வெள்ளி, 31 டிசம்பர், 2021

தமிழ்நாட்டில் ஊரடங்கு! : முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

 மின்னம்பலம் : கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.
கடந்த டிசம்பர் 15ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்றுடன் நிறைவடைகிறது. இந்தச் சூழலில் சமீப நாட்களாகத் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதோடு, ஓமிக்ரான் பரவலும் வேகமெடுத்துள்ளது.
தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத் ,ஹரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஒமிக்ரான் பரவல் காரணமாக இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசும் உள்ளூர் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்று அனுமதி வழங்கியுள்ளது.

ஒமிக்ரான் பரவல் காரணமாக மீண்டும் கல்லூரிகள், பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளை நடைமுறைப்படுத்துமாறு பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர்.

இந்த நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஊரடங்கு தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளார். இதில் பள்ளி, கல்லூரிகளில் மீண்டும் ஆன்லைன் வகுப்புகளை நடைமுறைப்படுத்தலாமா அல்லது சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தலாமா, இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாமா, சென்னையில் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அங்கு கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கலாமா என ஆலோசனை நடத்தி அறிவிக்கப்படவுள்ளது.

அதுபோன்று புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் பொது இடங்களில் மக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்வது உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

-பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக