செவ்வாய், 18 ஜனவரி, 2022

மாமனிதர் கர்னல் பென்னிகுயிக் வரலாற்றின் மீது சேறு பூச முயலும் போலிகள்

எங்கோ காட்டுக்குள் நடக்கும் ஒரு கட்டுமான பணிக்கு வரக்கூடிய ஒரு பணியாளர், வெறுமனே வந்து விட மாட்டார் என்பது வெண்ணிலா போன்ற களத்தில் நிற்காதவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. - அன்வர் பாலசிங்கம்

Aravind Akshan  : வரலாற்றின் உண்மைகள் குளிரூட்டப்பட்ட அறைக்குள் இல்லை:
கர்னல் பென்னிகுயிக் குறித்து தவறான செய்திகள் பரப்புவதை நிறுத்துவீர்களா கவிஞர் வெண்ணிலா அவர்களே…
ச.அன்வர் பாலசிங்கம் : எழுத்தாளன் என்பவன் உண்மையை உரக்க உரைக்கும் உரை கல்லாக இருக்க வேண்டும் என்பது நியதி. இந்த நியதியை நிறைய நேரங்களில் நிறைய பேர் கவனமாக கடந்து விடுகிறார்கள்.
புரட்சிகரமாக பேசுகிறோம் என்கிற போர்வையில் ஒன்றை பேசினால் இது விவாதிக்கப்படுமா, சர்ச்சை ஆகுமா என்பதை மனதில் கொண்டே இங்கு சிலர் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
இவர்களெல்லாம் தொழில்முறை எழுத்தாளர்கள். சமூகத்தின் பிரதிபலிப்பை உள் வாங்குவதில் இவர்களுக்கு நிரம்ப சிரமம் இருக்கிறது. இது போன்றவர்களை கவனமாகத் தவிர்க்க வேண்டும் என்று நினைத்தால் கூட, பொதுவெளியில் அவர்களுக்கான வெளிச்சத்தை கொடுப்பதற்கு நிறைய பேர் தயாராக இருப்பதால் மட்டுமே இந்த விளக்கம்.


குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்துகொண்டு புத்தகங்களை புரட்டி, ஆவணங்களை தேடி வரலாற்றை தீர்மானித்து  விட முடியும் என்று நினைப்பவர்கள், நல்ல கற்பனா வாதிகளாக இருக்க முடியுமே தவிர, உண்மையை உரைப்பவர்களாக இருக்க முடியாது.
எங்கோ திருவண்ணாமலையில் பிறந்த கவிஞர் வெண்ணிலா அவர்கள், முல்லைப்பெரியாறு அணையை பற்றி எழுதத் துணிந்தபோதே, பெரியார் அணை குறித்து ஏற்கனவே எழுதப்பட்ட பத்துக்கும்  மேற்பட்ட நூல்களில் இதுவும் ஒன்று என்றுதான் நான் நினைத்தேன்.
ஆனால் கவிஞர் வெண்ணிலா  அவர்கள் அதையும் தாண்டி, தற்போது மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கருத்துக்கு மறுப்பு தெரிவிக்கும் நிலைக்கு வந்த பின்பு நாம் அமைதி காக்க முடியாது.
மாண்புமிகு கர்னல் பென்னிகுயிக் அவர்களின் 181 வது பிறந்த நாளை முன்னிட்டு, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய  மாமனிதர் கர்னல் பென்னிகுயிக் அவர்களின் திருவுருவச் சிலை, அவரது சொந்த ஊரான இங்கிலாந்தில் இருக்கும் கேம் பர்லியில் உள்ள மைய பூங்காவில், தமிழக அரசின் சார்பில் நிறுவப்படும் என்கிற அறிவிப்பை வெளியிட்ட தோடு, மாமனிதருடைய தியாகத்தையும் அதில் நினைவுகூர்ந்திருந்தார்.
அதில் கூடுதலாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் பகிர்ந்த கருத்தைத்தான், கவிஞர் வெண்ணிலா அவர்கள் மறுத்திருக்கிறார்கள்.
இங்கிலாந்தில் உள்ள தன்னுடைய சொத்துக்களை எல்லாம் விற்று இங்கு கொண்டு வந்து அணையை கட்டியனார்  என்று மாண்புமிகு முதல்வர் அவர்கள் கூறிய கருத்து ஏற்புடையது அல்ல என்கிற வெண்ணிலாவின் கருத்தை ஐந்து மாவட்ட சங்கத்தின் சார்பிலும், 10 லட்சம் விவசாயிகளின் சார்பிலும் நிராகரிக்கிறோம்.
அதற்கு அவர் மேற்கோளாகக் காட்டி இருக்கும் ஒரு புத்தகம் உதவி பொறியாளராக இருந்த *மெக்கன்சி* எழுதிய *history of the periyar project* ஆகும்.
இந்தப் புத்தகத்தில் பொறியாளர் மெக்கன்சி அவர்களால், பெரியாறு அணை கட்டுமானம் குறித்த முழு வரவு செலவும் எழுதப்பட்டிருப்பதாக தரவுகளை முன்வைக்கிறார்.
கட்டுமான பணிகளுக்கான செலவு என்பது கட்டுமானம் மட்டுமே சார்ந்தது என்பதை கவிஞர் வெண்ணிலா கவனமாக மறந்துவிட்டார்.
கடும் நெருக்கடியில் ஒரு முறைக்கு பலமுறை அணை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட பின்பும், தனது விடாமுயற்சியை கைவிடாமல் அந்த மாமனிதர் செய்த தியாகம் என்பது வரவு செலவில் அடங்காது.
நிலைமை கை மீறும் போதெல்லாம் கட்டுமான பணியாளர்கள் காட்டு வழியாக தப்பித்து ஓடிவிடுகிறார்கள். தான் மேற்கொண்ட கட்டுமானம் தோற்று விடக் கூடாது என்பதற்காக,புதியவர்களை அழைத்து வரக்கூடிய பொறுப்பு என்பது அவ்வளவு சாதாரண பொறுப்பு அல்ல.
எங்கோ காட்டுக்குள் நடக்கும் ஒரு கட்டுமான பணிக்கு வரக்கூடிய ஒரு பணியாளர் ,வெறுமனே வந்து விட மாட்டார் என்பது வெண்ணிலா போன்ற களத்தில் நிற்காதவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.
அந்தப் பணியாளருக்கு முன்பணம் கொடுக்க வேண்டும், அவர்களை அழைத்து வருகிறவர்களுக்கு செலவுக்கு பணம் வேண்டும், இதற்கெல்லாம் மேலாக அன்றைக்கு இருந்த ஊர் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் ஒரு பணியாளரை அந்த ஊரிலிருந்து அழைத்து வர வேண்டுமானால் அந்த ஊரைச் சேர்ந்த பொறுப்பாளர்களுக்கு (நாட்டாமை, அம்பலம்) பணம் கொடுக்க வேண்டும் என்பதெல்லாம் மெக்கன்சி எழுதிய நூலில் கண்டிப்பாக எழுதப்பட்டு இருக்காது என்பதை கவிஞர் வெண்ணிலா உணரவேண்டும்.
தேவிகுளம், பீர்மேடு பகுதிகளில்
தேயிலை காடுகளை உருவாக்க, திருநெல்வேலி மதுரை புதுக்கோட்டை செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட தமிழ் தொழிலாளர்களுடைய வரலாறுகளை கவிஞர் வெண்ணிலா படித்திருந்தால் போகிறபோக்கில் இப்படி அந்த மாமனிதர் மீது இப்படி புழுதி வாரி தூற்றி இருக்கமாட்டார்.
கட்டுப்பாடு
மிகுந்த, பிரிட்டிஷ் இந்திய கவர்னர், இந்த செலவுகளை ஏற்றிருப்பாரா என்பதையும் வரலாற்று கண்ணோட்டத்தோடு உணர வேண்டும் நாம்.
இதைத்தாண்டி கட்டுமானப் பணியில் அகால மரணமடைந்த தொழிலாளிகளுக்கு கொடுக்கப்பட்ட இழப்பீட்டை மெக்கன்சி அந்தப் புத்தகத்தில் குறிப்பிடவில்லை என்பது கவிஞர் வெண்ணிலா விற்கு தெரியுமா...?
இழப்பீட்டை முறையாக கொடுக்காமல், புதிய தொழிலாளர்களை அழைத்து வந்திருக்க முடியுமா...?
இந்த இழப்பீட்டை எந்தக் கணக்கில் எழுதுவது...?
இதையெல்லாம் தாண்டி நடைமுறைச் செலவுகள் என்றொன்று இருக்கிறது.
அது கட்டுமான களத்தில் நிற்கிறவர்களுக்கு மட்டுமே தெரியும். தான் எழுதும் கட்டுரைகளுக்குள் புதைந்து கிடப்பவர்களுக்கு தெரிய நியாயமில்லை.
வரலாற்று ஆவணங்கள் எல்லாம் உண்மை என்று நம்பினால், நாம் எழுதுவது வரலாறாக இருக்காது.
இன்னும் சொல்லப்போனால் வரலாற்று ஆவணங்கள் எல்லாம் உண்மை என்று இந்த உலகம் நிரூபித்திருக்குமானால், அது ஏன் இன்னும் கலைப்பிரிவில் இருக்கிறது,எதற்காக அறிவியல் பிரிவிற்கு மாற்றப்படவில்லை என்கிற கேள்வியையும் எழுப்புகிறேன் நான்.
பெரியாறு அணை குறித்து கேள்வி எழுப்ப வேண்டுமானால், வெறும் புத்தகங்கள் மட்டும் போதாது, நடைமுறை அனுபவங்களும் வேண்டும்.
பிரிட்டிஷ் இந்திய கவர்னரின் உத்தரவை மீறி பென்னி குயிக் கால் அணை கட்டி இருக்க முடியுமா என்கிற அவரது கருத்து முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்று...
பிரிட்டிஷ் இந்திய கவர்னர் கட்டுமான பணியின் போது களத்தில் இருந்தவர் அல்ல... அவர் ஒரு நிர்வாகி அவ்வளவே.
அவருக்கு பிடித்ததெல்லாம் மாமனிதர் கர்னல் பென்னிகுவிக்கிடமிருந்த, அவரது அசைக்க முடியாத நம்பிக்கை மட்டும் தான். அதையும் கேள்விக்குள்ளாக்குகிறது கவிஞர் வெண்ணிலாவின் முறையற்ற கேள்விகள்.
ஒரு மாநிலத்தின் முதல்வர் ஒரு அறிக்கை கொடுக்கிறார் என்றால், அது எத்தனை விசாரணைகளுக்குப் பிறகு கொடுக்கப்பட்டிருக்கும் என்பதை கவிஞர் வெண்ணிலாவின் பார்வைக்கு முன் வைக்கிறேன்.
மேலாக சாமானியர்களிடம் புழங்கும் கதைகளையெல்லாம், முதல்வர் அறிக்கையாக வழங்கக் கூடாது என்கிற வெண்ணிலாவின் கருத்தில் புதைந்து கிடக்கிறது,,, தான் ஒரு மேதாவி என்கிற அதிகாரத்தனம்.
இதையெல்லாம் விட சின்னதாக ஒரு கேள்வியை கவிஞர் வெண்ணிலாவுக்கு முன்வைக்கிறேன்...
ஐந்து பெண் மகள்களைப் பெற்ற மாமனிதர் கர்னல் பென்னிகுயிக் அவர்கள் இறக்கும் போது அவரது மூத்த மகளுக்கு வயது 30. அதற்குப் பின்னால் வரிசையாக நான்கு பெண்கள் ஒரு ஆண்மகன்.
இதில் 3 பெண் மக்களுக்கு மணம் ஆகவில்லை என்கிற செய்தி குறித்து ஏதாவது தெரியுமா கவிஞர் வெண்ணிலா விற்கு.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்திய காலத்திலேயே நாம் இன்றைக்கு அனுபவித்துக் கொண்டிருக்கும் அத்தனை காதல் சுதந்திரங்களையும் பெற்றுவிட்ட பிரிட்டன் போன்ற முன்னேறிய  நாடுகளில், மாமனிதரின் மூன்று மகள்களுக்கு திருமணம் ஆகவில்லை என்கிற செய்தியை எப்படி மதிப்பீடு  செய்கிறீர்கள் என்பதை தெரிந்துகொள்ள ஆவலாய் இருக்கிறோம்.
ஒரு அரசை கேள்வி கேட்கும் அளவிற்கு சென்றுவிட்ட நீங்கள், பிரிட்டனுக்குச் சென்று அவருடைய கடைசி காலத்தில் வாழ்ந்த வாழ்க்கை முறையை, அவரது குடும்பத்தின் அன்றைய நிலையையும் இன்றைய நிலையையும் ஒப்பிட்டு சரிபார்ப்பு செய்து முதல்வருக்கு அறிவுரை வழங்கி இருக்க வேண்டுமே தவிர,
கேவலம் மெக்கன்சி என்கிற ஒரு பொறியாளர் எழுதிய புத்தகத்தை முன்வைத்து மட்டுமே கேள்வி எழுப்பி இருப்பது என்பது, எனக்கு எல்லாம் தெரியும் என்கிற கொடிய மனோபாவம் என்பதை நாம் மறுப்பதற்கில்லை.
கேம்பர்லியில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்திற்கு செல்லுங்கள். வரலாற்றை தேடுங்கள்.
புத்தகங்களை முன்நிறுத்தி வரலாறு படைக்க முயலாதீர்கள்.
கள ஆய்வு செய்யுங்கள். அதனடிப்படையில் ஒரு முடிவுக்கு வாருங்கள்.
நீங்கள் கேள்வி எழுப்பி இருப்பது ஏதோ ஒரு ராஜேந்திர பாலாஜிக்கு  எதிரானதல்ல...
தேனி திண்டுக்கல் மதுரை சிவகங்கை ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்கள் அனுதினமும் வணங்கும் ஒரு  மனித தெய்வத்திற்கு எதிரானது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
மேலாக ஒரு கட்டுமானப் பணி என்பது வெறும் செங்கல் சிமென்ட் கம்பி கொத்தனார் மட்டுமே சார்ந்தது அல்ல.
அதையும் தாண்டி கண்ணுக்குத் தெரியாமல்  மொத்த க்கட்டுமானச் செலவில், கால்வாசி அளவுக்கு வரும் வகையில் மற்ற  செலவுகளும் உள்ளீடாக இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
Ends justify the means  
முடிவுகள் முறைகளை நியாயப்படுத்தும் என்கிற மாக்கியவல்லியின் கூற்றோடு கட்டுரையை நிறைவு செய்கிறேன் ‌.
பி.கு-மாமனிதர் கர்னல் பென்னி குக் அவர்களின் துணைவியார் திருமதி கிரேஸ் ஜார்ஜியானா அம்மையார் அவர்களின் டைரிக் குறிப்பை தேடிக்கொண்டிருக்கிறோம்.
தன்னுடைய ஆபரணங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு புதுக்கோட்டை மன்னரை சந்திப்பதற்காக திருமதி கிரேஸ் அம்மையார் எதற்காக சென்றார் என்பதை குறித்தும் தேடிக்கொண்டிருக்கிறோம்.
ஏனென்றால் வரலாறு என்பது வெறுமனே ஒரு புத்தகத்தில் மட்டுமே அடங்கி இருக்கிறது என்று சாமானியர்களை எல்லாம் அடக்கிவிட துடிக்கிற அதிகாரத் திமிர் எங்களிடம் கிடையாது.
மாமனிதர் கர்னல் பென்னிகுயிக் பிறந்த இங்கிலாந்தில் உள்ள கேம்பர்லி  நகரில் இருக்கும் மைய பூங்காவில் ,அந்த மாமனிதருக்கு திருவுருவச் சிலை நிறுவ இருக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு ஐந்து மாவட்ட விவசாயிகளின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றி.
ச.அன்வர் பாலசிங்கம்
ஒருங்கிணைப்பாளர்
ஐந்து மாவட்ட விவசாய சங்கம்.
16-01-2022,
செங்கோட்டை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக