செவ்வாய், 18 ஜனவரி, 2022

பிடிஆர் சொன்ன காரணம்.. ராஜினாமா கடிதத்தில் இருப்பது என்ன? டிஆர்பி ராஜா நியமனத்தில் நடந்தது என்ன?

 Shyamsundar -  Oneindia Tamil :  சென்னை; திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநிலச் செயலாளராக டி.ஆர்.பி.ராஜா நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.
இது தொடர்பான தகவல்கள் முன்பே வெளியான நிலையில் திமுக சார்பாக அதிகாரப்பூர்வமாக இப்போதுதான் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு நிதி அமைச்சராக இருக்கும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் திமுகவில் ஐடி பிரிவு செயலாளராகவும் பதவி வகித்து வந்தார்.
இந்த நிலையில்தான் சமீபத்தில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பதவியை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ராஜினாமா செய்திருப்பதாக தகவல் வெளியானது.
ஆனால் இந்த தகவல் அப்போது உறுதிப்படுத்தப்படவில்லை. கட்சி தலைமையும் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதையும் அப்போது வெளியிடவில்லை.


இந்த பதவி மாற்றம் தொடர்பாக நிறைய தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது. அதில் முதல் விஷயம், பிடிஆர் மீது தலைமை கொஞ்சம் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது. அதாவது ஐடி பிரிவை இவர் சரியாக கவனிக்கவில்லை. அதிமுக, பாஜக போன்ற கட்சிகளில் ஐடி பிரிவு சிறப்பாக செயல்படுகிறது. ஆனால் திமுகவில் இதை பிடிஆர் புள்ளி விவரங்களை சேமிக்கும் டேட்டா டீம் போல நடத்துகிறார் என்று தலைமை அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது.


அதேபோல் பிடிஆரும் சில இடங்களில் ஐடி பிரிவு என்பது டேட்டா கலெக்ட் செய்யும் பிரிவுதான் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதனால் திமுகவின் ஐடி பிரிவு சமூக வலைத்தளங்களில் சரியாக செயல்படவில்லை என்று விமர்சனங்கள் கட்சியினருக்கு இடையே வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஐடி பிரிவை புதுப்பிக்கும் முயற்சியில் திமுக தலைமை இருப்பதாக கூறப்பட்டது. இவரின் பதவி மாற்றத்திற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். அதேபோல் நிதி அமைச்சர் என்ற வலுவான பதவியை பிடிஆர் வகிக்கிறார்.

அவருக்கு கட்சியிலும் இன்னொரு முக்கிய பதவியை தருவது சரியாக இருக்காது என்று தலைமை கருதியதாக கூறப்படுகிறது. இதனால் அமைச்சர் பதவியில் இல்லாத இன்னொரு முக்கிய எம்எல்ஏவிற்கு இந்த பதவியை கொடுக்கலாம் என்று தலைமை முடிவு செய்ததாக கூறப்படுகிறது. நிதி அமைச்சரின் பனி சுமையை குறைக்க வேண்டும்.. பட்ஜெட் கூட்டத்தொடர் வேறு வருகிறது.. நிறைய வேலை இருக்கும்.. ஐடி விங்கில் இளம் ரத்தம் பாய்ச்ச வேண்டும் என்று திமுக இந்த முடிவை எடுத்து இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் கட்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்புப்படி பிடிஆர் தாமாக முன்வந்தே ராஜினாமா செய்துள்ளார்.. அவர் நீக்கப்படவில்லை.


மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பதவியை பெற வாய்ப்பு உள்ளதாக கடந்த வாரமே தகவல்கள் வந்தன. அமைச்சரவை அறிவிக்கப்பட்ட போதே டிஆர்பி ராஜாவிற்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது அவருக்கு அமைச்சரவையில் இடம் தரப்படவில்லை. இதனால் கண்டிப்பாக கட்சியில் இவருக்கு முக்கிய பதவி வழங்கப்படும் என்று கூறப்பட்டது. அதன்படியே திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநிலச் செயலாளராக டி.ஆர்.பி.ராஜா நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.

இது தொடர்பான ராஜினாமா கடிதத்தில் பிடிஆர் தனது ராஜினாமாவிற்கான காரணத்தை குறிப்பிட்டு இருக்கிறார். அதில், அரசுப் பணிகளில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்பதால் கட்சி பொறுப்பில் இருந்து விலகுவதாக குறிப்பிட்டு இருக்கிறார். கட்சியில் ஐடி பிரிவில் பிடிஆர் மாற்றப்பட்டாலும் மகேந்திரன் உள்ளிட்ட மற்ற நிர்வாகிகள் மாற்றப்படவில்லை. அவர்களுடன் இணைந்து புதிய மாநில செயலாளர் டிஆர்பி ராஜா பணியாற்றுவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக