திங்கள், 31 ஜனவரி, 2022

அதிமுகவின் வேட்பாளர் பட்டியல்: பாஜக கூட்டணி முறிவு!

அதிமுகவின் வேட்பாளர் பட்டியல்: பாஜக கூட்டணி முறிவு!

மின்னம்பலம் : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் நேற்று ஜனவரி 30 இரவு அதிமுக தனது முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
கடலூர் மாநகராட்சி, கடலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி மற்றும் விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் நகராட்சி, தர்மபுரி நகராட்சி ஆகியவற்றுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் நேற்று இரவு வெளியிடப்பட்டது.


நேற்று முன்தினம் ஜனவரி 29ஆம் தேதி பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த நான்கரை மணி நேர பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. நேற்று பாஜக குழுவினர் மீண்டும் வருவார்கள் என ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அதிமுக தலைமைக் கழகத்தில் காத்திருந்தனர்.

ஆனால், பாஜக தலைவர் அண்ணாமலை அரியலூர் சென்றுவிட்ட நிலையில் அக்கட்சியின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்குச் செல்லவில்லை.

அதேநேரம் பாஜகவின் உள்ளாட்சித் தேர்தல் பொறுப்பாளரான நிர்மல்குமார் சுரானா கமலாலயத்துக்கு வந்து அதிமுக கூட்டணி தொடர்பாக அவசர ஆலோசனை நடத்தினார். இதனிடையே அரியலூர் சென்றுவிட்டு நேற்று இரவு சென்னை திரும்பிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கட்சியின் பிற தலைவர்களுடனும் டெல்லி நிர்வாகிகளுடன் பேசியுள்ளார்.

அதிமுக தனது முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதிலிருந்து அக்கட்சி தனித்துப் போட்டியிட முடிவு செய்துவிட்டதாக உறுதியானது.

இந்த நிலையில் பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலும் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என்பதே தற்போதைய நிலவரம்.

வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக