சனி, 4 டிசம்பர், 2021

ஆஸ்ட்ராசெனீகா கொரோனா தடுப்பூசி: அரிய ரத்தம் உறைதலுக்கு காரணம் கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

  ஜேம்ஸ் கலேகர்  -      சுகாதாரம் மற்றும் அறிவியல் செய்தியாளர்  : ஆஸ்ட்ராசெனீகா மற்றும் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மிக அரிதாக ஏற்படும் ரத்தம் உறைதல் பிரச்னையை தூண்டும் காரணி குறித்து கண்டறிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கார்டிஃப் மற்றும் அமெரிக்காவில் உள்ள ஆய்வுக் குழு தடுப்பு மருந்தின் முக்கிய கூற்றில் ரத்தத்தில் உள்ள புரதம் எவ்வாறு ஒட்டிக் கொள்கிறது என்பதை நேர்த்தியாக விளக்கியுள்ளனர்.
இது நோய் எதிர்ப்பு அமைப்பை உள்ளடக்கிய ஒரு தொடர் வினைக்கு வித்திடுகிறது அதுவே ஆபத்தான ரத்தம் உறைதலுக்கு காரணம் என அவர்கள் எண்ணுகின்றனர்.
இந்த தடுப்பு மருந்து பல லட்சம் மக்களின் உயிரை கொரோனாவிலிருந்து காப்பாற்றி உள்ளது.


இருப்பினும் அரிதாக ஏற்படும் ரத்தம் உறைதல் பிரச்னை காரணமாக இந்த தடுப்பு மருந்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதில் மாற்றங்கள் ஏற்பட்டன.
அதேபோன்று அறிவியல்பூர்வமாக என்ன நடக்கிறது என்றும் அதை தடுக்க முடியுமா என்றும் தேடுதல் பணிகள் துவங்கின.

கார்டிஃபில் உள்ள குழுவிற்கு இந்த பணியில் ஈடுபட அவசர அரசு நிதி வழங்கப்பட்டது.

இந்த ஆய்வில் ஆஸ்ட்ராசெனீகாவை சேர்ந்த விஞ்ஞானிகளும் கலந்து கொண்டனர்.

ஆஸ்ட்ராசெனீகாவின் செய்தி தொடர்பாளர் இந்த ரத்தம் கட்டுதல் பிரச்னை தடுப்பு மருந்தை காட்டிலும் கொரோனா தொற்றால் ஏற்படுகிறது என்றும், இது எதனால் ஏற்படுகிறது என்று முழுமையான விவரம் கண்டறியப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

"இந்த ஆய்வு இறுதியானது இல்லை என்றாலும், இந்த ஆய்வு பல சுவாரஸ்யமான தகவல்களை தருகிறது. இந்த அரிதான பக்க விளைவை ஒழிக்கும் ஒரு பகுதியாக ஆஸ்ட்ராசெனீகா இந்த ஆய்வு முடிவுகளை பயன்படுத்திக் கொள்ளும்" என அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆராயும் ஆராய்ச்சியாளர்களுக்கு முதன்மையாக இரு தகவல்கள் கிடைத்துள்ளன

•சில தடுப்பு தொழில்நுட்பங்களில்தான் இந்த ரத்தம் உறைதல் ஆபத்து அதிகம் இருக்கிறது.

•இம்மாதிரியான பிரச்னை உள்ளவர்களிடம் ஓர் அரிய எதிர்ப்பான் (ஆன்டிபாடி) இருக்கும் அது ரத்தத்தில் உள்ள ப்ளேட்லட் ஃபேக்டர் ஃபோர் என்ற புரதத்தை தாக்கும்.

பிரிட்டனில் பயன்படுத்தப்பட்ட தடுப்பு மருந்துகள் கொரோனா வைரசின் மரபணு குறியீட்டின் துணுக்கை உடலில் செலுத்தி நோய் எதிர்ப்பு அமைப்பை பயிற்றுவிக்கின்றன.

ஆஸ்ட்ராசெனீகா தடுப்பு மருந்து அடினோவைரஸை பயன்படுத்துகிறது. ஆதாவது சிம்பன்சி விலங்குகளில் காணப்படும் பொதுவான சளி வைரஸை இது பயன்படுத்துகிறது. அதுவே உடலுக்குள் செலுத்தப்படும்.

இந்த அடினோவைரஸ்கள், ரத்தம் உறைதலுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் எண்ணுகின்றனர்.

எனவே அந்த அடினோவைரஸை மூலக்கூறு நிலையில் புகைப்படம் எடுக்க அவர்கள் க்ரியோ எலட்ரான் மைக்ரோஸ்கோபி என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர்.

சயின்ஸ் அட்வான்ஸஸ் என்ற சஞ்சிகையில் வெளியான ஆய்வில், அடினோ வைரஸின் வெளிப்புற பகுதி ப்ளேட்லெட் பாக்டர் ஃபோர் புரதத்தை காந்தம் போல இழுக்கிறது.

கார்டிஃப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான பேராசிரியர் அலன் பார்கர், "அடினோவைரஸின் மேல் பரப்பு நெகடிவ்வாக உள்ளது. ப்ளேட்லட் ஃபோர் பாசிட்டிவாக உள்ளது எனவே இரண்டும் ஒட்டிக் கொள்கின்றன" என்று தெரிவித்தார்.

மேலும் "இதுதொடர்பாக எங்களிடம் ஆதாரம் உள்ளது. ஆனால் இது தூண்டுகோல் மட்டுமே. இதற்கு அடுத்து மேலும் பல நடைமுறைகள் உள்ளன," என்கிறார் அவர்.

இதற்கு அடுத்த கட்டம் "தவறான நோய் எதிர்ப்பு அமைப்பு" என ஆராய்ச்சியாளார்கள் நம்புகின்றனர் ஆனால் அதற்கான போதிய ஆதாரங்கள் இல்லை.

நமது உடல் அடினோ வைரஸ் என தவறாக நினைத்து கொண்டு அதனோடு இணைந்துள்ள ப்ளேட்லட் ஃபாக்டர் ஃபோரை குழப்பத்தில் தாக்குகிறது என்று எண்ணப்படுகிறது.

எனவே ரத்தத்தில் ஆன்டிபாடிகள் வெளியிடப்படுகின்றன. அது ப்ளேட்லட் பாக்டர் ஃபோருடன் இணைந்து ஆபத்தான ரத்தம் உறைதலை ஏற்படுத்துகிறது.

இருப்பினும் இது அடுத்தடுத்து அதிர்ஷ்டமற்ற நிகழ்வுகளால் நடைபெறுகிறது. அதுவே இந்த அரிதான ரத்த உறைதல் ஏன் ஏற்படுகிறது என்பதை விளக்கும்.

பிரிட்டனில் தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட ஐந்து கோடி பேரில் 73 பேரின் மரணம் ரத்த உறைதலான, தடுப்பூசியால் தூண்டப்பட்ட இம்யூன் த்ரோம்போடிக் த்ரோம்போசைடோபினியாவுடன் தொடர்புடையாதாக உள்ளது.

"இது நடந்ததை உங்களால் கணித்திருக்க முடியாது. இதற்கான வாய்ப்பும் மிக மிக குறைவு. அதேநேரம் இந்த தடுப்பு மருந்து எத்தனை உயிர்களை காப்பாற்றியுள்ளது என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும், " என பேராசிரியர் பார்கர் தெரிவிக்கிறார்.

பல லட்சம் உயிர்களை தடுப்பு மருந்து காப்பாற்றியுள்ளதாகவும், 50 மில்லியன் பேருக்கு கொரோனா வராமல் தடுத்திருப்பதாகவும் ஆஸ்ட்ராசெனீகா தெரிவித்துள்ளது.
YouTube பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்பு எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

இந்த ஆய்வு குறித்து ஆக்ஸ்போர்ட் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

பர்மிங்காம் தேசிய சுகாதார சேவை அறக்கட்டளையின் பல்கலைக்கழக மருத்துவமனைகளை சேர்ந்த ரத்தம் தொடர்பான நோய்கள் குறித்த நிபுணர் மருத்துவர் வில் லெஸ்டர், இந்த விரிவான ஆய்வை பாராட்டியுள்ளார். மேலும் இந்த ரத்தம் உறைதல் பிரச்னையின் ஆரம்ப கட்டத்தை விளக்குகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இன்னும் பல கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை. ஏன் ஒரு சிலருக்கு மட்டுமே பாதிக்கப்படும் ஆபத்து அதிகமாகவுள்ளது? இந்த ரத்தம் உறைதல் பிரச்னை மூளை மற்றும் கல்லீரலில் உள்ள நரம்புகளில் ஏன் அதிகமாக தோன்றுகிறது போன்ற கேள்விகள்தான் அவை.

அடினோவைரஸை பயன்படுத்தும் தடுப்பு மருந்தை மேம்படுத்த இந்த ஆய்வு பயன்படும் என கார்டிஃப் குழு நம்புகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக