வியாழன், 20 ஜனவரி, 2022

அமரர் எஸ் எம் கார்மேகம்! மலையகம் முதல் தமிழகம் வரை கோலோச்சிய சமூக பத்திரிகையாளர்!

 Kanaga Ganesh  :   நினைவினில் வாழ்கிறார் இனிய தந்தை!
தமிழகத்தைப் பூர்வீகமாகவும், இலங்கை மத்திய மலையகத்தைப்  பிறப்பிடமாகவும் கொண்ட எனது தந்தை எஸ்.எம்.கார்மேகம்  இலங்கையிலும் இந்தியாவிலும் பத்திரிகை
  சேவையில்  ஆற்றிய பணிகள் அளவிடமுடியாதது.
  பத்திரிகை பணிகள் ஒருபுறம் இருக்க, கவிதைகள், சிறுகதைகள் தொடர்கதைகள், கட்டுரைகள், ஆய்வு கட்டுரைகள் என்று அவரது பயணம் நீண்ட நெடியது.
  தமிழ் நாட்டில் இருந்து இலங்கை கண்டி நகரத்திற்கு சென்று ஆட்சி செய்த தமிழ் மன்னர்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு "கண்டி மன்னர்கள்" என்ற ஒரு வரலாற்று ஆய்வு நூலை தந்திருக்கிறார்.  இந்நூல் கண்டி மன்னர்கள் பற்றிய சான்றுகளுடன் கூடிய அரிய தகவல்களுடன், அவர் படைத்தளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. தவிர.
  அவரது பத்திரிகை பணியின் அரசியல் செய்திகளை வடிவமைத்து தந்த அனுபவத்தின் அடிப்படையில் இலங்கையின் முழு அரசியல் வரலாற்றையும் தொட்டுச் செல்லும் "ஈழத்தமிழர் எழுச்சி"-ஒரு சம கால வரலாறு  என்ற நூலையும் படைத்திருக்கின்றார்.


கொழும்பு முன்னணி நாளிதழான வீரகேசரியில் கால் நூற்றாண்டு காலம் பணியில் இருந்த அவர் அதற்கு பெருமை சேர்க்கும் விதத்தில் "ஒரு நாளிதழின் நெடும் பயணம்" என்ற வீரகேசரியின் வரலாறு கூறும்  நூலினையும் எழுதி வெளியிட்டு இருக்கிறார்.
 அவரது எழுத்துப் பணியை அவர் தன்  உயிராக நேசித்தவர். அவரது இறப்பிற்கு பின்னரும் கூட தான் நேசித்த இந்த எழுத்துக்களை அவர் மீண்டும் மீண்டும் வாசித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று நினைத்து தான்  தன் கண்களை தானம் செய்தாரோ என்று நினைக்கையில் கண்களினோரம் நீர் துளிர்க்கின்றது.
 எனது தந்தையின்  பத்திரிகை இலக்கிய பணிகள் பற்றி இலங்கையில் மட்டுமல்ல இந்தியாவிலும் துறை சார்ந்தவர்கள் நன்கு அறிவர்.
சிறு குழந்தைகளுக்கு அவர்களின் தந்தை தான் முதல் ஹீரோ என்று சொல்வார்கள். ஆனால் எங்களைப் பொறுத்தவரை எங்கள் தந்தை தான் என்றென்றைக்கும் எங்களுக்கு ஹீரோ. அவரால் முடியாத விடயங்கள் வேறோருவரால் நிச்சயமாக முடியாது என்பதில் எங்களுக்கு மாற்று கருத்தில்லை.
  பொதுவாக பொதுப்பணிகளில் இருப்பவர்கள் தங்கள்  குடும்பத்தை சரிவர நிர்வகிக்க தவறிவிடுவார்கள் என்ற கருத்து ஒன்று உண்டு. அது எங்களைப் பொறுத்தவரை முற்றிலும் தவறானது..
 எங்களால் " ஐயா" என்று பாசத்துடன் அழைக்கப்படும் எங்கள் ஐயா தன் குடும்பத்தை உயிராக நேசித்தவர். எனது அம்மா ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். அம்மாவுக்கு தெரிந்ததெல்லாம் வீட்டுக்கு வருபவர்களையெல்லாம் நன்றாக  உபசரித்து விருந்தளித்து அனுப்பவேண்டும் என்பது மட்டுமே.
  இந்நிலையில் வீட்டு நிர்வாகம் முதல், எங்கள் படிப்பு விஷயம், வளர் இளம் பருவத்தில் எங்கள் நண்பர்கள் யார், நாங்கள் சரியான பாதையில் தான் சென்று கொண்டிருக்கின்றோமா என்று சின்ன சின்ன விஷயங்களில் கூட அதிக அவதானத்துடனும் அக்கறையுடனும் இருக்க வேண்டிய கூடுதல் பொறுப்பும் அவருக்கு தான் இருந்தது.
வீட்டில்  விருந்தாளிகள் இல்லாத நாட்களை விரல் விட்டு எண்ணி விடலாம். வருபவர்களையெல்லாம் "வாங்க வாங்க"என்று சொல்லி சொல்லி, வீட்டு தொலைபேசி அழைப்பில் கூட, ஹலோ என்பதற்கு அடுத்து," வாங்க, வாங்க எப்படி இருக்கீங்க," என்று தான் கேட்பார்.  வீடு நிறைய ஆட்கள் புழங்க கூடிய எங்கள் பீட்டர்ஸ் காலனி தொடர்மாடி வீட்டில் எந்த பெட்டிக்கும் பூட்டு இருந்ததில்லை. அறைக் கதவு மூடி இருந்ததில்லை.
 வீட்டுக்கு தேவையான சின்ன சின்ன விஷயங்களில் மட்டுமல்ல வெளியில் செல்லும் போது நாங்கள் என்ன உடுத்துவது என்பது கூட ஐயா தான் கவனித்து கொள்வார்.
 மிக மிக சுறுசுறுப்பான மனிதர். எளிதில் எதையும் கற்றுக் கொள்வார். காலத்திற்கேற்ப தன்னை அவ்வப்போது புதுப்பித்து கொள்வதாலேயே இளைஞர்கள் கூட அவருடன் நட்பாக இருந்தனர். அபார நினைவாற்றல் அவரின் மூலதனம்..வரலாற்று சம்பவங்களை வருட வாரியாக விளக்கி சொல்வதில் வல்லவ ர்.  புதிய தொழில் நுட்பங்களைத்  தெரிந்து கொள்வதிலும் அதை செயல்படுத்துவதிலும் ஆர்வமிக்கவர்.
 தனது எழுத்து பணிகளுக்காகவே புதிதாக ஒரு கணினியை வாங்கி அதை தனது முயற்சியினால் மட்டுமே விரைவாக கற்றுக் கொண்டு வேகமாக இயக்குவதில் வல்லமை பெற்றிருந்தார். மிகச் சிறந்த ஆங்கிலப் புலமை உள்ளவர்.
 எங்கள் ஐயாவின் கை கணினியையும் பேனாவையும் மட்டுமா பிடித்திருக்கிறது?
  எங்கள் வீட்டில் கட்டில் முதல் பலகை கட்டை வரை அவரின் கைவண்ணம் தான். மரப்பலகைகளை வாங்கி வந்து இரவு பகலாக இருந்து பலகைகளுக்கு உருவம் கொடுத்த பின்பு தான் அடுத்த வேலை பற்றி சிந்திப்பார்.
 அறுசுவை உணவு சமைப்பதில் வல்லவர். ஒரே மாதிரியான சமையல் குழந்தைகளாகிய எங்களுக்கு போரடித்துவிடக் கூடும் என்று அதிலும் நிறைய புதுமைகளைப் புகுத்துவார். பல வண்ணங்களைக் கொண்ட காய்கறிகளைச்  சேர்த்து சுவையான ரொட்டி சுட்டு தருவார். இன்று பீட்சா சாப்பிடும் போதெல்லாம் எங்கள் ஐயா கையால் ரொட்டி சாப்பிட்ட எவரோ ஒருவர் தான் பீட்சா வை வடிவமைத்திருக்கக்கூடும் என்று நினைத்துக் கொள்வேன். வகை வகையாக தின்பண்டங்கள் செய்வதிலும் அவரை மிஞ்ச ஆளில்லை.
 சென்னையிலிருந்து கொழும்புக்கு செல்லும் போதெல்லாம் தன் கையால் செய்த பலகாரங்களைக் கொண்டு போய் நண்பர்களுக்கு கொடுத்து மகிழ்விப்பார்.
குளியல் சோப், ஷாம்பூ வாஷிங் பவுடர், பாத்திரம் துலக்கும் தூள், பல் பொடி எல்லாம் கூட அவர் தயாரித்து நாங்கள் பயன்படுத்தி இருக்கின்றோம். அதற்கு எங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களின் எழுத்துகளைச்சேர்த்து "ஸ்ரீ ராஜ காமுணி ப்ராடக்ட்ஸ்" என்று Brand பெயர் கூட வைத்து சிரித்துக் கொள்வோம். ஷாம்பூ பயன்படுத்தும் போது மட்டும்  கொஞ்சம் பகீர் தான்.
கொழும்பிலிருந்து விடுமுறையில் தமிழகம் வரும் போதெல்லாம் அம்மாவுக்கு முழு ஓய்வு தான். எங்களை நேரத்தில் எழுப்பி, நீராட்டி,  உணவு தயாரித்து, ஊட்டி விட்டு என் தலைவாரி இரட்டை பின்னலிட்டு பள்ளியில் விட்டு வருகையில் ஒரு முழுமையான தாயாக மட்டுமே அவதாரமெடுத்திருப்பார்.
 மென்மையான இதயம் கொண்ட இரும்பு மனிதர் அவர் . இலங்கை மலையகத்தில் எவ்வித அடிப்படை வசதிகளுமற்ற மிக மிக சாதாரண குடும்பத்தில் பிறந்து இத்தனை சாதனைகளை படைக்க அவர் எவ்வளவு சிரமங்களை எதிர் கொண்டிருக்க வேண்டும்.
 அவர் ஒரு வரலாற்று மாணவன் அல்ல. பள்ளியில் கூட தனக்கு வரலாறு ஒரு பாடமாக இருந்ததில்லை என்று சொல்ல கேட்டிருக்கிறேன். ஆயினும் பத்திரிகைத் துறை வாழ்க்கை முறைமையாகி, தான் ஒரு தொழில் முறைப்பத்திரிகையாளனாவதற்கு வரலாறு, புவியியல், பொருளாதாரம், அரசியல்,  இலக்கியம் என பல்துறை அறிவை வளர்த்துக் கொள்ள அவர் எத்தகைய முயற்சிகளை மேற்கொண்டிருக்க வேண்டும் என்று மலைத்திருக்கிறேன்.
  அவருக்குள் எப்பொழுதும்  ஒரு தேடல் இருந்து கொண்டே இருந்தது.
அந்த தேடல்களின் விளைவே, அவரின் "ஈழத்தமிழர் எழுச்சி " மற்றும் "கண்டி மன்னர்கள்" போன்ற வரலாற்று பெட்டகங்கள்.
 மலையக மண்ணில் பிறந்து வளர்ந்த நீங்கள் ஏன் அம்மக்களின் வரலாறு பற்றி ஒரு புத்தகம் எழுதவில்லை என்று நான் அவர் தனது இறுதி நாட்களில் இருந்த நேரத்தில் அவரை உற்சாகப்படுத்த கேட்ட பொழுது, அவரின் கண்களில் இருந்த பிரகாசம் இன்றும் என் மனக் கண்ணில் காட்சியாக விரிகிறது.
 என்னம்மா  அப்படி கேட்டு விட்டாய். இலங்கையின் மத்திய மலை நாட்டுத் தேயிலைத் தோட்டம் ஒன்றில் பிறந்து வளர்ந்தவன் நான். என் தந்தை அங்கு பெரிய கங்காணி. அந்த நாட்களில் பெரிய கங்காணிகளின் சாம்ராஜ்யமே தனி. திண்ணைப் பள்ளியில் எழுத படிக்க தெரிந்து கொண்ட அவர், 1930களில் எப்படி பெரிய கங்காணி ஆக முடிந்தது. இதுவே எனக்குள் பெரிய கேள்வியாக மாறி சமீப காலமாக என் வரலாற்று ஆர்வத்தைத் தூண்டிக் கொண்டிருக்கிறது
  அதன் விளைவாக எங்கள் குடும்பத்தின் நாலைந்து தலைமுறைகளின் தொடர்ச்சியை, ஆய்ந்தறிந்து, அது தொடர்பான ஆவணப்பூர்வமான விவரங்களைத் திரட்டிக் கொண்டிருக்கிறேன்.
 அதே கோணத்தில், நான் பிறந்து வளர்ந்த எஸ்டேட்டின்-மலை நாட்டின் பூர்வீகம் பற்றி அறிதலும் எனக்கு பிடித்த விஷயமாயிற்று. நூறு இரு நூறு ஆண்டுகளுக்கு முன் ஏன் அதற்கு முன்பே கூட, அந்த எஸ்டேட்டும் மலை நாடும் எப்படி இருந்திருக்கும் என்றெல்லாம் என் மளதுக்குள் ஏகப்பட்ட கேள்விகள். அதன் படி நான் கற்றறிந்தவற்றை மலையக மக்களின் பூர்வோத்திரம் பற்றி நான் நலம் பெற்று  வீடு திரும்பியவுடன் எனது அடுத்த படைப்பில் சொல்கிறேன் என்று சொன்னார்.
  அவரின் எழுத்துகள்  அனைத்து தரப்பு வாசகர்களையும் சென்றடைய வேண்டுமென்ற அடிப்படையை நோக்கமாக கொண்டது. எளிய தமிழில் பாமரர்களும் விளங்கி கொள்ளும் வகையில் சுவாரஸ்யமாக எழுதும் திறன் உள்ளவர்.
 ஒருமுறை அவரின் எழுத்தாள நண்பர் ஒருவருடன் சென்னையில்  அவர் ஆட்டோ ஒன்றில் பயணித்து கொண்டிருந்த சமயம், இருவரும் இலங்கை அரசியல்,  எழுத்துகள் பற்றி பேசி கொண்டே போனார்களாம்.  அதனை கவனித்த ஆட்டோ காரரும் உரையாடலில் கலந்து கொண்டாராம். "இலங்கையைப் பற்றிய செய்திகள்  தான் ஐயா எங்களையும் பத்திரிகைகள் படிக்கத் தூண்டின. ஒருமுறை வட இலங்கையின் யாழ்ப்பாணத்துக்கு  சென்று, ஈழப்புலிகளைச் சந்தித்து விட்டு வந்த ஒரு நிருபர், தினமணியில் ஒரு மாதம் தொடர் கட்டுரை எழுதினார். நாங்கள் காலையில் தினமணிக்காக காத்திருந்து அக்கட்டுரையைப் படித்த பிறகு தான் கிளம்புவோம். அந்த அளவுக்கு அந்த கட்டுரையின் தகவல்களும் எழுத்தும் எங்களைக் கவர்ந்திருந்தது." என்று சொன்னார்
 அதைக் கேட்டதும் ஐயாவுக்கு உடம்பில் ஒரு லிட்டர் இரத்தம் ஊறியது போல் சிலிர்த்ததாம். ஏனெனில் அது "ஈழப்புலிகளுடன் ஒரு வாரம்"என்ற தலைப்பில் தினமணியில் 26 தினங்கள் தொடர்ந்து  ஐயா எழுதிய தொடர் தான். கலைஞர் கருணாநிதி முதல் பலர் பாராட்டு தெரிவித்த போதும் ஒரு ஆட்டோ காரரின் உணர்வு பூர்வமான வார்த்தைகளே தன்னை குளிரச் செய்தது என்று சொல்லி பூரித்து போனார்.
  அவரின் ஒவ்வொரு அசைவையும் ஒரு மகளாக அருகில் இருந்து பார்த்திருக்கிறேன்.
 அவர் ஒரு பெயர் பெற்ற பத்திரிகையாளராகவும், எழுத்தாளராகவும் குறிப்பாக, தான் பிறந்து வளர்ந்த மலையகத் தமிழ் மக்களின் மேம்பாட்டில் பெரிதும் ஆர்வம் கொண்டவராகவும் விளங்கினார். இலங்கையில் அவர் பத்திரிகையாளராக செயற்பட்ட காலப்பகுதி, மலையக தோட்டத் தொழிலாளர்களில் கணிசமான பகுதியினர் பிரஜா உரிமை அற்றவர்களாக, நாடற்றவர்களாக தமது உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கத் துணிந்திருந்த ஆரம்ப காலம்.
 இன்றைக்கு, அதாவது, 21ஆம் நூற்றாண்டின் ஒன்றரை தசாப்தம் முடிவுற்றிருக்கும் இக்காலக்கட்டத்தில் அம்மக்கள் பிரஜா உரிமை பெற்றவர்களாக, நாட்டின் அரசியல் நீரோட்டத்தில் பங்கு கொள்ளும் வாய்ப்புகளைப் பெற்றிருக்கும் காலம். அந்த உரிமைக்காக பத்திரிகை மூலம் தனது கருத்துகளை மட்டுமன்றி, மலையக இளைஞர்களது உணர்வுகளையும் கருத்துக்களையும் தூண்டி மலையக மக்களிடையே எழுச்சிக்கு வித்திட்டவர்.
இந்திய வம்சாவளி மக்களையும் அவர்கள்  குடியேற்றப்பட்ட இடங்களையும் குறிப்பிட பயன்படுத்தும்,  என்னால் அச்சில் கூட ஏற்ற தயங்கும் சொற்சொடர்கள், "மலையக மக்கள், மலை நாடு என்று உருமாற்றம் பெற்ற போது, வரிக்கு வரி மலையகம், மலையகம் என்றெழுதி மக்கள் மனதிலே இச்சொல்லை ஆழமாக பதியச் செய்தது இவரின் எழுத்துக்களே.
 1960களில் வீரகேசரி மலையக மக்களின் முன்னேற்றத்தை நோக்கமாக கொண்டு ஆரம்பித்து வைத்த "தோட்ட மஞ்சரி" எனும் விசேட பகுதி இவரின் சமூக பணிக்கு அரியதோர் களமாயிற்று.
 "கார்வண்ணன்" என்ற புனைப் பெயரில்,  உரிமைகள் ஏதும் அற்று  முடங்கிக் கிடந்த மலையக இளைஞர் சமுதாயத்தை தமது அரிய கட்டுரைகள் மூலம் விழிப்புறச் செய்தார்.
 அங்குள்ள படித்த இளைஞர்கள் மற்றும் கல்வி மான்கள் அரசியல் வாதிகளை அணுகி அவர்களையும் அப்பகுதியில் பல்வேறு படைப்புகளை எழுத வைத்ததன் மூலம் ஏற்படுத்திய விழிப்புணர்ச்சியை மலையக சமூகம் மறக்காது.
மலையக எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு சிறுகதைப்போட்டிகளை முன்னின்று நடத்தி இன்றைய மலையகத்தின் புகழ் பூத்த மூத்த எழுத்தாளர்களாக இனம் காணப்பட்டவர்கள் அனைவரும் இவரால் ஊக்கப்படுத்தப்பட்டவர்களே.
 தனது மலையக சமூகத்தின் மேம்பாட்டுக்காக பத்திரிகைத்துறையை பயன்படுத்துவது தனது அடிப்படைக் கடமைகளில் முதன்மையானது என்ற உணர்வுடனேயே அவர் செயற்பட்டார். அம்மக்களின் நலன்களுக்காக அரசு மட்டத்திலும் பலநிறைவான பணிகளை முன்னெடுத்தார்.
 இன்றைக்கு மலையக மக்கள் படிப்பிலும் உயர்பதவிகளிலும் முன்னிலையில்  இலங்கையின் முக்கியத்துவம் பெற்றிருக்க முன்னெடுத்தவர்களில் எனது தந்தையும் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறார்.
 மலையக மக்களின் தனித்துவமான பெருந்தலைவராக விளங்கிய காலஞ்சென்ற சௌமிய மூர்த்தி தொண்டமான் அவர்களுடன் நெருங்கிய உறவைப் பேணிணார். அவரின் அரசியல் ஆலோசகராகவும் எனது தந்தை விளங்கினார்.
இலங்கையிலிருந்து 1988 ஆம் வருடம் இந்தியா திரும்பிய போது, தினமணியில் நிருபர்கள் தேவை என்ற விளம்பரத்திற்கு விளையாட்டாகத் தான் விண்ணப்பித்திருந்தார்.. சுமார் 100 பேர்கள் கலந்து கொண்ட நேர்முகத் தேர்வில் தேர்ந்தெடூக்கப்பட்ட மூவரில் எனது தந்தையும் ஒருவர். தினமணி ஆசிரியர் குழுமம் அவரை மூத்த துணை ஆசிரியராக அரவணைத்துக் கொண்டது. இந்திய குறிப்பாக இலங்கை குறித்த அரசியல் பார்வை பற்றிய தெளிவான சிந்தனை அவருக்கு இருந்தால்  தினமணி நாளிதழில்  முதல் பக்கத்தில் அரைப் பக்க அளவில் அவரது கட்டுரைகளே பெரும்பாலும் இடம் பிடித்து விடும்.
சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் (Madras Union of Journalist)தலைவராகவும் அவர் இருந்தார்.  இலங்கை இந்திய அரசியல் விவகாரங்கள்  பற்றி அதிகம் ஞானமுள்ள அதிலும் ஒரு பத்திரிகையாளராக அவர் இருந்ததால் இலங்கை வாழ் இந்தியர்களுக்கும் இந்தியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினருக்கும் அந்தந்த நாட்டில் கிடைக்க வேண்டிய உரிமைகளுக்காக குரல் கொடுக்க அவருக்கு இலகுவாக இருந்தது. இலங்கையில் இந்திய வம்சாவளியினரான மலையக மண்ணின் தலைமகன் என்றழைக்கப்படும்
அமரர். இரா. சிவலிங்கம், அமரர். எஸ். திருச்செந்தூரன் இணைந்து கோத்தகிரியில்  அமைக்கப்பட்ட மலையக மக்கள் மறு வாழ்வு மன்றத்தின் மேல் அவருக்கு ஒரு மாறாத பிடிப்பு இருந்தது. அடிக்கடி கோத்தகிரிக்கு பயணிப்பார். அந்த அமைப்பின் செயல்பாடு பற்றியும் தாயகம் திரும்பியோர் பற்றியும் தினமணி கதிரில் கட்டுரைகள் எழுதினார். இலங்கையிலிருந்து தாயகம் திரும்பும் மக்களுக்கு தமிழகத்தில் கிடைக்கக்கூடிய பல்வேறு வாய்ப்புகள் பற்றி அறியத் தருவார். தமிழகத்தின் கல்விக் கூடங்கள் கல்லூரிகளில் எவ்வாறு அனுமதி பெறுவது என்று மாணவர்களுக்கு வழிகாட்டும் வழிகாட்டியாக இருந்தார்.
1991 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் திரு. ராஜீவ் காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்ட போது, அந்த படுகொலைக்கு இலங்கை விடுதலைப் புலிகளே காரணம்  என்ற சந்தேகத்தின் எதிரொலியாக தமிழ் நாட்டில் ஏற்பட்ட பதட்ட நிலையைத் தொடர்ந்து "இலங்கைத் தமிழர்கள் காவல் நிலையத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்" என மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தும் தமிழக காவல் துறை இந்திய வம்சாவளி மக்களுக்கு ஏற்படுத்திய துன்பம் சொல்லி மாளாது. அவர்களும் அநியாயமாக சிறை பிடிக்கப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.  மலையக மக்கள் மன்ற நிர்வாகிகளும் அதில் அடங்குவர். இப்படியான நிலையில் இப்பிரச்சினையை வெளி உலகம் அறிந்து கொள்ளும் வகையில் பத்திரிகைகளில் செய்திகள் வெளிவர உரிய நடவடிக்கை எடுத்ததுடன் இந்த அடக்கு முறைக்கு எதிராக தங்களின் கடுமையான எதிர்ப்பையும் அரசுக்கு தெரிவிக்கவும் முன்னின்றவர்.
 தமிழக மண்ணில் அரசு உதவிகள் பெறுவதற்கு சாதிச் சான்று அவசியமான ஒன்றாகும்.அக்காலத்தில் தமிழகத்தில் தாயகம் திரும்பிய மக்களுக்கு சாதிச் சான்று பெறுவது மிகப் பெறும் பிரச்சினையாக இருந்து வந்த காலத்தில் அப்போது தமிழக அரசின் மறுவாழ்வு துறை ஆணையராக செயலாற்றி வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி திரு. கிருஸ்துதாஸ் காந்தி அவர்களை சந்தித்து, சாதிச் சான்று பெறுவதற்கு மக்கள் படும் இன்னல்களை விளக்கமாக எடுத்துக் கூறி, அவர் மூலமாக ஆணை பிறப்பித்து இப்பிரச்சினைக்கு ஒரு தீர்வை ஏற்படுத்தியதில் என் தந்தையின் பங்கு அளப்பறியது.
லலிதா ஜுவல்லர்ஸ் நிறுவனர் அமரர். எம்.எஸ்.. கந்தசாமி அவர்களும் எனது தந்தையும் ஒருவர்மேல் இன்னொருவர் மாறாத நட்பு கொண்டவர்கள். கந்தசாமி அவர்கள்  தலைவராகவும், எனது தந்தை பொதுச் செயலாளராகவும் இணைந்து செயல்பட்ட "இந்திய பரம்பரை இலங்கையர் பேரவை" என்ற அமைப்பு மலையக மற்றும் இந்திய வம்சாவளி மக்களின் உரிமைகளுக்காக மட்டுமே ஏற்படுத்தப்பட்டது.
 மிக குறுகிய காலத்திற்குள்ளாகவே, அடுத்தடுத்து பதவி உயர்வுகளுடன் டில்லி, பம்பாய், மதுரை என பணிமாற்றம் பெற்று இந்தியாவின் முக்கிய நகரங்களில் பணியில் அமர்த்தப்பட்டார். அவரது திறனையும், பண்பையும் அங்கீகரித்த தினமணி பத்திரிகை நிர்வாகம் அவரை டெல்லியிலுள்ள நாடாளுமன்றத்திற்கான சிறப்பு செய்தியாளராக நியமித்து கௌரவப்படுத்தியது. இலங்கை இந்தியப் பத்திரிகையாளர்  நட்புறவுச் சங்கத்தின் தலைவராகவும் அவர் விளங்கினார்.
 இலங்கையில்  23 வருட பணியில் எட்ட முடியாத புகழையும் பெருமையையும்  தமிழகத்தில் மிக குறுகிய காலத்திலேயே அடைந்த சாதனையாளன் தான்.
 சாவி, தீபம் பார்த்தசாரதி, கஸ்தூரி ரங்கன் போன்ற பழம் பெரும் பத்திரிகையாளர்களும் புகழ் பூத்த எழுத்தாளர்களும் அலங்கரித்த ஆசனத்தில் அமர்ந்து பணியாற்றிய ஒரு வரலாற்று சாதனையாளரை இலங்கை மலையக பகுதிகளான அட்டன், நுவரெலியா, நாவலப்பிட்டி, கண்டி, மாத்தளை, பதுளை, பண்டாரவளை ஆகிய இடங்களில் நடைபெற்ற தொழிற்சங்க மாநாடுகளில் வீரகேசரி பத்திரிகையினை தோளில் சுமந்து விற்பனை செய்த ஒரு பெருமகனாக என் தந்தையாக  உளம் பூரிக்கிறேன்.

 May be an image of ‎3 people and ‎text that says '‎×ו vIuoUa miapa muayoa Latest GIF IYONO HD sroppiny Product Colour Usage கண்டி மன்னர்கள் எஸ். எம். கார்மேகம் தமிழ்... ta.wikipedia.org எஸ்.எம்.கார்மேகம் தமிழ்முரசு Tamil Murasu: அ... tamilmurasuaustralia.com நமது மலையகம்: மலையக... namathumalayagam.com தமிழ்முரசு Tamil Murasu: அ... tamilmurasuaustralia.com Discover Snapshot Q Search Collections <‎'‎‎

 May be an image of 3 people and text that says 'அயராமல் இயங்கிய மூத்தபத்திரிகையாளர் எஸ்.எம்... எஸ். 31 July 2011- -எம்.கார்மேகம்- முருகபூபதி. ..எஸ்.வாஸ், க.சிவப்பிரகாசம் ஆகியோர்... http:/wmathumalyagam.com.. மலையகம் தந்த சிறந்த எழுத்தாளரும்... 30 Apr 2014- மலையகம் தந்த சிறந்த எழுத்தாளரும் பத்திரிகையாளருமான எஸ்.எம்.கார்மேகம். ஓரு நாகபி விரடும் புயகளம் LONG JOURNEY f ஒழத்தமரு ஒழச ទரசதலத வீரகேசரி viruba.com .N COOLNE கார்மேகம், எஸ்.எம் புத்தகங்... amilbooks.info எஸ்.எம். கார்மே தமிழ்முரசு Tamil Murası'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக