வியாழன், 23 டிசம்பர், 2021

மீண்டும் வரும் ‘மஞ்சள் பை! பிளாஸ்டிக் குப்பைக்கு டாட்டா

பிளாஸ்டிக் குப்பைக்கு டாட்டா - மீண்டும் வரும் ‘மஞ்சள் பை’

மின்னம்பலம் : அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தும் முக்கிய சூழல் ஆபத்தாக பிளாஸ்டிக் எனப்படும் நெகிழி குப்பைகள் மாறியுள்ள நிலையில், தமிழக அரசு ’மீண்டும் மஞ்சள் பை’ என்கிற பிரச்சாரத்தைத் தொடங்குகிறது.
முதலமைச்சர் ஸ்டாலின் இன்று இத்திட்டத்தைத் தொடங்கிவைக்கிறார்.
அடிப்படை வடிகால் கட்டமைப்பு இல்லாத இந்தியா போன்ற நாடுகளில் மழைக்காலங்களில் ஊர் முழுவதும் வெள்ளம் தேங்கிநிற்பதற்கு, பிளாஸ்டிக் குப்பைகளும் முதன்மையான காரணமாக இருக்கின்றன. பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள், பொட்டலங்கட்டும் காகிதங்கள் போன்றவையே இதில் அதிக அளவில் பாதகமாக இருக்கின்றன.
வடிகால்களை அடைத்துக்கொண்டு வெள்ள நீர் வடியாமல் தடுப்பதில் இவை கணிசமான பங்கு வகிக்கின்றன இந்த வடகிழக்குப் பருவமழையின்போது தமிழ்நாட்டின் பல இடங்களிலும் கேரளத்திலும் வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகளை ஊடகங்களில் பார்த்திருப்போம். குப்பை கூளம் என்று சொல்வது மாறி, குப்பைக் கோளம்போல இந்த நெகிழிக் குப்பைகள் ஆங்காங்கே பெருமளவில் திரண்டு தேங்கியிருந்தது இன்னும் கண்ணில் மறையாத காட்சியாக இருக்கிறது.

படம்: நன்றி - டைம்ஸ் ஆஃப் இந்தியா

வீட்டில், தெருவில், சாலைகளில் என வீசப்படும் பிளாஸ்டிக் குப்பைகள் கடைசியில் ஒன்றுசேர்ந்து கடலில் திரள்கின்றன. ஒட்டுமொத்த பூமியிலும் இப்படித் திரளும் பிளாஸ்டிக் குப்பைகளால் மிகப் பெரிய அளவுக்கு சுற்றுச்சூழல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கடலில் கலக்கும் பிளாஸ்டிக் குப்பைகள், நிலத்தைப் போலவே மக்காமல் இருப்பது ஒருபுறம் என்றால், மீன்கள் முதலிய கடல் உயிரினங்கள் இவற்றை உண்ணவும் செய்கின்றன. கடலுணவுகளை உண்ணும் மனிதர்களுக்கு நீண்டகாலமான, நிரந்தரமான பாதிப்புகளையும் இவை ஏற்படுத்துகின்றன.

ஓசியானா எனும் கடல் சூழலியல் அமைப்பு அண்மையில் வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த ஆண்டில் அமேசான் இணையவர்த்தக நிறுவனம் மட்டும் உற்பத்திசெய்த பிளாஸ்டிக் பை வகையறா 106.6 கோடி கி.கி.. அதாவது, 67 நிமிடங்களுக்கு ஒரு முறை ஒரு சரக்கு வண்டி அளவுக்கு பிளாஸ்டிக் குப்பைகளைக் கடலில் கொட்டுவதற்கு சமமானது.

அமேசான் கடந்த ஆண்டு பயன்படுத்திய நெகிழிக் குப்பைகளின் அளவு, 2019ஆம் ஆண்டில் அது பயன்படுத்தியதைவிட 29 சதவீதம் கூடுதல் என்கிறது ஓசியானா அறிக்கை.

இந்தப் பிரச்னையைத் தடுக்கும்வகையில், தமிழ்நாட்டில் 2019 ஜனவரி முதல் தேதியிலிருந்து 14 வகை பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. விழிப்பூட்டல், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், பழையபடி தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் தலைகாட்டியபடிதான் இருக்கின்றன.

இந்த நிலையில், அவரவராக உணர்ந்துகொள்ளும் வகையில், துணிப்பைகளைப் பயன்படுத்துவதற்கான இயக்கத்தை அரசு தொடங்குகிறது.

முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை இதைத் தொடங்கிவைக்கிறார்.

பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக, வாழை இலை / பாக்குமர இலை, அலுமினியத்தாள், காகித சுருள், தாமரை இலை, கண்ணாடி / உலோகத்தால் ஆன குவளைகள், மூங்கில்/ மரம் / மண்பொருட்கள், காகித உறிஞ்சு குழாய்கள், துணி / காகிதம் / சணல் பைகள், காகித / துணி கொடிகள், பீங்கான் பாத்திரங்கள், உண்ணக்கூடிய தேக்கரண்டிகள் ஆகியவற்றைப் பயன்படுத்துமாறு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

-முருகு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக