வியாழன், 6 ஜனவரி, 2022

மோடி பஞ்சாப் கூட்டம் - 7000 நாற்காலிகள் தயார்- வெறும் 700பேர்கள்தான் வந்தனர்! மோடி திரும்பிச் சென்ற காரணம்

 கலைஞர் செய்திகள் : "70,000 பேருக்காக நாற்காலிகளை பா.ஜ.கவினர் ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் 700 பேர்தான் நிகழ்ச்சிக்கு வந்தனர். இதன் காரணமாகவே நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளனர்” என பஞ்சாப் முதல்வர் குற்றம்சாட்டியுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி இன்று பஞ்சாப்பில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கச் சென்றார். இதற்காக பதிந்தா விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக பயணிக்க இருந்தார்.
மோசமான வானிலை காரணமாக 20 நிமிடங்கள் விமான நிலையத்தில் காத்திருந்தார் மோடி. வானிலை சீரடையாததால் 100 கி.மீ தொலைவுக்கு சாலை மார்க்கமாக கடப்பது என முடிவு செய்தார்.

ஒன்றிய அரசு கொண்டு வந்து தற்போது ரத்து செய்துவிட்ட புதிய வேளாண் சட்டங்களுக்கு பஞ்சாப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இன்று பிரதமரின் கான்வாயை போராட்டக்காரர்கள் மறித்தனர்.

இதனால் சுமார் 20 நிமிடங்கள் மேம்பாலத்திலேயே காத்திருந்த பிரதமர் மோடி, நிலைமை சீரடையாத நிலையில் மீண்டும் விமான நிலையம் திரும்பினார். அவர் பங்கேற்கவிருந்த பெரோஸ்பூர் பொதுக்கூட்டமும் ரத்து செய்யப்பட்டது.

விமான நிலையத்தில் இருந்த மாநில அரசு அதிகாரிகளிடம் பிரதமர் மோடி, “உயிருடன் திரும்பிச் செல்ல அனுமதித்ததற்காக உங்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.” எனக் கோபமாகக் கூறிவிட்டுச் சென்றதாக தகவல் வெளியானது.

இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் குறித்து பஞ்சாப் அரசிடம் விரிவான விளக்கம் கேட்கப்படும் எனவும் மாற்று பயணத்திற்காக பிரதமர் சாலை வழியாக செல்லும் நேரும்போது பஞ்சாப் அரசு கூடுதல் பாதுகாப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும் எனவும் ஒன்றிய உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
“பிரதமர் மோடி திரும்பிச் சென்றதற்கான உண்மையான காரணம் இதுதான்” : போட்டு உடைத்த பஞ்சாப் முதலமைச்சர்!

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, “எங்கள் மீது தவறு இல்லை. இதில் பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை. பிரதமர் மோடி விமானம் மூலம் வர திட்டமிட்டிருந்தார். ஆனால் எங்களுக்கு தெரிவிக்காமல் சாலை மார்க்கமாக வந்தார்.

பிற்பகல் 3 மணிக்குள் சாலைகளில் இருந்து செல்லுமாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போராட்டக்காரர்களிடம் நான் கோரிக்கை விடுத்திருந்தேன்.

பிரதமரின் நிகழ்ச்சிக்கு 70,000 பேருக்காக நாற்காலிகளை பா.ஜ.கவினர் ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் 700 பேர்தான் நிகழ்ச்சிக்கு வந்தனர். இதன் காரணமாகவே அவர்கள் சாக்குப்போக்கு சொல்லி மற்ற காரணங்களை கூறி நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளனர்” எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக