புதன், 12 ஜனவரி, 2022

தந்தை மீது வழக்கு - மகன் தற்கொலை: நீதி கிடைக்குமா?.. அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

 மின்னம்பலம் : திருத்தணியில் தந்தை மீது வழக்குப் பதிவு செய்ததற்காகத் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்த மகன், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சரவணப்பொய்கை திருக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் நந்தன். இவர் அதிமுக திருத்தணி 15 ஆவது வட்ட துணைச் செயலாளராக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவரது மகன் குப்புசாமி.
தற்போது தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வரும் நிலையில், சரவணப்பொய்கை திருக்குளம் அருகே உள்ள ரேஷன் கடையில் பரிசு தொகுப்பை வாங்கியுள்ளார் நந்தன்.

அந்தப் பொங்கல் தொகுப்பிலிருந்த புளியில் இறந்து போன பல்லி இருந்ததாக அவர் நியாய விலை கடை விற்பனையாளரிடம் புகார் தெரிவித்தார்.

அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் பத்திரிகைகளிடம் இதுகுறித்து புகைப்படத்துடன் தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து நந்தன் மீது அவதூறு பரப்பியதாக நியாய விலை கடை விற்பனையாளர் சரவணன் அளித்த புகாரின் பேரில் திருத்தணி காவல் நிலையத்தில் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மகன் குப்புசாமி தந்தை மீது வழக்குப் பதிந்ததைக் கண்டித்து நேற்று காலை தனது உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். இதையடுத்து குப்புசாமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்திலிருந்த பொதுமக்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர்.

அதற்குள் அவரது உடலில் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டுவிட்டது. இதையடுத்து அவரை திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காகச் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குப்புசாமி இன்று உயிரிழந்தார். இந்த சம்பவம் திருத்தணி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழலில் குப்புசாமியின் மரணத்திற்கு நீதி கேட்டு இன்று திருவள்ளூரில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

குப்புசாமியின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “குப்புசாமியின் மரண செய்தியைக் கேட்டு மன வேதனை அடைந்தேன். சமூக வலைதளங்களில் பதிவிட்டால் குண்டர் சட்டம், உண்மையைக் கூறினால் ஜாமீனில் வெளியே வர முடியாத வழக்கு என திமுக ஆட்சியில் ஜனநாயகத்தை முடக்கும் முயற்சி தொடர்கிறது.

கொடுங்கோல் ஆட்சியில் முறையான கேள்வி கேட்டால் மரணம் தான் பதிலாகக் கிடைக்கிறது இது தற்கொலை அல்ல ஜனநாயகப் படுகொலை” என்று திமுக அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதுபோன்ற அதிமுக ட்விட்டர் பக்கத்தில், இந்த மரணத்திற்காவது உரிய நீதி கிடைக்குமா?    என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
-பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக