திங்கள், 3 ஜனவரி, 2022

ஆறுமுக நாவலர் அருட்பெரும் ஜோதி வள்ளலார் மோதல் .. உண்மையில் நடந்தது என்ன? கவிஞர் வைரமுத்துவின் விளக்கம்

 இராதா மனோகர் : கவிஞர் வைரமுத்து அவர்கள் வடலூர் ராமலிங்க வள்ளலாரின் வரலாற்றை தனது தமிழாற்று படையின் தொடர்களில் ஒன்றாக மேடையேற்றி உள்ளார்  அந்த ஆற்று நீரில் சற்று நனைந்து பாருங்கள் .
கிழக்கிந்திய கம்பனியோடு வந்த கிறித்துவம் ஒரு கோடி மக்களை மதம் மாற்றியதற்கும் ராமலிங்கரின் மனமாற்றத்திற்கு உள்ள தொடர்பு ஊன்றி உணரத்தக்கது .மதமாற்றம் இந்த மண்ணில் எந்தவழி நுழைந்தது? அந்நியர் இம்மண்ணில் எவ்வழி புகுந்தனர்?
வருணங்களென்றும் குலங்கள் என்றும் ஜாதிகள் என்றும் பிளந்து வைத்த சந்து வெளி புகுந்தது.
அந்நியரை ஓட்டவேண்டும்  அதற்கு முன்னால் அந்நியரை வரவழைத்த மதச்சண்டைகளின் பிற்போக்குத்தனத்தின் பிடரியை பிடித்து ஆட்டவேண்டும் என்று சிந்தித்த முதல் புரட்சி துறவி வள்ளலார் என்றே சொல்ல தோன்றுகிறது.
இந்து மதம் துறவின் நிறம் காவி என்றது   வள்ளாளரோ வெள்ளை என்றார்.


இந்துமதம் உருவ வழிபாடு என்றது  . வள்ளலாரோ ஒளி வழிபாடு என்றார்.
இந்துமதம் மக்கள் தொகை போல கடவுள் என்றது   வள்ளலாரோ ஒரே கடவுள் அருட் பெரும் சோதி என்றார்.           
இப்படி வள்ளலாரின் வரலாற்றை சுருக்கமாக அழகாக கூறுகிறார் கவிஞர்
வள்ளலார் புகழ் பெறுவதையும் அவர் கருத்துக்கள் கவனம் பெறுவதையும் கோயில் உற்சவங்களில் திருவாசகத்திற்கு பதிலாக அருட்பா ஓதப்படுவதையும் கண்டு கன்று வந்த சில சைவ மடங்கள் வள்ளாளருக்கு எதிராக கள்ள களம் கண்டன .
அருட்பாவை மருட்பா என்று பரப்புரை செய்தன.
பேராற்றலும் பெரும் புலமையும் மிக்க இலங்கை யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரை வள்ளலாருக்கு எதிராக கொம்பு சீவி விட்டனர்.
நாவலர் ஆறுமுகத்திற்கு ஏழாம் முகமாய் எதிர்ப்பு முகமொன்றையும் ஒட்டவைத்தனர்.
பரசமய கோளரி என்று பாராட்டப்பட்ட அவர் அகச்சமய கோடரியாக ஆட்பட்டது ஆச்சரியம்.
கடலூர் மண்டிக்குப்பம் நீதிமன்றத்தில் ஆறுமுக நாவலர் தொடுத்த வழக்கு அருட்பாவை மருட்பா என்று நீட்டித்தலுக்கு என்று பலராலும் கூறப்பட்டாலும் அதுவல்ல வழக்கு,
தம்மை இழித்து பேசியதாக வள்ளலார் மீது ஆறுமுக நாவலர் தொடுத்த அவதூறு வழக்கே அது .
அந்த அவதூறு யாது என்பது ஒரு நாகரிக நகைச்சுவையாகும்.
சிதம்பரம் ஆயிரம் கால் மண்டபத்தில் தன்னை அடுத்திருந்தாரிடம் , நாவலர் என்ற சொல்லுக்கு எள்ளல் மொழியில் பொருள் உரைத்தாராம்.
நாவலர் என்றால் நா அல்லாதவர் . நாவினால் அலர் தூற்றுபவர்,  நாவினால் துன்புறுகிறவர் என்பதே வள்ளலார் செய்த வார்த்தை விளையாட்டாம் .
இதுவே அவதூறு வழக்கிற்கு அடி கோலியதாம்.
தாம் அவ்வண்ணம் மொழியவில்லை என்று வள்ளலார் மறுக்க அதை மெய்ப்பிக்க ஒண்ணாமல் நாவலர் திகைக்க வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உரைக்க நீதிமன்றத்தை விட்டு அந்த வெள்ளை வெளிச்சம் வெளியேறியதாம்.
பைபிளை தமிழில் மொழி பெயர்த்த ஆறுமுக நாவலருக்கு அமைதியான உள்ளம் உடலுக்கு ஆரோக்கியம்  ஆனால் பொறாமை எலும்புருக்கி என்ற விவிலிய வாசகம் விளங்காமல் போனது வியப்பே.....
சமரச சுத்த சன்மார்க்க சங்கம் என்றும் சத்திய தர்ம தரும சாலை என்றும் சித்தி வளாகம் என்றும் தம் கொள்கைகளை செயல்படுத்த தாமே தன்னை நிறுவனபடுத்தி கொண்டவர் வள்ளலார்.
வள்ளலார் வரலாற்றை இவ்வளவு தெளிவாக சுருக்கமாக அழகாக இதுவரை எவரும் கூறியதாக எனக்கு தெரியவில்லை  இந்த காணொளியில் ஒரு சில துளிகளை மட்டுமே இங்கு ஒரு அறிமுகமாக தந்துள்ளேன் . இதை கேட்போர் நிச்சயம் ஏமாற்றம் அடையமாட்டார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக