திங்கள், 31 ஜனவரி, 2022

கறார் காட்டும் திமுக! சென்னையில் கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடங்கள்.. பரபர தகவல்

சென்னை

Vigneshkumar -  Oneindia Tamil : சென்னை: தலைநகர் சென்னையில் 200 வார்டுகள் உள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக தரப்பு ஒதுக்க முன்வந்துள்ள வார்டுகளின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
மொத்தம் 12838 வார்டு உறுப்பினர் பதவிகளை நிரப்ப வரும் பிப்ரவரி 19இல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், பிப்ரவரி 22இல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.


பதவி விலகாமல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு செய்தால் தகுதி நீக்கம் - மாநில தேர்தல் ஆணையம் பதவி விலகாமல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு செய்தால் தகுதி நீக்கம் - மாநில தேர்தல் ஆணையம்

இந்த முறை அதிமுக, அதிமுக உள்ளிட்ட 9 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. அதில் திமுக கூட்டணியில் இதுவரை அதில் எவ்வித மாற்றமும் இல்லை. கடந்த 2019 மக்களவை தேர்தல் சமயத்தில் உருவாக்கப்பட்ட கூட்டணியே சட்டசபைத் தேர்தல், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்களிலும் தொடர்ந்தது. இப்போதும் கூட அதே கூட்டணி தான் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 9 மாத திமுக ஆட்சிக்கு மக்கள் ஆதரவு அமோகமாக உள்ளதாலும் எதிர்ப்புகள் பெரியளவில் இல்லை என்பதாலும் அதிகபட்ச இடங்களில் போட்டியிட திமுக விரும்புகிறது. இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் குறைந்தது 80%, அதாவது 10 ஆயிரம் இடங்களில் போட்டியிட திமுக திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல 21 மேயர் இடங்களையும் தானே வைத்துக் கொள்ள திமுக திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்குப் பதிலாகக் கூடுதலாகத் துணை மேயர் பதவிகளைக் கூட்டணிக்குக் கொடுக்க திமுக மசெக்கள் விரும்புவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

திமுக கூட்டணியில் இடப்பங்கீட்டைப் பொறுத்தவரை மாவட்ட அளவிலேயே தேர்தல் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுகவில் மொத்தம் 77 மாவட்டச் செயலாளர்கள் உள்ள நிலையில், அவர்களுடன் தான் மற்ற கூட்டணி நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். சென்னையைப் பொறுத்தவரைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள வட சென்னைக்கு அமைச்சர் சேகர்பாபு மற்றும் தென் சென்னைக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் இடப்பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இது தவிர திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் உடனும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பேசி வருகின்றனர். இந்த பேச்சுவார்த்தை 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. காங்கிரஸ், விசிக தலைவர்களுடன் ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் சந்தித்துப் பேசியுள்ளார். வரும் நாட்களில் மற்ற கட்சித் தலைவர்களையும் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையைப் பொறுத்தவரை மொத்தம் 200 வார்டுகள் உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி குறைந்தபட்சம் 10 வார்டுகளை கேட்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல மற்ற அரசியல் கட்சிகளும் தங்களுக்கு ஏற்ற இடங்களைக் கேட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தாங்கள் போட்டியிட விரும்பும் இடங்களைக் கொண்ட பட்டியலை ஏற்கனவே திமுக தரப்பிடம் அரசியல் கட்சிகள் அளித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், 200 வார்டுகளை கொண்ட சென்னை மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு 4 வார்டுகளை மட்டுமே ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல சிபிஎம் சிபிஐ, விசிக, மதிமுக ஆகிய கட்சிகளுக்கு தலா 2 வார்டுகளை மட்டுமே ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், தங்களுக்குக் கூடுதல் வார்டுகள் வேண்டும் என பல்வேறு கட்சிகளும் பேசி வருகின்றனர்.

ஏற்கனவே, வேட்பு மனுத் தாக்கல் தொடங்கிவிட்ட நிலையில், இடப்பங்கீட்டை விரைவாக முடிக்க திமுக தரப்பு விரும்புகிறது. எனவே, இடப்பங்கீட்டில் இன்று திங்கள்கிழமை இறுதி முடிவு எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. சென்னையை பொறுத்தவரை இன்று பொறுப்பாளர்கள் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உடன் இடப்பங்கீட்டை இறுதி செய்து, தலைமைக்கு அனுப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக