புதன், 12 ஜனவரி, 2022

உத்தர பிரதேசத்தில் 5 பாஜக எம்.எல்.ஏக்கள் (ஒரு அமைச்சர் )சமாஜ்வாதி கட்சியில் (அகிலேஷ்) இணைந்தனர்!

  Mathivanan Maran  -  Oneindia Tamil :  லக்னோ: சட்டசபை தேர்தல் நடைபெறும் உத்தரப்பிரதேசத்தில் பாஜகவை சேர்ந்த அமைச்சர் ஸ்வாமி பிரசாத் மெளரியா மற்றும் 4 எம்.எல்.ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளனர்.
ஒரே நாளில் அதுவும் 4 மணிநேரத்தில் மொத்தம் 5 எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்திருப்பது பாஜக மேலிடத்தை கடுமையாக அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 10-ந் தேதி முதல் மார்ச் 7-ந் தேதி வரை 7 கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.
அனைத்து கட்ட வாக்குகளும் மார்ச் 10-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.


உ.பி. கருத்து கணிப்புகள் உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பாஜக ஆட்சியைத் தக்க வைக்கும் என்கின்றன கருத்து கணிப்புகள்.

ஆனால் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி தேர்தல் களத்தில் கடும் போட்டியை பாஜகவுக்கு ஏற்படுத்தும் என்றும் அதே கருத்து கணிப்புகள் சுட்டிக்காட்டி உள்ளன.
அகிலேஷ் கட்சியில் பாஜக அமைச்சர் அகிலேஷ் கட்சியில் பாஜக அமைச்சர் இந்நிலையில் உ.பி. அரசியலில் திடீர் திருப்பமாக பாஜகவை சேர்ந்த அமைச்சர் ஸ்வாமி பிரசாத் மவுரியா தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஸ்வாமி பிரசாத் மவுரியா, விவசாயிகளையும் தலித்துகளையும் பாஜக அரசாங்கம் கண்டுகொள்ளாமல் புறக்கணித்துவிட்டது. உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆட்சியில் சிறுகுறு தொழில்கள் நலிவடைந்துவிட்டன. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

ஒரே நாளில் 5 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா ஸ்வாமி பிரசாத் மவுரியாவைத் தொடர்ந்து ரோஷன் லால் வர்மா, பிரஜேஷ் பிரஜாபதி, பகவதி சாகர் ஆகிய 3 பாஜக எம்.எல்.ஏக்களும் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர்.
இந்த அறிவிப்பை வெளியிட்ட கையோடு அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியில் இணைந்துவிட்டனர். இதன் பின்னர் 5-வதாக வினய் ஷாக்யா என்ற எம்.எல்.ஏ.வும் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இன்று ஒரே நாளில் அதுவும் 4 மணிநேரத்தில் 5 பாஜக எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்திருப்பது அக்கட்சி மேலிடத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

பாஜகவின் 13 எம்.எல்.ஏக்கள் விலகல்? உ.பி.யில் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பாஜகவை விட்டு வெளியேறி சமாஜ்வாதி கட்சியில் இணைந்திருப்பது தேசிய அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், உ.பி.யில் மேலும் 13 பாஜக எம்.எல்.ஏக்கள் அக்கட்சியில் இருந்து வெளியேறி சமாஜ்வாதி கட்சியில் இணையப் போகின்றனர் என கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக