வியாழன், 2 டிசம்பர், 2021

போயஸ் கார்டன் வேதா இல்லம்: அதிமுக மேல்முறையீடு!

 மின்னம்பலம் : வேதா இல்லத்தை அரசுடைமையாக்கியது செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கேட்டு அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை அரசுடைமையாக்கிக் கடந்த ஜனவரி மாதம் அதிமுக அரசு திறந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதா அண்ணன் வாரிசுகளான தீபா மற்றும் தீபக் தொடர்ந்த வழக்கில் கடந்த நவம்பர் 24ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
வேதா இல்லத்தை அரசுடைமையாக்கியது செல்லாது என்றும் வீட்டுச் சாவியை மாவட்ட ஆட்சியர் மனுதாரர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிபதி சேஷசாயி உத்தரவிட்டார்.


இதைத்தொடர்ந்து தீபா சார்பில், வீட்டுச் சாவியைக் கேட்டு சென்னை ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இதற்கு ஆட்சியர் தரப்பில், அரசிடம் உரிய ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிலளிக்கப்பட்டது.

இந்நிலையில் வேதா இல்லம் குறித்து அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் ஆலோசித்து மேல்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 29ஆம் தேதி தெரிவித்திருந்தார்.

அதன்படி இன்று, அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த சூழலில், வேதா இல்லத்தை அரசுடைமையாக்கியது செல்லாது என்று அறிவிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை உறுப்பினரும். அதிமுக வழிகாட்டு குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி சண்முகம் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவுடன் உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும் மேல்முறையீட்டு மனுவும் இணைக்கப்பட்டுள்ளது.

அந்த மனுக்களில், வேதா இல்லத்தை அரசுடைமையாக்கப்பட்டது ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மேல் முறையீடு செய்ய மாநில அரசு அக்கறை காட்டாததால் அறக்கட்டளை உறுப்பினர் என்ற முறையில் மேல்முறையீடு செய்வதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில், “புகழ் பெற்ற தலைவர்களின் இல்லங்களை நினைவு இல்லங்களாக மாற்றுவது புதிதல்ல. உலக தலைவர்கள் பலரின் இல்லங்கள் நினைவு இல்லங்களாக மாற்றப்பட்டுள்ளது.

நினைவில்லமாக மாற்றுவது அரசு பணத்தை வீணடிக்கும் செயல் என்பன போன்ற தனி நீதிபதியின் கருத்துக்கள் தேவையற்றவை. இந்த தீர்ப்பு அதிமுக தொண்டர்களைப் புண்படுத்தியுள்ளது.

நீதிமன்ற உத்தரவுப்படி வேதா இல்ல சாவியை ஒப்படைத்துவிட்டால் அது கட்சிக்குப் பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும். வேதா இல்லத்தை கையகப்படுத்தும் முன் தீபா தீபக்கிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது. அரசு தன்னிச்சையாகச் செயல்பட்டதாக எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் கையகப்படுத்தியதை ரத்து செய்த உத்தரவு தவறானது.

எனவே, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

-பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக