திங்கள், 3 ஜனவரி, 2022

மனைவி, 2 மகன்களை கொன்று வங்கி அதிகாரி தற்கொலை! ஆன்லைன் விளையாட்டில் ஒரு கோடியை இழந்த சென்னை....

சென்னை: மனைவி, 2 மகன்களை கொன்று வங்கி அதிகாரி தற்கொலை

தினத்தந்தி : ஆலந்தூர்,  சென்னையை அடுத்த பெருங்குடி பெரியார் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் மணிகண்டன் (வயது 36). இவருடைய மனைவி தாரா என்ற பிரியா (35). இவர்களுக்கு தரன் (10), தாஹன் (1) என 2 மகன்கள் இருந்தனர்.
இவர்களது சொந்த ஊர் கோவை ஆகும். மணிகண்டன், லண்டனில் உள்ள ஒரு வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். கடந்த ஒரு வருடத்துக்கு முன்புதான் பெருங்குடியில் உள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு குடிவந்தார். அதன்பிறகு இங்குள்ள ஒரு தனியார் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். பிரியாவும், வங்கியில் வேலை செய்து வந்ததாக தெரிகிறது.

கணவன்-மனைவி இருவரும் வங்கியில் வேலை செய்து வந்ததால் ஆடம்பரமாக வாழ்ந்து வந்ததாகவும், கடந்த 2 மாதங்களாக மணிகண்டன் வேலைக்கு செல்லவில்லை எனவும் கூறப்படுகிறது.
நேற்று மதியம் நீண்டநேரம் ஆகியும் மணிகண்டன் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. கதவை தட்டியும் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், இதுபற்றி துரைப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக போலீஸ் உதவி கமிஷனர் ரவி, இன்ஸ்பெக்டர் வளர்மதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மணிகண்டன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அங்கு படுக்கை அறையில் 2 குழந்தைகளும், பிரியாவும் பிணமாக கிடப்பதையும், சமையல் அறையில் மணிகண்டன் தூக்கில் பிணமாக தொங்குவதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.ம
பிரியாவின் தலையில் ரத்த காயங்கள் காணப்பட்டது. வீட்டில் இருந்த கிரிக்கெட் மட்டை ஒன்று ரத்தகறை படிந்த நிலையில் கிடந்தது. ஆனால் அவர்களது மகன்கள் இருவருக்கும் எந்த காயமும் காணப்படவில்லை. எனவே மணிகண்டன், கிரிக்கெட் மட்டையால் தனது மனைவி பிரியாவை அடித்து கொன்றுவிட்டு, தூங்கி கொண்டிருந்த தனது மகன்கள் இருவரையும் தலையணையால் முகத்தை அழுத்தி கொலை செய்து உள்ளார்.

அதன்பிறகு சமையல் அறைக்கு சென்ற மணிகண்டன், அங்கு வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. 4 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக ராயபேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

கடன் தொல்லை

மேலும் இதுபற்றி துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மணிகண்டன், பெட்ரோல் நிலையம் அமைக்க இருப்பதாக கூறி நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் ரூ.75 லட்சத்துக்கும் அதிகமாக கடன் வாங்கியதாகவும், ஆனால் அந்த பணத்தை ஷேர் மார்க்கெட், ஆன்-லைன் சூதாட்டத்தில் இழந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு அவருக்கு நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே கடந்த சில நாட்களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த மணிகண்டன், மனைவி, 2 மகன்களை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

எனினும் மணிகண்டன் பலரிடம் கடன் வாங்கினாரா? கடன் கொடுத்தவர்கள் அவருக்கு நெருக்கடி கொடுத்தார்களா? அல்லது வேறு ஏதும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் கடன் வாங்கிய பணத்தை அவர் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்தாரா? என அவரது செல்போனை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக