வியாழன், 30 டிசம்பர், 2021

ராகுல் வெளிநாட்டு பயணம்! காங்கிரஸ் பஞ்சாப் பேரணி ரத்து .. இந்த நேரத்தில் தேவையா? தொண்டர்கள் கேள்வி,

 

 மின்னம்பலம் : காங்கிரஸின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுபவருமான ராகுல் காந்தி நேற்று (டிசம்பர் 29) வெளிநாட்டுக்கு பயணம் செய்திருப்பது காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வருகிற மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் நாட்டின் முக்கிய சட்டமன்றத் தேர்தல்களான உத்திரப்பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா ஆகியவை வரும் நிலையில் ராகுல் காந்தி நேற்று தனது தாய் சோனியா காந்தியின் பிறந்த நாடான இத்தாலிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

உத்திரப்பிரதேசத்தில் கடந்த மூன்று நாட்களாக தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா மற்றும் தேர்தல் ஆணையர்கள் உத்திரப்பிரதேசத்தில் ஆய்வு செய்தனர். அனைத்துக் கட்சிப் பிரமுகர்களையும் சந்தித்தனர். அதன் பின், “உரிய நேரத்தில் உபி சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படும்” என்று தலைமை தேர்தல் ஆணையர் இன்று (டிசம்பர் 30) லக்னோவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதன்படி ஜனவரி முதல் வாரத்தில் உபி சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தகைய அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நேரத்தில் ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் வெளிநாட்டுப் பயணம் அதிலும்... பாஜக சோனியாவை தொடர்ந்து இத்தாலி நாட்டவர் என்று விமரிசித்து வரும் நிலையில் இத்தாலி நாட்டுக்கு பயணம் மேற்கொண்டிருப்பது காங்கிரசாரை கவலையில் ஆழ்த்தியுள்ளது. உபி உள்ளிட்ட மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும்போது ராகுல் காந்தி இந்தியாவில் இருப்பாரா என்பது கேள்விக்குறியாகியிருக்கிறது.

மேலும்,ராகுலின் இந்த இத்தாலிப் பயணத்தால் அவர் பஞ்சாப் மாநிலத்தில் கலந்துகொள்ள இருந்த அரசியல் பொதுக்கூட்டம் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. ராகுல் காந்தி இந்த ஆண்டு சுமார் 25 நாட்கள் வெளிநாட்டில் தங்கியிருந்துள்ளார். நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடருக்கு முன்னதாக, ராகுல் லண்டனுக்கு ஒரு குறுகிய பயணத்தில் இருந்தார். ஆனால் நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்கு ஒரு நாள் முன்பு திரும்பி வந்தார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் 138 ஆவது நிறுவன தினம் கொண்டாடப்பட்டு நாடு முழுதும் பிரச்சாரத்தை முடுக்கிவிட வேண்டிய நிலையில், அதற்கு அடுத்த நாளே ராகுல் வெளிநாடு செல்வது காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவும் சமூக தளங்களில், ‘ராகுல் தன் சொந்த ஊருக்குப் போயிருக்கிறார்’ என்ற பிரச்சாரத்தை வேகவேமகாக முன்னெடுத்துள்ளது.

இதுகுறித்து பதிலளித்த காங்கிரஸ் ஊடகத் துறைத் தலைவர் ரந்தீப் சுர்ஜேவாலா, “ராகுல் காந்தி தனது தனிப்பட்ட பயணத்தில் இருக்கிறார். பாஜகவும், அதன் ஊடக நண்பர்களும் தேவையில்லாமல் வதந்திகளை பரப்ப வேண்டாம்” என்று கூறியிருக்கிறார்.

-வேந்தன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக