புதன், 5 ஜனவரி, 2022

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது .. கர்நாடகாவில் பிடிபட்டார்

 மாலைமலர் : கடந்த 20 நாட்களாக தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜியை கர்நாடகாவில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
சென்னை:  அ.தி.மு.க. ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. இவர் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடியே 10 லட்சம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. மேலும் அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் விஜயநல்லதம்பி உள்ளிட்ட சிலரும் இந்த மோசடியில் உடந்தையாக செயல்பட்டனர் என புகார் கூறப்பட்டது.
இதுதொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் 15-ந்தேதி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க அவர் முன்ஜாமின் மனுக்களை தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுக்கள் கீழ் கோர்ட்டிலும், ஐகோர்ட்டிலும் தள்ளுபடி ஆனது.



இதையடுத்து அவரை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர். போலீசார் தன்னை தேடுவதை அறிந்ததும், அவர் தலைமறைவானார். அவரை பிடிக்க 10-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு இடங்களில் ராஜேந்திர பாலாஜியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் ராஜேந்திர பாலாஜி பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் இன்று அதிரடியாக அவரை கைது செய்தனர்.

உச்சநீதிமன்றம்

கீழ் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டில் தனது முன்ஜாமின் மனு தள்ளுபடியானதை அடுத்து ராஜேந்திர பாலாஜி சுப்ரீம் கோர்ட்டை நாடினார். தனக்கு முன்ஜாமின் வழங்கக்கோரி அவர் தாக்கல் செய்திருந்த மனு நாளை விசாரணைக்கு வர இருந்தது. ஆனால் அதற்குள் தனிப்படை போலீசார் ராஜேந்திர பாலாஜியை சுற்றிவளைத்து கைது செய்தனர். கைதான ராஜேந்திர பாலாஜி தமிழகத்துக்கு அழைத்துவரப்படுகிறார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக