வியாழன், 13 ஜனவரி, 2022

மனைவி மாற்றும் குழுக்களில் இணைந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கணவரை பிரிந்தனர்

மாலைமலர் : திருவனந்தபுரம் கேரள மாநிலம் கோட்டயம் கருக்கச்சால் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை அவரது கணவரே நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க வற்புறுத்தியதாக போலீஸ் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார்.
கோட்டயம் போலீஸ் சூப்பிரண்டு இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்து பெண்ணின் கணவரை கைது செய்தார். அவரிடம் விசாரணை நடத்தியபோது, கேரளாவில் மனைவி மாற்றும் குழுக்கள் ரகசியமாக செயல்பட்டது தெரிய வந்தது.
பல்வேறு பெயர்களில் இன்ஸ்டாகிராம், டெலிகிராம், வாட்ஸ் அப்களில் இக்குழுக்கள் இயங்கி வந்ததும், இதில் ஆயிரக்கணக்கானோர் உறுப்பினர்களாக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.


இக்குழுவில் இணைந்தவர்கள், குழுவில் இருந்து வெளியேறாமல் இருக்க பல்வேறு ரகசிய நடவடிக்கைகளையும் குழுவினர் மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக குழுவில் முதன்முறை உறுப்பினராக சேருவோர், மனைவியுடன் விருந்துக்கு வரவழைக்கப்படுவார்.

அங்கு அவருக்கு மற்ற உறுப்பினர்களின் மனைவியர் அறிமுகம் செய்து வைக்கப்படுவார். அவர்களுடன் பழகுவதற்கு குறிப்பிட்ட நேரம் வழங்கப்படும். இதில் புதிய உறுப்பினருடன், நெருங்கி பழகும் பெண்ணுடன், புதிய உறுப்பினர் உல்லாசமாக இருக்க ஏற்பாடு செய்யப்படும்.

இதுபோல புதிய உறுப்பினரின் மனைவிக்கும் ஆண் நண்பர் அறிமுகப்படுத்தப்படுவார். சிறிது நேர பழக்கத்திற்கு பிறகு அந்த நபரோடு உல்லாசம் காண புதிய உறுப்பினரின் மனைவிக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.

புதிய உறுப்பினர் மனைவி கண் எதிரே பிற பெண்களுடன் நெருக்கமாக இருப்பது, இதுபோல உறுப்பினரின் மனைவி பிற ஆண்களுடன் நெருக்கமாக இருப்பது அவர்களுக்கு தெரியாமலேயே படம் பிடிக்கப்படும். இந்த விருந்துக்கு பிறகு உறுப்பினர் யாராவது இதுபற்றி வெளியே கூறி விடுவோம் என்று தெரிவித்தால், அவர்களை குழுவினர் இந்த ஆபாச படங்களை காட்டி மிரட்டுவார்கள்.

இதற்கு பயந்து பல பெண்கள் இந்த கொடுமையை வெளியே கூறாமல் தவிர்த்து வந்தனர். தற்போது புகார் கூறிய பெண்ணும், 2 ஆண்டுகளுக்கு முன்பே இச்சம்பவம் பற்றி போலீசில் புகார் அளித்தார். அதனை போலீசார் முறையாக விசாரிக்கவில்லை. மாறாக இப்படியும் நடக்குமா? என்று புகார் கொடுத்த பெண்ணை கேலி செய்து திருப்பி அனுப்பி விட்டனர்.

இதனால் நொந்துபோன பெண், கணவரின் கொடுமைக்கு பணிந்து போக வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த பெண்ணை போல இக்குழுவில் கணவரின் நிர்பந்தத்தால் இணைந்த பல பெண்களும் மனதுக்குள் புழுங்கியபடியே இருந்தனர்.

இப்போது இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததும், குழுவில் இருந்த பலர், குழுவை விட்டு வெளியேறுவது அதிகரித்து வருகிறது. இக்குழுக்கள் சைபர் கிரைம் கண்காணிப்பில் இருப்பதால் குழுவில் இருந்து யார்? யார்? வெளியேறுகிறார்கள் என்பது சைபர் கிரைம் நிபுணர்கள் கண்காணித்து வருகிறார்கள்.

குழுவில் இருந்து வெளியேறுவோரில் பெண்களே அதிகம் என்று தெரிகிறது. இந்த பெண்களில் 100-க்கும் மேற்பட்டோர் ஏற்கனவே கணவரை பிரிந்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதுபற்றி போலீசார் கூறும்போது, இக்குழுக்களில் சேரும் பெண்கள் முதலில் ஆர்வமாக இருந்தாலும் பின்னர் பலரும் தங்களை உல்லாசத்திற்கு அழைப்பதால் மனம் வெறுத்து விட்டனர்.

இதேநிலை நீடித்தால் சமூகத்தில் தங்களுக்கு விபசாரி முத்திரை குத்தப்பட்டு விடும் என்று கருதி கணவரை பிரிந்து சென்று விட்டனர். இன்னும் சிலர் கணவரை விட அவரது நண்பர்களே மேல் என்ற எண்ணத்தில் கணவரையும், குடும்பத்தையும் பிரிந்து ஏனோதானோ வாழ்க்கைக்கு மாறி விட்டனர்.

கேரளாவில் இத்தகைய குழுக்கள் மூலம் சமூகத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து சமூக ஆர்வலர்கள் பலரும் வருத்தம் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வற்புறுத்தினர்.

இதற்கிடையே கேரள மாநில மகளிர் ஆணைய தலைவி சதிதேவி இந்த விவகாரத்தை விரிவாக விசாரிக்க வேண்டுமென்று கூறி உள்ளார். இது தொடர்பாக டி.ஜி.பி. தலைமையில் உயர்மட்ட குழு அமைத்து இக்குழுக்களை தொடங்கியவர்களை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கூறி உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக