திங்கள், 20 டிசம்பர், 2021

தேர்தல் சீர்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது ! மோடி அரசின் அடுத்த நாசகார திட்டம்!

கலைஞர் செய்திகள் -Prem Kumar  வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைப்பது உள்ளிட்டவற்றுக்கு அனுமதியளிக்கும் தேர்தல் சீர்திருத்த மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டது.
மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு கடந்த ஆட்சியின்போது நிறைவேற்ற முடியாமல் போன திட்டங்கள் அனைத்தையும் தனக்கிருக்கும் பெரும்பான்மை பலத்தினால் இந்த ஆட்சியில் படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. பா.ஜ.க அரசு கொண்டு வரும் திட்டங்கள் யாவும் கார்ப்பரேட் நலன் சார்ந்ததாகவும் ஆர்.எஸ்.எஸ்ஸின் இந்துத்வா சித்தாந்தங்களின் அடிப்படையிலும் இருந்து வருகிறது.
அதன்படி, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதும், குடியுரிமை சட்டம் மூலம் மக்களை பிளவுபடுத்தும் வேலைகளையும் செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது மாணவர்களின் நலனை பாதிக்கும் வகையில், வர்ணாசிரம கொள்கையின்படி புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்துள்ளது.

இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைப்பது உள்ளிட்டவற்றுக்கு அனுமதிக்கு வகையில் கொண்டு வரப்பட்ட தேர்தல் சீர்திருத்த மசோதாவை மக்களவையில் மோடி அரசு நிறைவேறியது.
“எதிர்ப்பை மீறி மக்களவையில் நிறைவேறியது தேர்தல் சீர்திருத்த மசோதா” : மோடி அரசின் அடுத்த நாசகார திட்டம்!

இந்தியாவில் வாக்காளர் அடையாள அட்டையில் மாற்றம் கொண்டுவதற்குத் தேர்தல் ஆணையம் முடிவு செய்திருந்தது. அதற்கு ஏற்றார்போல், குடிமக்களின் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்து, முறைகேடுகளை களைய நடவடிக்கை எடுக்கும் வகையில் தேர்தல் சீர்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.

மோடி அரசாங்கம் அமைச்சரவையில் இந்த மசோதாவை தாக்கல் செய்யப்பட்டபோதே தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இதுதொடர்பாக எந்த வித கருத்துக் கேட்போம் அவகாசமோ எதுவும் வழங்காமல் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே தேர்தல் சீர்திருத்த மசோதாவை மக்களவையில் ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார்.

தேர்தல் திருத்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்ப எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து முழுக்கங்களை எழுப்பினர். பின்னர் எதிர்க்கட்சிகளின் தொடர் முழுக்கத்தால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைப்பது உள்ளிட்டவற்றுக்கு அனுமதியளிக்கும் தேர்தல் சீர்திருத்த மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக