வியாழன், 13 ஜனவரி, 2022

நீட் விலக்கு: பிரதமரிடம் வலியுறுத்திய முதல்வர் ஸ்டாலின் .. மருத்துவ கல்லூரி திறப்பு விழாவில் ..

 மின்னம்பலம் : நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளையும், சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு மையத்தின் மத்திய நிறுவன கட்டடத்தையும் பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார்.
அப்போது தமிழக அரசின் திட்டங்களைப் பட்டியலிட்ட முதல்வர் ஸ்டாலின், “மருத்துவத் துறையில் நமது நாட்டிற்கே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கான அனுமதியையும், ஒத்துழைப்பையும், நிதி ஒதுக்கீடுகளையும் வழங்கி வரும் ஒன்றிய அரசுக்கும் - குறிப்பாக, இந்தியப் பிரதமருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பல மாநிலங்களில் மருத்துவர்களின் பற்றாக்குறை நிலவி வரும் இச்சூழலில், தமிழ்நாட்டில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் கிராமப்புறங்களிலும் அரசுத் துறையிலும் சிறப்பாகச் சேவை செய்வதற்குத் தமிழ்நாடு அரசின் மாணவர் சேர்க்கை கொள்கையே அடிப்படையாகும். எங்களது கொள்கை, இந்த வாய்ப்புகளைத் தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற - ஏழை - எளிய மாணவர்களுக்குக் கிடைக்கச் செய்வதே.

தமிழ்நாட்டின் மருத்துவத்துறையின் வெற்றியும் இந்தக் கொள்கையின் விளைவே. இந்த அடிப்படைக் கொள்கை பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். எனவே மனிதவள ஆற்றலின் அடித்தளமாக அமைந்துள்ள மாணவர் சேர்க்கை முறை தொடர்பான தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஒன்றிய அரசு நிறைவேற்றித் தர வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

முன்னதாக, முதல்வராகப் பொறுப்பேற்றதும் பிரதமரைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் நீட் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக