வெள்ளி, 21 ஜனவரி, 2022

உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா? இன்று தெரியும்!

 மின்னம்பலம் : தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக கடந்த 19 ஆம் தேதி மாநில தேர்தல் ஆணையர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தினார். அப்போது அனைத்துக் கட்சிகளும், ‘தேர்தலை ஒரேகட்டமாக நடத்திட வேண்டும்’ என்றும், ‘கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை கடுமையாக கடைபிடிக்க வேண்டும்’ என்றும் கேட்டுக் கொண்டனர். தமிழக உள்ளாட்சித் தேர்தலை ஜனவரி 27க்குள் நடத்த வேண்டும் என்று ஏற்கனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில்... அந்த வழக்கு இந்த வாரம் விசாரணைக்கு வருகிறது.


இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான இட ஒதுக்கீடு , வரைமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்தலுக்கு ஒருபக்கம் மாநில தேர்தல் ஆணையம் தயாராக இருந்தாலும், உள்ளாட்சித் தேர்தலை ஒத்தி வைக்கக் கோரிய வழக்கு இன்று (ஜனவரி 21) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

ஜனவரி 19 ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்று வந்த நிலையில் தமிழக அரசின் முன்னாள் சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனரான மருத்துவர் நக்கீரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தாக்கல் செய்தார். நக்கீரன் சார்பாக மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் செய்த அந்த மனுவில், “தமிழகத்தில் கடந்த சில நாட்களாக, ஒமிக்ரான், கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. நாளொன்றுக்கு 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் தேர்தலை நடத்தினால் மிக மோசமான நிலையை எட்ட நேரிடும். மார்ச் மாதத்திற்கு பிறகு பரவல் குறைய வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுனர்கள் கூறியுள்ளார்கள். அப்போது வேண்டுமானால் தேர்தலை நடத்தலாம்.

24,199 கிராமங்கள், 28129 நகர்ப்புற வீதிகளும் தமிழகத்தில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 9,237 தெருக்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. 2021 டிசம்பர் 30ம் தேதி அன்று கொரோனா பாசிட்டிவ் விகிதம் தமிழகத்தில் வெறும் 1% ஆகவே இருந்தது. ஆனால் ஜனவரி 17ம் தேதி அன்று அது 17% ஆக உயர்ந்துள்ளது. இப்படி கடுமையாக உயரும் நிலையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது சரிதானா என்று நீதிமன்றம் வழிகாட்ட வேண்டும்.

19 ஆம்தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படுவதால் தேர்தல் அறிவிப்பு செய்ய தேர்தல் ஆணையம் தயாராகிவிட்டது. எனவே இதுகுறித்து அவசரமாக விசாரிக்க வேண்டும்” என்று மருத்துவர் நக்கீரன் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு ஜனவரி 21 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளது. அதன்படி இன்று காலை இவ்வழக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய சில பிரதிநிதிகள், “கொரோனாவால் பாதிக்கப்பட்ட வாக்காளர்கள் பற்றிய பட்டியலே தமிழக தேர்தல் ஆணையத்திடம் கிடையாது. பிறகு எப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனியாக வாக்களிக்க வைக்க முடியும்?” என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளின்படி உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல்களே நடைபெறும் நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கு உயர் நீதிமன்றம் தடை விதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேநேரம் தமிழகம் உட்பட ஆறு மாநிலங்களில் கொரோனா அதிகமாக பரவி வருகிறது என்று ஒன்றிய அரசே தெரிவித்துள்ள நிலையில், முன்னாள் சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனரான நக்கீரனின் கோரிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.

மேலும் ஜெயங்கொண்டம் உள்ளிட்ட நகரப் பகுதிகளில் வார்டு வரையறை செய்திருப்பதில் அரசியல் சார்ந்த முறைகேடுகள் நடைபெற்றிருக்கின்றன என்று கூறியுள்ள பாமக வழக்கறிஞர் கே.பாலு இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தை நாடப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தப் பின்னணியில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை தமிழக அரசும், திமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் ஆர்வத்தோடு எதிர்பார்த்திருக்கின்றனர். அதேநேரம், ஒருவேளை உயர்நீதிமன்றம் தேர்தலுக்கு தடை விதிக்காவிட்டால் உடனடியாக தேர்தல் தேதியை அறிவுக்கவும் மாநில தேர்தல் ஆணையம் தயாராக இருக்கிறது.

-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக