திங்கள், 6 டிசம்பர், 2021

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

மின்னம்பலம் : முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான மறைந்த ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளில் மெரினா அதிமுகவின் மூன்று பிரிவுகளால் அமர்க்களமானது.
நேற்று டிசம்பர் 5ஆம் தேதி, ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளில் மரியாதை செலுத்தக் காலை 10.30 மணிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ், முன்னாள் அமைச்சர்கள் எம்.எல்.ஏ,கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர், அதில் ஒபிஎஸ் ஆதரவாளர்கள் வெள்ளை கலர் சட்டையிலும், இபிஎஸ் ஆதரவாளர்கள் கருப்பு கலர் சட்டையிலும் அடையாளம் காணப்பட்டார்கள்.


டிடிவி தினகரன் அடையார் வீட்டிலிருந்து 25 கார்களுடன் ராயப்பேட்டை அமமுக அலுவலகத்தை நோக்கிச் சென்றார், அப்போது சிவாஜி மணிமண்டபம் அடுத்த சிக்கனலில் லெப்ட் திரும்பினார், அந்த நேரத்தில் முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஐந்து கார்களுடன் கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டிலிருந்து வெளியில் வந்தவர் ரைட்டில் திரும்பியபோது, எதிரில் அமமுக கொடிகளுடன் தினகரனுடன் வந்த கார்கள் சாலையை அடைத்தபடி வந்தபோது, இபிஎஸ் சென்ற வாகனமும் அவர் பின்னால் வந்த வாகனமும் சற்று ஓரம் கட்டினார்கள்.

ஒபிஎஸ் இபிஎஸ் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் எம்.எல்.ஏ,கள் கட்சி நிர்வாகிகள் ஜெயலலிதா சமாதிக்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்திவிட்டு வெளியில் வரும்போது, அமமுக தொண்டர்களும், சசிகலாவுக்குக் காத்திருந்த அதிமுக தொண்டர்களும் இபிஎஸ் ஒபிஎஸ், ஜெயக்குமாருக்கு எதிராகக் கோஷமிட்டு வழிவிடாமல் தடுத்தனர், அப்போது பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாரும், இபிஎஸ்வுடன் வந்த போலீஸார்களின் கடுமையான முயற்சியால் வாகனங்களை நகர்த்தியபோது கூட்டத்திலிருந்து ஐந்தாறு ஒத்த செருப்புகள் பறந்துவந்தன, அதில் ஒன்று கேபி முனுசாமி காரின் முன் கண்ணாடியில் விழுந்ததும் அதை ஒருவர் எடுத்து கீழே போட்டார். எடப்பாடி காரை நோக்கியும் செருப்புகள் பறந்திருக்கின்றன. கூட்டத்தில் பெரும்பலனோர் அதிமுக கொடியுடன் இருந்ததால் கட்சி தொண்டர்கள் என்று அலட்சியமாக இருந்துவிட்டனர் அதிமுகவினர்.

11.30 மணிக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வந்தார், அதிமுகவினர் உறுதிமொழி எடுத்துக்கொண்ட அதே மேடையில் அதிமுக பேனரை நீக்கிவிட்டு அமமுக பேனரை வைத்து உறுதிமொழி எடுத்துக்கொண்டு சென்றார்.

இதன் பின்னால் ஒரு சுவாரஸ்யம் உள்ளது. ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக போலீஸார் அதிமுகவினரையும், அமமுகவினரையும் அழைத்து தனித் தனியாக பேசினார்கள். அப்போது இருவரும் தங்களது சார்பில் வளாகத்துக்குள் தனித்தனியாக மேடை அமைக்க அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் பொதுப்பணித்துறை சார்பில் தனித்தனி மேடை அமைக்க இட வசதி இல்லை என்று போலீஸிடம் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதை இரு தரப்பினருடம் கூறிய போலீஸார், ‘ஒரு மேடைதான் அமைக்க முடியும். உங்களுக்குள்ள அட்ஜெஸ்மென்ட் பண்ணிட்டு போங்க, இல்லேன்னா மேடையே வேணாம்’என்று சொல்லிவிட்டனர். இதையடுத்து அதிமுகவினரும், அமமுகவினரும் பேசி, ‘ஒரே மேடையில் அடுத்தடுத்து நிகழ்ச்சியை வச்சிக்கலாம்’ என்று முடிவெடுத்தனர். அதற்கும், ‘நாங்கள்தான் பணம் கொடுப்போம்’ என்று அதிமுக, அமமுக இரு தரப்பினரும் அடம் பிடித்தனர். போலீஸ் பேசி இருவரும் பாதி பாதி பணம் போடுங்கள் என்று கூறி அனுப்பி வைத்தனர். அதன்படியே மேடை அமைக்க அதிமுக 20 ஆயிரம் ரூபாய், அமமுக 20 ஆயிரம் ரூபாய் என பங்களிப்பு செய்தனர். சவுண்ட் சர்வீஸ் தனித்தனியாக வைத்துக் கொண்டனர்.

எம்ஜிஆர் நினைவிடத்திலிருந்து ஜெயலலிதா நினைவிடம் செல்லும் வழியில் காமராஜர் சாலையை நோக்கி மேடை அமைக்கப்பட்டது. அதில் முதலில் பன்னீர், எடப்பாடி ஆகியோர் ஏறி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டதுமே உடனடியாக அதிமுகவினர் தங்களது வாக்குறுதியை மதித்து மேடை விரிப்பையும், தங்கள் பேனரையும் கழற்றி எடுத்துக்கொண்டனர். தாங்கள் வைத்திருந்த 14 ஸ்பீக்கர்களையும் அகற்றினர். அடுத்த சில நிமிடங்களில் மேடை அமமுகவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் தங்களது மேடை விரிப்பை விரித்து புதிய பேனரை மேலே கட்டினர். அமமுக கொடிகளும் கட்டப்பட்டன. இதே மேடையில்தான் டிடிவி தினகரன் ஏறி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

நம்மிடம் பேசிய தொண்டர்கள், “இது மாதிரி ஒரு மேடை அட்ஜெஸ்மென்ட் அதிமுகவுக்கும் அமமுகவுக்கும் இடையில இதுவரைக்கும் நடந்ததில்லை. அம்மாவோட நினைவிடத்துக்குள்ள இந்த சம்பவம் அவங்க நினைவு நாள்ல நடந்திருக்கு. அதிமுகவினர் எல்லாரும் ஒரே மேடையில இருக்கணும்னு அம்மா நினைக்கிறாங்க. அதைத்தான் தன்னோட ஏரியாவுல அம்மாவே நடத்தி வச்சிருக்காங்க” என்று சென்டிமென்ட்டாக இதைப் பார்ர்க்கிறார்கள்.

12.30 மணிக்குமேல் சசிகலா வருகைத் தந்தபோது, அமமுக கொடியை கையில் வைத்திருந்த சிலர், அதிமுக கொடியைத் தூக்கிப் பிடித்தனர்.

நேற்று டிசம்பர் 5ஆம் தேதி, காலையில் வெளியான மின்னம்பலம்.காம் தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிகையில், சசிகலா-தினகரன் சந்திப்பு:பேசப்பட்டது என்ன? என்ற தலைப்பில் எழுதியிருந்தோம்.

நாம் குறிப்பிட்டதுபோலவே, தினகரன் வரும்போது அமமுக கொடியை வைத்திருந்தவர்கள் பலர் சசிகலா வரும்போது அதிமுக கொடியை மாற்றி பிடித்திருந்தனர்.

சசிகலா, ஜெயலலிதா சமாதிக்கு வரும்போது, சமாதி அருகில் அதிமுக அமைத்திருந்த மேடையில் அமமுக பேனர் இருந்ததைப் பார்த்தபடி நடந்தார், அதிமுக கொடியைவிட அமமுக கொடிகள் அதிகளவில் இருப்பதைப் பார்த்த சசிகலா கொடியை இறக்கிட உத்தரவிட்டார். அதன்படியே அனைவரும் கொடியை இறக்கிவிட்டார்கள்.

ஜெயலலிதா சமாதிக்கு மலர் அஞ்சலி செலுத்தியதும், உறுதிமொழி எடுக்க அருகில் உள்ள மேடைக்குப் போகலாம் என்றதும், வேண்டாம் இங்கேயே உறுதிமொழி எடுத்துக்கொள்ளலாம் என்று உறுதிமொழி எடுத்துவிட்டு வீட்டுக்கு சென்றார் சசிகலா.

எப்படியோ அதிமுக, அமமுகவுக்கு வந்த கூட்டத்தைவிட சசிகலாவுக்கு மூன்று மடங்கு கூட்டம் அதிகம் என்கிறார்கள் காவல்துறையினர்.

-வணங்காமுடி வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக