகமானதாக ஏற்றுக்கொண்டார்கள். ஆஸ்துமா நோயினால் அவதிப்பட்டுக்கொண்டு ஓரிடத்தில் அமர்ந்து இவற்றைக் கவனித்துக் கொண்டிருந்த  நாவலர் திடீரென்று உணர்ச்சிவசப்பட்டு சத்தமிட்டார். என்னுடைய கடிதங்களையும், ஆவணங்களையும், தந்திகளையும் இங்கே கொண்டுவாருங்கள் என்று தனது உதவியாளருக்கு ஆணையிட்டார். 

அதனைத் தொடர்ந்து உரையாற்றிய ஆறுமுக நாவலரும் பொன்னம்பலத்தின் குடும்பப் பின்னணி மற்றும் அவர் சட்டத்துறையில் ஆற்றிவரும் பங்களிப்பு பற்றியும் உரையாற்றினார்.
“அரச சபைக்குத் தெரிவானதன் பின்னர்  சேர் குமாரசுவாமி அவரது பணியின் காரணமாக யாழ்ப்பாணத்துக்குத் திரும்பி வரவில்லை. இராமநாதன் ஏன் அதை செய்யக்கூடாது. அவருக்கு அதற்கான தகுதி இருக்கிறது”
என்று நீண்ட உரையை ஆற்றினார். முக்கிய பலரும் ஒவ்வொருவராக அன்று ஆற்றிய உரைகளின் இறுதியில் இராமநாதனை முன்மொழிந்தனர். எஸ்.தில்லையம்பலம் (சண்டிலிப்பாய் உடையார்), கந்தர் காசிப்பிள்ளை (வர்த்தகர்), எஸ்.டி.சிவப்பிரகாசப்பிள்ளை, ஈ.மயில்வாகனம் எஸ்.துரையப்பா செட்டியார் போன்றோர் அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். கூட்டத்தில் இராமநாதனுக்கு ஆதரவு தெரிவித்து பலர் கையெழுத்திட்டார்கள். இந்த கூட்டத்தின் இறுதியில் அடுத்த பிரச்சாரக் கூட்டம் 24ஆம் திகதி சங்கானையிலும், 27 அன்று நல்லூரிலும் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது. இரு தரப்பின் கூட்டங்களும் பல இடங்களில் நிகழ்ந்தன.

இந்தக் காலப்பகுதியில் எல்லாம் வெகுஜன வாக்கெடுப்பு கிடையாது. ஓரிடத்தில் வாக்களிப்பு நடத்தப்படுவதும் கிடையாது. கல்விமான்களும், பிரபுக்களும் கூட்டன்கூடித் தங்கள் அபிப்பிராயத்தை அரசாங்கத்துக்கு அறிவிப்பது வழக்கம்.

இறுதியில் இராமநாதனை வெற்றியடையச்செய்தனர். 27.08.1879இல் இராமநாதன் தனது 27வது வயதில் அரச சபைக்கு அன்றைய தேசாதிபதி லோங்டனால் (James Robert Longden) நியமிக்கப்பட்டார்.

பொன்னம்பலத்தின் தெரிவு அறிவித்ததும் பிறிற்ரோ தனது முறைப்பாட்டை காலனித்துவ செயலாளருக்கு அனுப்பி வைத்திருக்கிறார். 18.06.1879 திகதியிட்ட அவரின் இந்த முறைப்பாட்டுக் கடிதத்தில் பொன்னம்பலத்தின் நியமனத்தை ரத்து செய்து மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளிக்குமாறு வேண்டியிருக்கிறார். தான் நாடளாவிய ரீதியில் நடத்திய கூட்டங்கள் குறித்தும், அதில் கிடைத்த ஆதரவு குறித்தும் அவர் விளக்கியிருந்தார். பெரும்பாலான தமிழர், முஸ்லிம்கள், மலே இனத்தவர்கலின் ஆதரவு தனக்கு இருக்கிறது என்பதை அவர் விளக்கினார். ஆனால் பொன்னம்பலத்தை தெரிவு சரியானது என்று தேசாதிபதி அறிவித்திருப்பதை குறிப்பிட்டு அந்த பதில்; பிறிற்ரோவுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது.(22)

வீ.முத்துகுமாரசாமி எழுதிய "நவீன இலங்கையின் சிற்பிகள்" (FOUNDERS OF MODERN CEYLON) என்கிற நூலில் சேர் பொன் இராமநாதனைப் பற்றிய விரிவான ஒரு கட்டுரை காணக்கிடைகிறது. அக்கட்டுரையில் இராமநாதனின் அரசியல் நுழைவின் பொது நிகழ்ந்த சர்ச்சைகளும் தொகுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அறிக்கைகள், பத்திரிகைக் கட்டுரை, கூட்டக் குறிப்பு என்பவையும் அதில் உள்ளடக்கப்பட்டிக்கின்றன. ஆனால் அவை இராமநாதனுக்கு சாதகமான விபரங்களை மட்டுமே தொகுத்திருப்பதைக் காண முடிகிறது. பிறிற்ரோ தரப்பு விபரங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டிருப்பதை எவரும் அடையாளம் காண முடியும்.

அந்நூலில் உள்ள  ஒரு சுவாரசியமான ஒரு கட்டுரையொன்றைப் பற்றி குறிப்பிட்டாக வேண்டும். 15.05.1879 The Observer பத்திரிகையில் நாட்டுக்கோட்டை செட்டிமார் இராமநாதனை ஆதரித்து ஒரு அறிக்கையை வெளியிடுகின்றனர். நாட்டுக்கோட்டை செட்டிமார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இராமநாதனை ஆதரித்து கூட்டம் நடத்தி கையெழுத்துக்களையும் திரட்டியிருப்பதாகவும், இராமநாதனின் பூர்வீகம், குமாரசுவாமி அவர்களின் பங்களிப்பு, அவரின் பரம்பரை என்றெல்லாம் காரணங்களை அடுக்கி இராமநாதனை முத்துக்குமாரசாமியின் இடத்துக்கு நியமிக்கும்படி கோருகிறது அந்த அறிக்கை.

இதில் உள்ள வேடிக்கை என்ன வென்றால் 1836 இல் தெரிவான தமிழர்களின் இலங்கையின் நாடாளுமன்றப் பிரதிநிதியாக (தமிழ்-முஸ்லிம்களின் முதலாவது நாடாளுமன்றப் பிரதிநிதியும் அவர் தான்.) கேட் முதலியார் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி நியமிக்கப்பட்டார். 1830 ஆம் ஆண்டு தலைநகர் கொழும்பில் “கிறிஸ்தவரல்லாத தமிழர்”களின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் குமாரசுவாமி. மேல்மாகாண கச்சேரியில் இதற்கான தேர்தல் நடந்தது. சாராய உற்பத்தித் தொழிலில் புகழ்பெற்றவரான தியாகப்பா குமாரசுவாமியோடு போட்டியிட்டார். அவர் செட்டி சமூகத்தைச் சேர்ந்த பெரும்புள்ளி. அத்தேர்தல் ஒரு வகையில் சைவ வெள்ளாளருக்கும், சைவ செட்டிமாருக்கும் இடையில் நிகழ்ந்த ஒரு அமைதியான மோதல் என்று தான் கூறவேண்டும். கொழும்பில் நெடுங்காலமாக செட்டிமாருக்கும் சைவ வேளாளர்களும் இடையில் ஒரு மோதல் இருந்துகொண்டிருந்தது. ஆனால் அதே செட்டிமார் சமூகம் முதலியார் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமியின் வழிவந்த சைவ வேளாள வாரிசான சேர் பொன்னம்பலத்தின் நியமனத்துக்காக பிற்காலத்தில் போராடியிருக்கிறது.

சி.கணபதிப்பிள்ளை கூறுவது...
சேர் பொன் இராமநாதனின் நியமனம் நிகழ்ந்து அரை நூற்றாண்டுக்குப் பின்னர் நாவலர் நினைவு தினத்தன்று (15.12.1946) வெளியான ஈழகேசரியில் அந்நிகழ்வைப் பற்றி வெளியான ஒரு கட்டுரையைக் காண நேர்ந்தது. அந்தக் கட்டுரை தான் என்னை இந்தக் கட்டுரையை எழுதத் தூண்டியது. (இந்தக் கட்டுரையின் பின்னிணைப்பாக அதனை இணைத்திருக்கிறேன்.) அக்கட்டுரையை எழுதியவர் சி.க. என்று காணப்படுகிறது. அது பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையைக் குறிப்பிடுவதாக இருக்கலாம்.

சி.கணபதிப்பிள்ளை இதே சம்பவத்தை வேறு வடிவத்தில் எழுதியதாக ஒரு கட்டுரை “நாலவர் எழுந்தார்” என்கிற தலைப்பில் இலங்கையின் 10 ஆம் ஆண்டு தமிழ் இலக்கிய பாட நூலில் காணப்படுகிறது. அதில் இப்படிக் குறிப்பிடுகிறார்.
“சேர் பொன் இராமநாதன் துரைக்கு அப்போது இருபத்தைந்து வயசு. சிரித்த முகம்; தங்க சொரூபம்; அப்பொழுதுதான் சென்னைப் பட்டணத்திலிருந்து படித்து விட்டு வந்தவர். யாழ்ப்பாணத்தவரேயாயினும் யாழ்ப்பாணத்தவர்க்கு அவரைப் பற்றி ஒன்ருந்தெரியாது. யாழ்ப்பாணம் வந்திருக்கிறார்.
பிறிற்றோ என்பவர் பிரசித்தி பெற்ற பழுத்த வழக்கறிஞர். அக்காலத்து சட்ட நிபுணர்களுள்ளே தலைசிறந்தவர் அவர். இலங்கயிலேயுள்ள எல்லாரும் அவரை அறிவர். கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் அவருக்கு பெரிய பேர். பாரிய வழக்குகளுக்கும் அப்பீல்களுக்கும் அவரை நியமிப்பது வழக்கம். அவருக்கு யாழ்ப்பாணத்தில் அளவு கடந்த செல்வாக்கு அந்த நாட்களில் இருந்தது....”
இப்படி தொடரும் அந்த கட்டுரையில் இன்னோர் இடத்தில் நாவலருக்கும் பிறிற்ரோவுக்கும் உள்ள பகைக்கான காரணத்தையும் குறிப்பிடுகிறார்.

அதாவது நல்லூர் கந்தசுவாமி கோவில் வழக்கில் பிராமணர்களுக்கு சார்பாக நாவலர் இயங்கிக் கொண்டிருக்கும் போது கோவில் நிர்வாகத்துக்கு சார்பாக பிறிற்ரோ வாதிட்டாராம். ஒரு கட்டத்தில் பிறிற்ரோ தான் பிரமாணர்களுக்கு வெற்றி கிட்டகூடியவகையில் வழக்கி நடத்தி வைப்பதாகவும் பதிலுக்கு தன் வெற்றிக்கு நாவலரை சார்பாக இருக்கும்படியும் நாவலரின் சகாக்களிடம் கேட்டதாகக் குறிப்பிடுகிறார்.

நாவலர்: பிறிற்ரோவின் நேர்மையின்மையை முன்வைத்துத் தான் அவரை எதிர்த்தாக காட்ட முடிக்கிறார்.

சி,கணபதிப்பிள்ளை இதனை ஒரு ஊகமாகத் தான் அதில் குறிப்பிடுகிறார். அவரது வசனத்தில்
“பிறிற்ரோ நேரிற் சில கடிதங்களில், தந்திகளில் ஒருவாறு குறிப்பிட்டும் இருந்தார் போலும்”
இப்படி “போலும்” என்கிற வார்த்தைகளைத் தான் கணபதிப்பிள்ளை பயன்படுத்துகிறார்.

“நாவலர் எழுந்தார்” என்கிற இதே கடிதத்தில் இறுதியில்
“ஒரே ஒரு குறிப்பு : எனக்கிந்தக் கதையை ஆயிரம் முறை சொன்னவர்கள் கூட்டத்தை நேரிற் கண்ணால் கண்டவர்களும், அக்கூட்டத்தொடு தொடர்புபட்டவர்களும். நாவலர் அவர்களின் தமையனார் புத்திரரும், அவர்கள் சரித்திரத்தை எழுதியுள்ளவர்களும், என் ஆசிரியர்களுமாயுள்ளவர்கள்...”
என்கிறார்.

நாவலர் வழிபாட்டு மரபுடைய தமிழ்-யாழ்-சைவ-வேளாளத்தனம் என்பது வரலாறை அதன் பின் பதிவு செய்யும் சலுகை பெற்ற தரப்பாக இருந்ததை நாம் சொல்லித தெரியவேண்டியதில்லை. எனவே இந்த விடயங்களைப் இதுவரை பதிவு செய்தவர்களை பக்க சார்பாக இருக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளதையும் இங்கு கவனத்தில் எடுக்க வேண்டியுள்ளது.

இராமநாதனும் பிறிற்ரோவும் உறவினர்கள்
மானிப்பாயைச் சேர்ந்த பெரும் செல்வந்தரான ஈ.நன்னித்தம்பியின் மகள்களைத் தான் இராமநாதனும் பிறிற்ரோவும் திருமணம் முடித்தார்கள். செல்லாச்சி அம்மாளை பொன்னம்பலம் இராமநாதன் (1874இல்) மணமுடித்தார். அடுத்த மகள் தங்கம்மாவை பிறிற்ரோ (1866இல்) மணமுடித்தார். அந்த வகையில் இராமநாதனும் பிறிற்ரோவும் நெருங்கிய உறவினர்கள். பிறிற்ரோவின் மகன் சீ.எம். பிறிற்ரோ (C. M. Brito) பிற்காலத்தில் புகழ் பெற்ற உயர்நீதிமன்ற வழக்கறிஞராக ஆனார். அவருக்கு வக்கீல் தொழிலை பழக்கியவர் சேர் பொன் இராமநாதன்.(23)
பிரபாகரனின் கொள்ளுப்பாட்டன் வல்வெட்டித்துறை திருமேனியார் வெங்கடாசலம்பிள்ளை பிறிற்ரோவை அரசியலுக்கு வருவதை ஆதரித்தார். அதைத் தோற்கடித்து ஒரு சைவ வெள்ளாளனைத் தான் கொண்டுவரவேண்டும் என்று  ஆறுமுக நாவலர் தன் முழு முயற்சியுடன் இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவந்தார். இந்த நிகழ்ச்சி நிகழாமல் இருந்திருந்தால் இலங்கையின் வரலாறு வேறொரு அரசியல் பக்கத்தை திருப்பியிருக்கக் கூடும்.

கிறிஸ்தவரான பிறிற்ரோவை ஆதரித்து கிறிஸ்தவர்களும் பொன்னம்பலத்தை ஆதரித்து சைவர்களைத் திரட்டி ஆறுமுக நாவலரும் கூட்டங்களை நடத்தினார். பொன்னம்பலம் சைவத்தையும், தமிழையும் அதன் பண்பாட்டிலும் ஆர்வமுடையவர் என்று ஆறுமுக நாவலர் பிரச்சாரம் செய்தார். நாவலருடன் சேர்ந்து ஆர்னோல்ட் சதாசிவம்பிள்ளை (J.R.Arnold), கறோல் வைரமுத்து, விஸ்வநாதப்பிள்ளை(24) போன்ற பெரும் பிரமுகர்களும் பிறிற்ரோவுக்கு எதிராகக் களமிறங்கினார்கள். தமிழர் அரசியலில் குறிப்பாக வடக்கு அரசியலைப் பொறுத்தவரை தமிழ் மக்கள் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்ட முதல் சந்தர்ப்பம் அது என்கிறார் டி.சபாரத்தினம்.(25) 

நாவலர் ஆங்கில அரசாங்கத்துக்கு எழுதிய கடிதத்தில் தமிழர்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்ள ஆர்வமுடையவர்கள் அதே வேளை அவர்கள் இந்துக்களாக தம்மைப் பேண இடமளிக்க வேண்டும் என்றார். ஒடுக்கப்பட்ட சாதியினரும் சமமாக ஒரு வகுப்பில் கற்பது பற்றிய எதிர்ப்பையே நாவலர் அப்படி காட்டினார் என்று ராஜன் ஹூல் குறிப்பிடுகிறார்.(26) இப்படியான உள்ளுணர்வின் வெளிப்பாடே இராமநாதன் என்கிற சைவ வெள்ளாளனை அரசியலுக்குள் புகுத்தி மற்றவர் வரவிடாமல் தடுக்கப்பட்டது.

பொன்னம்பலம் இராமநாதன் நாவலரின் சித்தாந்தத்தை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் சென்ற நாவலருக்கு சரியான சிஷ்யனாக இருந்திருக்கிறார் என்றே கூற வேண்டும். பிற்காலத்தில் டொனமூர் ஆணைக்குழு வந்திருந்தபோது  சர்வஜன வாக்குரிமையை அனைவருக்கும் ஒரே நேரத்தில் வழங்குவதற்கு ஆங்கிலேயர்கள் முன்வந்த போது அதை எதிர்த்தவர் இராமநாதன். பெண்களுக்கும், ஒடுக்கப்பட்ட சாதியினருக்கும், படிக்காதவர்களுக்கும், வசதியில்லாதவர்களுக்கும் வாக்குரிமை அளிக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அதுபோல முஸ்லிம்களின் தனித்துவமான அடையாளத்தை எதிர்த்ததன் மூலம் அவர்களுக்கு தனியான பிரதிநிதித்துவம் தேவையில்லை என்றும், தமிழர் அடையாளத்தின் கீழேயே அவர்களின் பிரதிநிதித்துவம் தொடரலாம் என்றார்.

அவர் அன்று வைத்த அக்கருத்துக்கள் பல இடங்களிலும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியர்களை ஏனைய உயர்சாதி ஆசிரியர்களிடமிருந்து பிரித்து தனித்து உணவுண்ணச் செய்த சம்பவத்தை பேராசிரியர் கா.சிவத்தம்பி குறிப்பிட்டு காட்டுகிறார்.(27)  நாவலரின் இந்துக் கல்லூரியில் 1960கள் வரை வெள்ளாளர் அல்லாத மாணவர்கள் அனுமதிக்கப்படவில்லை. (ராஜன் ஹூல்)

இராமநாதனின் குடும்பத்தவர்கள் கோல்புறுக் அரசியல் சீர்திருத்தக் காலத்தில் இருந்து அரசியலில் பிரதிநிதித்துவம் வழங்கி வந்திருக்கிறார்கள். முதன் முதலாக தமிழர்களதும் முஸ்லிம்களதும் பிரதிநிதியாக 30.10.1830 இல் பிரித்தானிய அரசால் முதலியார் ஆறுமுகத்தாப்பிள்ளை குமாரசுவாமி (Coomaraswamy, Arumuganathapillai 1783 - 1836)(28) நியமிக்கப்பட்டார். அவருக்குப் பின் அவருடைய மருமகன் எதிர்மன்ன சிங்க முதலியாரும், அவருக்குப் பின் குமாரசுவாமி முதலியாரும், பின்னர் அவரின் மைந்தர் முத்துக் குமாரசுவாமியும், அவருக்குப் பின்னர் அவரின் மருமகன் இராமநாதனும், அவருக்குப் பின்னர் குமாரசுவாமியும் நியமிக்கப்பட்டார்கள்.(29) இலங்கையின் அரசியலில் /அரசாங்க சபையில் அரை நூற்றாண்டு காலம் பணியாற்றினார் இராமநாதன்.(30)

பிறிற்ரோவின் வரலாறு பங்களிப்பு இலங்கைக்கு, குறிப்பாக தமிழர்களின் முதுசத்துக்கு மறுவுயிர்ப்பை வழங்குவதில் பங்களித்திருக்கிறது. கிறிஸ்தோபர் பிறிற்ரோ 26.12.1910ஆம் ஆண்டு திருவானந்தபுரத்தில் இறந்ததாக அறியக்கிடைக்கிறது. 

பின்னிணைப்பு:
“பிரதிநிதித் தெரிவில் நாவலர் பெருமான்” (ஈழகேசரி 15.12.1946)
பொன். இராமநாதனுக்கு இருபத்தைந்து வயசு. யாழ்ப்பாணத்துக்குப் புத்தம் புதிய ஒரு சிங்கக் குருளை. ஈழகேசரி ஆகவில்லை. பிறிற்ரோ பழுத்த பெரிய அப்புக்காத்து, பலரும் அறிந்த பஞ்சதந்திரத் கிழநரி.

இலங்கைப் பிரதிநிதித் தெரிவு. பிடர் ரோமம் எட்டிப்பாராத சிங்கக்குட்டிக்கும், பல்லுப்போலேமுரசுபெலத்த கிழநரிக்கும் பலத்த போட்டி. நரிக்குஞ்சுகள் - நியாய துரந்தரக்குட்டிகள் -- நன்றாகக் குருவி நுழைந்தன, இன்றைக்கென்ன, அன்றைக்கென்ன அவைகள் அப்படிக் தான் இனத்தை இனம் காத்து நின்றன. பிறிற்ரோவின் கை பெலத்துக் கொண்டது. இது ஒருபடி இருக்க,

ஒரு கதை: நல்லூர்க் கந்தசுவாமி கோயில் முதலாளிக்கும், பிராமணர்களுக்கும் கோயில் விஷயமாக ஒரு பெரிய வழக்கு. முதலாளிக்கு ஏற்பட்ட அப்புக்காத்து பிறிற்ரோ. பிராமணர்களுக்குப் பக்கத்துனை ஆறுமுக நாவலர்.

இப்பொழுது இலங்கைக்கு என்ன காலமோ, அப்படித் தான் அப்பொழுதும் இலங்கைக்குத் தெரிவுகாலம். இரகசியத் தந்திகள் இரகசியத் தபால்கள் கொழும்பிலிருந்து, பிறிற்ரோவிடமிருந்து நாவலருக்குப் பறந்துவந்தன. வேறாகவும், கரிமூட்டைகள் பல நாவலரிடம் நேரில் வந்து -அடை கிடந்து இரகசியம் பேசி உடைந்து போயின. சில கூழாயின.

நாவலர் பிரதிநிதித் தெரிவில் பிறிற்ரோவுக்குத் துணை புரியவேண்டியது. பிறிற்ரோ, கோயில் வழக்கில், முதலாளிக்கு ஏற்பட்டபடி இருந்து கொண்டே, முதலாளிக்குப் பாதகமாக, பிராமணர்களுக்குச் சாதகம் செய்துவிடுவது. இந்த நம்பிக்கைத் துரோகந்தான் அந்தப் பரமரகசியம். ஐயோ பாவம்! இது தெரிவுகாலங்களின் கோலம். ஒளிக்க அறியாதவர்கள் அதிகாரி வீட்டில் ஒளித்தது மிகப் பழைய கதை. இந்தக் கதை இருக்க,

வண்ணார்பண்ணையிலே நாவலர் வித்தியாசாலையில் பிரதிநிதித் தெரிவுபற்றி ஒரு பகிரங்க கூட்டம் ; இராமநாதனின் கட்சிக் கூட்டம். கூட்டத்துக்குத் தலைவர் சுதுமலை வைரவநாதர் குமாரர் விசுவநாதப்பிள்ளை. இவர், இளமையில் கிறித்தவ கல்லூரியிற் படித்துக் கிறித்தவராய், 'கறல்' என்ற கிறித்துவப் பெயர் பெற்று, சமயவிஷயம்களில், நாவலரை எதிர்த்து நின்று, பலத்த வாதங்கள் பல செய்தவர். பிறகு சிதம்பரத்திலே நடராஜர் சந்நிதியில், பொன்னூசி காய்ச்சித் தமது நாவில் சுடுவித்துக்கொண்டு, பழையபடி சைவத்துக்குவந்து, நாவலருக்குச் சீஷர் ஆனவர். சென்னைச் சர்வ கலாசாலையார் முதன் முதல் நடத்திய பி.ஏ. பரீஷையில் சித்தியெய்திய இருவரில் ஒருவர் இவர். மற்றவர் சி, வை. தாமோதரம்பிள்ளை. பிள்ளைக்கு இவர் உபாத்தியாயர். கணித சாஸ்திரத்தில் மகா பண்டிதர். சம்ஸ்கிருதத்திலிருந்து வீச கணிதத்தை, அழகு ஒழுகுகின்ற தெளி தமிழில் பெயர்த்துத் தந்தவர்; மகா விவேகி, இவர் அன்றைய கூட்டத்துக்குத் தலைவர்.

கூட்டத்துக்குத் தலைமை வகி க்க வேண்டியவர் நாவலர். அவருக்கு அப்பொழுது காச நோய். மூச்சுக் கொய்து வாங்குகின்றது. ஒருபுறத்தில் ஒரு தூணுக்கு அருகில், ஒன்றன் மேலொன்றாகப் பல தலையணைகளை அடுக்கி, அவற்றின் மேல் முழங்கைகளை ஊன்றிக்கொண்டு, கூட்ட நடவடிக்கைகளை நோக்கியபடி நாவலர் இருக் கின்றார். விசுவநாதபிள்ளை கூட்டத்தை நடத்துகின்றார்.

எதிர்க்கட்சி, கூட்டத்துள் நுழைகின்றது. கொழும்பிலிருந்து வந்த பெரிய வேங்கைகள் சிறிய சிறுத்தைகள் - உறுமிப் பாய்கின்றன. வாதப் பிரதிவாதம், சண்டப்பிரசண்டமாய் ஒன்றை ஒன்று மோதுகின்றது. விசுவநாதபிள்ளை சிறிது நிலைகலங்கினார். நிலைமை மோசமாகிறது, அரைக்கணம்.

தலையணைகள் அங்கும் இங்கும் பறந்தன. காசம் அதற்கு முன்னமே பறந்தது. நாவலர் எழுந்தார். 'சற்றே விலகு பிள்ளாய்' என்றொரு வார்த்தை நாவலர் வாயிலிருந்து வந்தது. நந்தன் கீர்த்தனம் அல்ல. விசுவநாதபிள்ளை விலகி இடங் கொடுத்தார். நாவலர் மேடையில் ஏறினார்! பிடர் ரோமங்கள் சிலிர்த்தன. எடுத்து வாடா தந்தி தபாற் கட்டுக்களை' என்று காஜ்ஜனை செய்தார். அந்தரங்க கடிதங்கள் - தந்திகள் - பகிரங்கத்துக்கு வந்தன. அவைகளை ஒவ்வொன்றாக வாசித்து, பிறிற்ரோவின் துரோக சிந்தனைகளை வெளியில் எடுத்து வீசி, ஆறுமுகநாவலர் கர்ஜ்ஜனை செய்தார்.

அங்கே வந்து பபுகுந்த பெரியவேங்கைகள் - சிறிய சிறுத்தைகள்- கிழ நரிகள் -குட்டிகள், குஞ்சுகள், குருமன்கள் - எல்லாம், நா இழந்து வலி தொலைந்து, 'பேச்சு பேச்சென்றும் பெரும்பூனை வந்தக்கால், கீச்சுக்கிச்சென்னும் கிளி' களாய் நாவலர் சொல்வதையே தாமும் சொல்லிக்கொண்டு, மெள்ள மெள்ள ஒதுங்கி மறைந்து தொலைந்து போயின. கூட்டம் இனிது நடந்து முடிந்தது. இந்தச்சம்பவம்இலங்கை எங்கும் பரந்தது.

'பிறிற்ரோ அத்தமயனகிரியை அடைந்தார். இளவள ஞாயிறு கடலில் எழுந்தது. கீழ்வானம் பொன்மயமானது. நீலத் திரைகள் அதனைத் தீண்டிச் சிவத்தன. பொன். இராமநாதன் இலங்கையின் ஏகப் பிரதிநிதியாயினார். ஐம்பது யாண்டுகள் --ஒரு நூற்றாண்டின் அரைவாசிக்காலம் - சட்ட சபையில், பிரதிநிதிகள் மத்தியில் நடு நாயகமாய் விளங்கினார் சேர் பொன். இராமநாதன்.

இன்றைக்கும் சரி! அந்தச் சட்டசபை முன்றிலில் - அது உந்நத உருவில் -அசையாத சிலையில்-

முறுவல் எழுந்து தவழும் முகம்-அன்றலர்ந்த முகம் - அழகொழுகும் முகம் - யாவருக்கும் அறிமுகம்! யாவருடைய முகம்.

காமஞ் செப்பாது கண்டது மொழிமோ! இலங்கைக்கு இன்னும் என்வளவு காலம் உண்டு! இராமநாதனுக்கும் அவ்வளவு காலம் உண்டு.

இலங்கைக்கு அழிவு இல்லை!

இராமநாதனுக்கும் அழிவு இல்லை!

அந்த அமர வஸ்து  - சேர் பொன், இராமநாதன் - அன்றொருநாள் - இலங்கைப் பிரதிநிதித்தெரிவில், ஆறுமுக நாவலர் பெருமான் தேர்ந்தெடுத்துத் தந்த ஈழகேசரி!

தக்கார் தகவில ரென்பதவரவர்
எச்சத்தாற் காணப்படும்.
நாவலர் வாழ்க !
அவருடைய நேர்மை நிலவுக!
அடிக்குறிப்புகள்
  1. DICTIONARY OF BIOGRAPHY of the Tamils of Ceylon Compiled by S.Arumugam, 1997
  2. CENTENARY VOLUME of the Colombo Municipal Council 1865-1965 - By H. A. J. HULUGALLE - Published by the Colombo Municipal Council (september 1965)
  3. Ferguson's Ceylon Directory 1905-1906 (P.868)
  4. மாமனார் நன்னித்தம்பி எழுதிக்கொடுத்த சொத்துக்கள் பிற்காலத்தில் பிள்ளைகளின் சொத்துத் தகராறு வழக்கு வரை சென்றது குறித்த வழக்கு விபரங்களில் இந்த சொத்துவிபரங்கள் காணக்கிடைகின்றன. (BRITO v. MUTHUNAYAGAM. 331—D. C. Negombo, 9,946. http://www.lawnet.gov.lk/wp-content/uploads/2016/11/006-NLR-NLR-V-19-BRITO-v.-MUTHUNAYAGAM.pdf
  5. பிற்காலத்தில் “யாழ்ப்பாண வைபவ மாலை”யை மீண்டும் வெளியிடுவதற்காக பிட்டிஷ் நூலகம் சென்று பிரதியெடுத்துக்கொண்டு வந்து முதலியார் குல சபாநாதனால் பதிப்பிடப்பட்டது.  மூல நூல் மயில்வாகனப் புலவரால் 1736 இல் வெளியானதாக பிறிற்ரோவின் நூலில் குறிப்பிடுகிற போதும் குல சபானாதனின் நூலில் “யாழ்ப்பாண வைபவ மாலை” அதற்கும் சுமார் 50 வருடங்களுக்கு முன்னரே எழுதப்பட்டிருக்கலாம் என்றும் குறிப்பாக மயில்வாகனப் புலவர் வாழ்ந்த காலம் குறித்த தகவல்களில் உள்ள முரண்பாடுகளை ஆராய்வதுடன் மயில்வாகப்புலவர் 18ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை வாய்ந்திருக்க வேண்டும் என்பதை தர்க்கபூர்வமாக விவாதிக்கப்படுகிறது. (முதலியார் குல சபாநாதன் - யாழ்ப்பாண வைபவ மாலை -  “ஈழகேசரி” அதிபர் திரு.நா.பொன்னையா அவர்களால் பதிப்பிக்கப்பெற்றது - 1949) 
  6. மாதகல் மயில்வாகனப் புலவர் எழுதிய “யாழ்ப்பாண வைபவ மாலை” – முதலியார் குல.சபாநாதன் அவர்களால் எழுதப்பட்ட ஆராய்ச்சிக் குறிப்புகள்.- இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் - 1995
  7. யாழ்ப்பாண வைபவ விமர்சனம் - ஞானப்பிரகாசர், சுவாமி - Achchuvely - The Gnanaprakasa Yantra salai - 1928
  8. Ceylon Antiquary And Literary Register Vol.6 (1920-1921) by Office Of The Times Of Ceylon - 1920
  9. C. BRITO - The Yalpana-vaipava-malai, or, The History of the Kingdom of Jaffna - Translated from the Tamil with an appendix and a glossary - - Asian educational services New Delhi - Madras - 1999. (Frist Published: Colombo, 1879)
  10. Ibid - xxxiv
  11. Martyn's Notes on Jaffna: Chronological, Historical, Biographical - John H.Martyn - Asian Educational Services, New Delhi, India - 1923
  12. “BOOKS ON CEYLON” - Ceylon Antiquary And Literary Register Vol.6 (1921-1922) by Office Of The Times Of Ceylon – 1921 (p.48)
  13. JOURNAL, R.A.S. (CEYLON). [VOL. XIV. - 1897
  14. A catalogue of the Tamil books in the library of the British museum, compiled by L. D. Barnett - 1909
  15. இலங்கையில் செட்டிமார் ஒரு தனித்த சாதியாக இயங்கியிருப்பதை நாம் காணலாம். வெள்ளாளருக்கு நிகராக ஒரு ஆதிக்க சாதியாக இயங்கியமை பற்றிய விபரங்கள் ஏராளமாக உண்டு. யாழ்ப்பாணம் மரியராசா சுப்ரீம் கோர்ட்டுக்கு 02.09.1830 அன்று திகதியிட்டு அனுப்பிய பெட்டிசன், தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்கள் தோடுகள் அணிவதை அனுமதித்ததை எதிர்த்து வெள்ளாள செட்டி சாதியினர் விண்ணப்பித்திருப்பதைப் பற்றிய ஆதாரங்களை (Vellala Caste and Chetty Caste against permitting the Low caste to wear ear rings) கலாநிதி முருகர் குணசிங்கம் தொகுத்த PRIMARY SOURCES FOR HISTORY OF THE SRI LANKAN TAMILS WORLD-WI DE SEARCH என்கிற நூலில் விளக்குகிறார்.
  16. THE HISTORY OF SRI LANKA -Patrick Peebles - Greenwood Press - London (2006)
  17. People of Sri Lanka, “Sri Lankan” - Our Identity “Diversity” - Our Strength, Ministry of National Coexistence, Dialogue and Official Languages - 2017
  18. Founders of Modern Ceylon (Sri Lanka) EMINENT TAMILS - Vol I. Parts I & II - UMA SIVA PATHIPPAKAM - 1973
  19. ச. தனஞ்சயராசசிங்கம் “நாவலர் பணிகள்” - கொழும்பு தமிழ்ச் சங்கம் 2011
  20. Founders of Modern Ceylon (Sri Lanka) EMINENT TAMILS - Vol I. Parts I & II - UMA SIVA PATHIPPAKAM - 1973- p-36
  21. The life of Sir Ponnambalam Ramanathan – by M. Vythilingam, B. A. – Vol -1 – 1971.
  22. சேர் பட்டம் பெற்ற முதலாவது ஆசிய நாட்டைச் சேர்ந்தவர். அவரது தந்தை ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி 1835 மே 30 முதல் முதல் 1836 வரை முதலாவது சட்டவாக்கப் பேரவையில் உத்தியோகப்பற்றற்ற முதலாவது தமிழர் பிரதிநிதியாக இருந்தவர். ஆறுமுகம்பிள்ளை கண்டி கைப்பற்றப்பட்டு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்ட நிகழ்வில் ஆங்கிலேயர்களுக்கு மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றியவர். ஆளுநர் ரொபர்ட் பிரவுறிக் அதற்காக அவருக்கு தங்க மோதிரமொன்றையும் பரிசளித்திருக்கிறார்.
  23. Founders of Modern Ceylon (Sri Lanka) EMINENT TAMILS - Vol I. Parts I & II - UMA SIVA PATHIPPAKAM - 1973
  24. Arnold wright - Twentieth Century Impression of Ceylon – Lloyd’s greater Britain publishing company limited (1907)
  25. விஸ்வநாதப்பிள்ளை : மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற முதல் இருவரில் ஒருவர். மற்றவர் சி.வை.தாமோதரம்பிள்ளை. ஆரம்பத்தில் கிறிஸ்தவக் கல்லூரியில் கற்று கிறிஸ்தவராக ஆகி கறோல் என்கிற பெயரையும் சூட்டிக்கொண்டவர். ஆரம்பத்தில் நாவலரை எதிர்த்து வாதங்களும் செய்தவர். பின்னர் மீண்டும் சைவத்துக்குத் திரும்பி நாவலரின் நல்ல நண்பராக ஆனவர். 
  26. “Sri Lanka Tamil Struggle” - Chapter 15: Tamils Demand Communal Representation by T. Sabaratnam, November 16, 2010
  27. “C. W. Thamotharampillai, Tamil RevivaIist:” The Man Behind the Legend of Tamil Nationalism S. Ratnajeevan H. Hoole , An International Centre for Ethnic Studies Lecture November 17, 1997 - ICES Auditorium - Colombo
  28. Sri Lankan Tamil society and politics / Karthigesu Sivathamby - Madras : New Century Book House, 1995
  29. A. Jeyaratnam Wilson - Sri Lankan Tamil Nationalism: Its Origins and Development in the Nineteenth Centuries – Hurst & Company, London - 2000
  30. க.சி.குலரத்தினம் - நோர்த் முதல் கொபல்லா வரை – ஆசீர்வாதம் அச்சகம் – புத்தகசாலை / யாழ்ப்பாணம்1966 
  31. Martyn's Notes on Jaffna: Chronological, Historical, Biographical - John H.Martyn - Asian Educational Services, New Delhi, India - 1923
நன்றி - காக்கைச் சிறகினிலே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக