புதன், 19 ஜனவரி, 2022

அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு, 30 சதவீத ஊக்க மதிப்பெண் வழங்க தடையில்லை -உயர்நீதிமன்றம் உத்தரவு

 மாலைமலர் :அரசு மருத்துவர்களுக்கு மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு, ஊக்க மதிப்பெண் வழங்குவதால் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படித்தவர்களின் வாய்ப்பு பறிக்கப்படுவதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது.
சென்னை:  கிராமப்புறங்களில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு முதுகலை மருத்துவப் படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் 30 சதவீதம் ஊக்கத்தொகை மதிப்பெண் வழங்கப்படும் என அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசுசாரா மருத்துவர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

அரசு மருத்துவர்களுக்கு மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு, ஊக்க மதிப்பெண் வழங்குவதால் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படித்தவர்களின் வாய்ப்பு பறிக்கப்படுவதாக அவர்கள் தங்கள் மனுவில் கூறியிருந்தனர். இரண்டில் ஏதாவது ஒன்றை மட்டும் அரசு மருத்துவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும்  கூறியிருந்தனர்.

இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அப்போது, கிராமப்புறங்களில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு, 30 சதவீத ஊக்க மதிப்பெண் வழங்க தடையில்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அரசு மருத்துவர்கள் பொதுப்பிரிவு சேர்க்கையிலும் பங்கேற்கலாம் என நீதிபதி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக