சனி, 25 டிசம்பர், 2021

மீண்டும் வேளாண் சட்டங்கள்..? மத்திய அமைச்சர் தோமர் பேச்சு ...

 மாலைமலர் : பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய சீர்திருத்தமான வேளாண் சட்டங்கள் சிலருக்குப் பிடிக்கவில்லை என நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.
நாக்பூர்:  மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்கள், விவசாயிகளின் தொடர் போராட்டங்கள் காரணமாக திரும்ப பெறப்பட்டது.  வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அடுத்தாண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேச தேர்தலைக் கருத்தில் கொண்டே மத்திய பாஜக அரசு இந்த முடிவை எடுத்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தனர்.
இந்நிலையில் வேளாண் சட்டங்கள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படலாம் என மத்திய வேளாண் துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் சூசகமாக தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் போராட்டம்

மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய தோமர், “வேளாண் திருத்தச் சட்டங்களை நாங்கள் கொண்டு வந்தோம். ஆனால், சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய சீர்திருத்தமான இந்தச் சட்டங்கள் சிலருக்குப் பிடிக்கவில்லை. அதற்காக அரசுக்கு ஏமாற்றம் அளிக்கவில்லை. இப்போது ஒரு படி பின்வாங்கியிருக்கிறோம். விவசாயிகள் இந்தியாவின் முதுகெலும்பு என்பதால், மீண்டும் முன்னேறுவோம்.” என்றார்.

பாராளுமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய மந்திரி பேசியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக