ஞாயிறு, 30 ஜனவரி, 2022

ஒரே ஆண்டில் 31 அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வி இருக்கை! புதுக்கோட்டை மாவட்டத்தில்

 Vigneshkumar -  Oneindia Tamil  :  புதுக்கோட்டை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கப்படும் நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 31 அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ படிப்புகளில் சேர்ந்துள்ளனர்.
நீட் தேர்வு அமலுக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே நீட் மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு மருத்துவ படிப்புகளுக்கான இதற்கான தரவரிசை பட்டியல் கடந்த 24ஆம் தேதி வெளியிடப்பட்டது. அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு, அரசு மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு என தனித்தனியாகத் தரவரிசை வெளியிடப்பட்டது.


முதல் நாளான கடந்த 27ஆம் தேதி தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே நீட் தேர்வின் மூலமே மருத்துவ படிப்புகள் நிரப்பப்பட்டு வருகிறது இதற்கான தரவரிசை பட்டியலைக் கடந்த 24ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த ஜன 28 மற்றும் ஜன.29 தேதிகளில் 7.5% உள் ஒதுக்கீடு கலந்தாய்வு நடைபெற்றது. இதில் மொத்தம் 544 அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவ இடங்களைப் பெற்றனர்.

இதில் அதிகபட்சமாகப் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து மட்டும் 31 அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் மருத்துவ சீட்களை பெற்றுள்ளனர். குறிப்பாக, புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்த 6 பேருக்கு எம்பிபிஎஸ் சீட் கிடைத்துள்ளது. அதேபோல அம்மாவட்டத்தில் உள்ள மற்ற அரசு பள்ளிகளில் பயின்ற 19 பேருக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்துள்ளது.

எம்பிபிஎஸ் மட்டுமின்றி பல் மருத்துவத்திற்கான பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வும் நடைபெற்றது. அதிலும் அரசுப் பள்ளிகளில் படித்த 6 பேருக்கு அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இடங்கள் கிடைத்துள்ளன. அதாவது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் படித்த 25 பேருக்கு எம்பிபிஎஸ் இடங்கள், 6 பேருக்கு பிடிஎஸ் இடங்கள் என மொத்தம் 31 பேருக்கு இந்த ஆண்டில் மட்டும் மருத்துவ இடங்கள் கிடைத்துள்ளன.

இதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு நேரில் சென்று ஆசிரியர்களையும் மருத்துவ இடங்களைப் பெற்ற மாணவிகளையும் பாராட்டினர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சாமி.சத்தியமூர்த்தி, "புதுக்கோட்டையில் அரசுப் பள்ளிகளில் படித்த 25 பேருக்கு எம்பிபிஎஸ் சீட்டும், 6 பேருக்கு பிடிஎஸ் சீட்டும் கிடைத்துள்ளது.

மாவட்டத்தில் ஒரே ஆண்டில் அதிக எண்ணிக்கையில் மருத்துவ சீட் கிடைத்திருப்பது இதுவே முதல்முறையாகும். குறிப்பாக இந்த கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்த 6 பேருக்கு எம்பிபிஎஸ் சீட்டும் ஒருவருக்கு பிடிஎஸ் சீட்டும் கிடைத்துள்ளது. இந்த பள்ளியின் முன்னாள் ஆசிரியர் என்பதில் எனக்கும் பெருமிதம் தான். இந்த பள்ளியில் தேவையான வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேபோல மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் தங்கள் மருத்துவக் கனவை நிறைவேற்றும் வகையில் தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மாவட்ட ஆட்சியரின் ஆலோசனைப்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்னோடி நீட் பயிற்சி மையமும் தொடங்கப்படும். அதேபோல அரசுப் பள்ளி மாணவர்கள் பயிற்சி பெறும் வகையில் பயிற்சி மையம் ஏற்படுத்தப்படும்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக