ஞாயிறு, 19 டிசம்பர், 2021

இலங்கை தமிழர் பகுதிகளில் சீன தூதர் மக்கள் அமோக வரவேற்பு

இலங்கையின்  தமிழர் பகுதிகளில் சீன தூதர்:  இந்தியாவுக்கான எச்சரிக்கை!

மின்னம்பலம் :  2009இல் விடுதலைப் புலிகளுடனான இலங்கை அரசின் இறுதிக்கட்ட போரில் இலங்கை அரசு இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ராணுவ உதவியை நாடியது. போரில் ஜெயித்தவுடன் இந்தியாவைவிட சீனாவோடு பல விதங்களில் உறவை வளர்த்தது இலங்கை. இந்த நிலையில் கொழும்பு, தென்னிலங்கையிலேயே தனது பார்வையைப் பதித்திருந்த சீனா தற்போது முதன்முறையாக தமிழர்கள் வாழும் வட மாகாணத்தின் பக்கம் தனது பார்வையைத் திருப்பியுள்ளது

இலங்கைக்கான சீனாவின் தூதர் கி சென்ஹாங் (Qi Zhenhong) கடந்த 15, 16, 17 தேதிகளில் இலங்கையின் தமிழர் பகுதியான யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட மாகாணத்துக்குப் பயணம் சென்றார். அங்கே அவரது நடவடிக்கைகளும் அவர் வெளியிட்ட கருத்துகளும் இந்தியா எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்பதை உணர்த்தி வருகின்றன.

15ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் மிக பிரசித்தி பெற்ற முருகன் கோயிலாக நல்லூர் கந்தசாமி கோயிலுக்கு வேட்டி அணிந்து சென்றார் சீன தூதர் கி சென்ஹாங். கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பிராமண பூசாரிகளும் அவருக்கு தமிழ், இந்து முறைப்படி வாழ்த்து தெரிவித்தனர். அதுமட்டுமல்ல... தமிழர்களின் ஞானத் தலைநகரம் என்று அழைக்கப்படக் கூடிய யாழ்ப்பாணம் பொது நூலகத்துக்குச் சென்ற சீன தூதர் அந்த நூலகத்துக்கு நூல்களையும் லேப் டாப்புகளையும் பரிசளித்தார்.

அதுமட்டுமல்லாமல் வட மாகாணத்தின் தற்போதைய ஆளுநரான ஜீவன் தியாகராஜாவையும் சந்தித்துப் பேசினார். அப்போது, “இலங்கையில் இருக்கும் தமிழர்களின் நிலையை உயர்த்த சீனா எல்லா ஒத்துழைப்பையும் வழங்கும். சீனாவுக்கும் வடக்கு மாகாணத்துக்குமான உறவைப் பலப்படுத்த வேண்டும்” என்று கூறினார். ஆளுநர் ஜீவன் தியாகராஜா, ‘வட மாகாணத்தில் சீன நிறுவனங்கள் நிறைய வந்து முதலீடு செய்ய வேண்டும்’ என்று சீன தூதரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார். வட மாகாண ஆளுநர் அலுவலகத்தின் வேண்டுகோளின்படி ஐந்து நடமாடும் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்களை வழங்கியிருக்கிறார் சீன தூதர். மேலும் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மீனவர்களுக்கு சீன அதிகாரிகள் இலவச மீன்பிடி உபகரணங்களை வழங்கியிருக்கிறார்கள்.

16 ஆம் தேதி காலை சீன தூதர் கி சென்ஹாங் இலங்கையின் மீன்வள அமைச்சரான டக்ளஸ் தேவானந்தாவோடு சென்று யாழ்ப்பாணத்தில் இருக்கும் கடல் அட்டை பண்ணையைப் பார்வையிட்டார். அங்கே சீனாவின் முதலீட்டால் ஏற்பட்டிருக்கும் வேலை வாய்ப்புகள் குறித்து சீன தூதருக்கு விளக்கப்பட்டது. அதன்பின் தொடவெல்லியில் சீன முதலீட்டில் உருவாக்கப்பட்ட கடல் உணவு தொழிற்சாலையிலும் ஆய்வு செய்திருக்கிறார்கள்.

இந்த வடக்கு மாகாணப் பயணத்தின் மிக முக்கியமான அம்சமாகப் பார்க்கப்படுவது டிசம்பர்

17ஆம்தேதி சீன தூதர் கி சென்ஹாங், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ராமர் பாலத்தைப் பார்வையிட்டதுதான்.

மூன்று நாட்களாக வட மாகாணத்தின் பல்வேறு இடங்களுக்குச் சென்று பார்வையிட்ட இலங்கைக்கான சீன தூதுவர் மன்னார் – தாழ்வுபாடு கடற்படை முகாமுக்கு டிசம்பர் 17ஆம் தேதி முற்பகல் சென்றார். இலங்கை கடற்படை மற்றும் இலங்கை ராணுவத்தின் பலத்த பாதுகாப்போடு அங்கே சென்ற சீன தூதரோடு பல சீனத் தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி காஓ பின், சீன தூதரகத்தின் தலைமை அரசியல் அதிகாரி லூவோ சொங் உள்ளிட்ட சீன அதிகாரிகளும் சென்றிருந்தனர். அங்கிருந்து சீன தூதரக அதிகாரிகளோடு இலங்கைக் கடற்படையின் படகுகளில் ஏறி ஒரு மணி நேரப் பயணத்துக்குப் பின் ராமர் பாலத்தைச் சென்றடைந்தார் கி சென்ஹாங்.

அங்கே சுமார் இருபது நிமிடங்கள் சுற்றிப் பார்த்தனர் சீன அதிகாரிகள். சீன அதிகாரிகளுக்கு இந்த பயணமும், இந்த இடமும் மிகவும் புதியது. ஏனென்றால் தலைமன்னாரில் இருந்து இந்தியாவின் தனுஷ்கோடி வரை 32 கிலோமீட்டருக்குள் உள்ள 16 மணல் திட்டுகளைக் கொண்ட பகுதிதான் ராமர் பாலம் என அழைக்கப்படுகிறது. இந்த 16 திட்டுகளில் 8 மணல் திட்டு இலங்கையிடமும், 8 மணல் திட்டுகள் இந்தியாவிடமும் இப்போது இருக்கின்றன. சீன தூதர் உள்ளிட்ட முக்கிய சீன அதிகாரிகள் இலங்கையின் வசம் உள்ள ராமர் பால மணல் திட்டுகளில் நின்றுகொண்டு ஆய்வு செய்திருக்கின்றனர். அப்போது சீன தூதர், ‘இங்கிருந்து இந்தியா எவ்வளவு தூரம்?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு இலங்கை அதிகாரிகள், ‘உத்தேசமாக 32 கிலோமீட்டர்ஸ்’ என்று பதிலளித்திருக்கின்றனர் என்று இலங்கை ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

அதுமட்டுமல்ல... ராமர் பால மணல் திட்டுகளைப் பார்வையிட்டுவிட்டு மன்னார் – தாழ்வுபாடு பகுதியிலுள்ள கடற்படை முகாமிற்கு திரும்பிய சீனத் தூதுவரிடம் இந்த பயணம் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோது, “இதுவே முடிவு மாத்திரமல்ல. ஆனால், ஆரம்பமும்கூட” எனப் பதிலளித்திருக்கிறார் இலங்கைக்கான சீன தூதர் கி சென்ஹாங். சீன தூதுவரின் இந்தப் பதில் இந்தியாவால் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

அண்மையில் இலங்கையின் வட பகுதியான தமிழர் பகுதியில் சீனா நிறுவிய மின்சாரத் திட்டத்தை இந்தியாவின் அழுத்தத்தின் பேரில் இலங்கை அரசு ரத்து செய்தது. அதை இந்தியத் தொழிலதிபர் அதானிக்கு அளித்திருக்கிறது இலங்கை அரசு. சில வாரங்களுக்கு முன் இலங்கையின் கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து டெல்லிக்கு வந்து நமது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்தார் இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷே. அதையடுத்து தொழிலதிபர் கௌதம் அதானை இலங்கைக்குப் பயணம் சென்றார். அதையடுத்த சில தினங்களில்... இலங்கையின் வடக்கு மாகாணத்துக்கு சமீப ஆண்டுகளில் முதன்முறையாக பயணம் செய்த சீன தூதர், இந்தியாவின் தென் எல்லையில் இருந்து வெறும் 32 கிலோமீட்டர் தூரத்தில் நின்று சென்றிருக்கிறார்.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை ஆய்வு செய்ததற்கான முக்கியமான நாளாக டிசம்பர் 17 அமைந்திருக்கிறது. அதேநாளில்தான் இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே... இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சரான பெரிஸ்சை சந்தித்துப் பேசியிருக்கிறார்.

டிசம்பர் 18ஆம் தேதி மாலை இலங்கைக்கான சீன தூதரகம் சீன தூதரின் 15, 16, 17 தேதிகளில் வடகிழக்கு பயணம் பற்றி மூன்று பக்க அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

“சீன தூதருக்கு அன்பான வரவேற்பை அளித்த வட கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம், மீன்வளத் துறை, பாதுகாப்புத் துறை உள்ளிட்ட அனைத்து அரசுத் துறைகளுக்கும் நன்றி. இலங்கை சீன தூதரக உறவுகள் தொடங்கி 65ஆவது ஆண்டு நடக்கும் நிலையில் சீன தூதர் நெஞ்சார்ந்த நன்றிகளை வட கிழக்கு மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறார்” என்று குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த மூன்று பக்க அறிக்கையில் சீன தூதரின் ராமர் பால விசிட் பற்றிய தகவல்கள் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

-ஆரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக