சனி, 25 டிசம்பர், 2021

மாரிதாஸ் விடுதலை நீதிமன்றத்துக்கு ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!

 மின்னம்பலம்:   மாரிதாஸ் மீதான வழக்குகளை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
யு ட்யூபர் மாரிதாஸ் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை மதுரை உயர் நீதிமன்றம் அடுத்தடுத்து ரத்து செய்தது. குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து பற்றி மாரிதாஸ் இட்ட ட்விட்டர் பதிவுக்கு எதிரான வழக்கையும், கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவலுக்கு தப்லிக் ஜமாத் மாநாடுதான் காரணம் என்று அவர் வெளியிட்ட வீடியோவுக்கு எதிரான வழக்கையும் அண்மையில் மதுரை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருந்தது.


இந்த நிலையில், தந்தை பெரியாரின் 48 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (24.12.2021) சென்னை சிம்சன் அருகிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை வைத்து மரியாதை செலுத்திய பின் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், “அவதூறுகளைக் கூறி, பெண் செய்தியாளர்களையும் மற்றவர்களையும் கொச்சைப்படுத்திப் பேசியவர்களையெல்லாம், உயர்நீதிமன்றத்திற்கே வழக்கு சென்றுள்ள போதும், ஆர்.எஸ்.எஸ்.சில் இருந்த பழைய அனுபவத்தை, அந்த சிந்தனையை மாற்றாமல் பல நீதிபதிகள் திடீரென்று, அவர்களையெல்லாம் சட்டப் பிடியிலிருந்து விடுவித்து - விடுதலை செய்கிறோம் அல்லது வழக்கை செல்லுபடியற்றதாக்குகிறோம் என்று சொல்லக்கூடிய ஒரு நிலை இருக்கிறது. இது சமூகநீதிக்கு, பாலியல் நீதிக்கு, அரசு செய்யக்கூடிய மிகப்பெரிய சட்ட ரீதியான செயலைத் தடுக்கின்ற, கெடுக்கின்ற ஒரு பெரிய திட்டமிட்ட செயலாகும். இதை வன்மையாக திராவிடர் கழகம் கண்டிக்கிறது.

நீதிமன்றத்திலே இப்படி பழைய நினைப்போடு, நீதிக்கு விரோதமாக, மிகப்பெரிய அளவிற்கு, அவதூறுகளை சமூக வலைதளங்களில் அள்ளி அள்ளிவீசிக்கொண்டு இருக்கக்கூடியவர்கள்மீது நடவடிக்கை எடுத்தால், சட்டப்படி அவர்களை விடுவிப்பதற்கு அவதூறுக்காரர்களின் இன்னொரு கிளை அமைப்பு போல் நீதிமன்றங்களை ஆக்கி, நீதிபதிகள் நடந்துகொண்டிருப்பதை வன்மையாக திராவிடர் கழகம் கண்டிக்கிறது.

கண்டிப்பதோடு மட்டுமல்ல, இந்தப் போக்கு நீடிக்குமேயானால், நாங்கள் அதுபற்றி ஆழமாகச் சிந்தித்து, நீதிமன்றத்தில் நெறிகெட்டு வளைந்ததை நிமிர்த்து வைப்பதற்கு என்ன செய்யவேண்டுமோ அதை முறையாக அறிவார்ந்த செய்யவேண்டிய முயற்சியில் ஈடுபடுவோம்”என்று கூறியிருக்கிறார் கி.வீரமணி.

-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக