சனி, 8 ஜனவரி, 2022

நீட் விலக்கு: இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்!

 மின்னம்பலம் : நீட் விலக்கு தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதற்கு இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.
திமுக ஆட்சி அமைத்து நடந்த முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இதுவரையில் ஆளுநர் மூலம் அந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படவில்லை.
நீட் விலக்கு மசோதா ஆளுநரின் பரிசீலனையில் இருப்பதாக ஆளுநர் மாளிகை தெரிவித்தது. திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் தமிழகத்தின் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவினர் குடியரசுத் தலைவரிடம் நீட் விலக்கு மசோதா தொடர்பாக மனு அளித்தனர்.

அதுபோன்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்திக்க முயன்றனர். ஆனால் அவர் தமிழக எம்.பி.க்களை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை.

இந்நிலையில், கடந்த ஜனவரி 6ஆம் தேதி நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நீட் விலக்கு மசோதா தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் ஜனவரி 8ஆம் தேதி நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதற்காக அனைத்து சட்டமன்ற கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள 10ஆவது மாடிக் கட்டிடத்தில் அமைந்துள்ள கூட்டரங்கில் இன்று காலை 10 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்குகிறது. இதில், அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட 13 கட்சிகள் பங்கேற்கவுள்ளன.

இந்தச்சூழலில் இவ்விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகள் தங்கள் கருத்தைத் தெரிவித்துள்ளன.

அதிமுக

நீட் தேர்வு ரத்து செய்வதற்கான தமிழக அரசின் முயற்சிக்கு அதிமுக துணை நிற்கும். அனைத்துக் கட்சி கூட்டத்தை வரவேற்பதாக ஒரத்தநாடு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

பாஜக

ஆளுநரைச் சந்தித்த பிறகு நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ''நாளை(இன்று) நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாஜக சார்பில் வானதி சீனிவாசன் பங்கேற்பார். நீட் தேர்வு குறித்து சாதக பாதக அம்சங்கள் இந்த கூட்டத்தில் பாஜக சார்பில் எடுத்துரைக்கப்படுவதோடு, தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவை என்பதை வலியுறுத்துவோம்” என்றார்.

காங்கிரஸ்

“ஓபிசிக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்தது போன்று நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுகிற போராட்டத்திலும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு நிச்சயம் வெற்றி பெறுகிற சூழல் இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாவைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் தமிழக ஆளுநர் தற்காலிகமாக முடக்கி வைக்கலாம். ஆனால், தமிழக அமைச்சரவையின் அறிவுரையின்படி தான் தமிழக ஆளுநர் செயல்பட வேண்டும். அதற்குப் புறம்பாக அவர் செயல்படுவாரேயானால், அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்படுவதாகவே கருத வேண்டியிருக்கும். இந்த நிலைக்குத் தமிழக ஆளுநர் தம்மை உட்படுத்திக் கொள்ள மாட்டார் என்று நம்புகிறோம். அதையும் மீறி, தமிழக மக்களுக்கு விரோதமாக ஆளுநர் செயல்படுவாரேயானால் அதற்குரிய விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்” என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

பாமக

“தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து எப்பாடு பட்டாவது விலக்கு பெற வேண்டும் என்பதே பாமகவின் நிலைப்பாடு. அதற்காகத் தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பாமக அதன் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் அளிக்கும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

-பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக