வியாழன், 27 ஜனவரி, 2022

பனையோலை தயாரிப்புகளையும் மஞ்சப்பை போல் அரசு ஊக்குவிக்க வேண்டும்!

மஞ்சப்பை போல் பனையோலை தயாரிப்புகளையும் அரசு ஊக்குவிக்க வேண்டும்!

மின்னம்பலம் : தமிழக அரசு ‘மஞ்சப்பை’ திட்டத்தை மீண்டும் தொடங்கியிருப்பது போல பனையோலை தயாரிப்புகளை ஊக்குவிப்பதுடன் இந்தத் தொழில் மேம்பாடு அடைய அரசு, சிறுதொழில் கடன் வழங்கிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பனையோலை உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் கிராமப்புறங்களில் பனையோலைப் பெட்டிகள் இல்லாத மிட்டாய்க் கடைகளைப் பார்க்க முடியாது.தின்பண்டங்களைச் சாப்பிட்டுத் தீர்ந்த பிறகு அதே பெட்டிகளுக்குள் கருப்பட்டியை வைத்து பாதுகாத்து பயன்படுத்துவார்கள். மேலும் இறைச்சிக் கடைகளில்கூட பனையோலைப் பெட்டிகள் பயன்பாட்டில் இருந்தன.

நாளடைவில் அட்டைப்பெட்டிகள், பிளாஸ்டிக் பைகளின் வரவால் பனையோலைப் பெட்டிகளின் பயன்பாடு குறைந்ததுடன், அத்தொழிலும் நலிவடைந்துவிட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் உடன்குடி, திருச்செந்தூர், நாகலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பனையோலைப் பெட்டிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. 2,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பனையோலைப் பெட்டிகளை உற்பத்தி செய்து வந்தன. இந்த நிலையில், தற்போது 200-க்கும் குறைவான குடும்பங்களே உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கொரோனா ஊரடங்கால் ஆங்காங்கே பெயரளவுக்கு நடந்து வந்த உற்பத்தியும் தற்போது முடங்கிப்போயுள்ளது. தற்போதைய தமிழக அரசு, மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை தொடங்கியுள்ள நிலையில் பனையோலைப் பெட்டிகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் என பனையோலைப் பெட்டி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,

இதுகுறித்து பேசியுள்ள நாகலாபுரத்தைச் சேர்ந்த பனையோலை உற்பத்தியாளர்கள், “பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்கும் விதமாக மீண்டும் மஞ்சப்பைகளைப் பயன்படுத்திட வேண்டும் எனத் தமிழக அரசு தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் பேக்கரி கடைகள், இறைச்சிக் கடைகளில் பிளாஸ்டிக்கை தவிர்த்து பனையோலைப் பெட்டிகளைப் பயன்படுத்திடவும் அரசு வலியுறுத்த வேண்டும்.

இதனால், பனையோலை தயாரிப்புகள் அதிகரிப்பதுடன், உற்பத்தியாளர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். சிறுதொழில்களுக்கு அரசு கடன் வழங்குவதைப் போல, எங்களுக்கும் அரசு மானிய விலையில் சிறு கடன் வழங்கிட வேண்டும். மக்கள் விரும்பினால், பல வகையான கலர் கலர் பெட்டிகளையும் உற்பத்தி செய்ய முடியும்” என்கின்றனர்.

-ராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக