வியாழன், 2 டிசம்பர், 2021

பன்னாட்டு விமானப் பயணங்களை இந்தியா தொடங்குவதில் தாமதம்

 தினமலர் :  புதுடில்லி: ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக, டிச.,15ம் தேதி சர்வதேச விமான போக்குவரத்து சேவை துவங்குவது என்ற முடிவை மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம்(டிஜிசிஏ) ஒத்தி வைத்தது. மீண்டும் துவங்குவது குறித்த முடிவு பின்னர் அறிவிக்கப்படும்.
கோவிட் பரவல் காரணமாக இந்தியாவில், கடந்த 2020ம் ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சர்வதேச விமான போக்குவரத்து, வரும் டிச.,15ம் தேதி முதல் துவங்கும் என டிஜிசிஏ அறிவித்தது. இந்நிலையில், தென் ஆப்ரிக்காவில் உருமாறிய கோவிட் பரவல் கண்டுபிடிக்கப்பட்டது. 'ஒமைக்ரான்' என பெயரிடப்பட்ட இந்த வைரஸ், அச்சுறுத்தல் மிக்கது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருந்தது. 

பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ளதால், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் சர்வதேச விமான போக்குவரத்திற்கு தடை விதித்திருந்தது. அதேபோல், இந்தியாவும் தடை விதிக்க வேண்டும் எனவும், டிச.,15ம் தேதி துவங்க இருந்த சர்வதேச விமான போக்குவரத்தை ஒத்தி வைக்க வேண்டும் எனவும் பலரும் மத்திய அரசை வலியுறுத்தினர். இந்நிலையில், சர்வதேச விமான போக்குவரத்தை ஒத்தி வைத்து, டிஜிசிஏ வெளியிட்ட அறிக்கையில், ஒமைக்ரான் வைரஸ் காரணமாக உலகளவில் ஏற்பட்டுள்ள சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, அனைத்து துறையினருடன் ஆலோசனை அடிப்படையில் நிலைமை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். சர்வதேச விமான போக்குவரத்தை மீண்டும் எப்போது துவங்கும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக